அயோத்தி இராமர் கோயில் விவகாரம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதபடி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இக்கோயில் இம்மாதம் 22 ஆம் திகதி திறக்கப்படவிருக்கிறது. கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
அதேபோல், இராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், இராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி 22 ஆம் திகதி அதேநேரத்தில், அந்த நாளில்தான் தங்களுக்குப் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அன்றைய தினம் தங்களுக்குப் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் கீழ் உள்ள தாய் சேய் மருத்துவமனை மருத்துவர்களிடம் பல கர்ப்பிணிப் பெண்கள் ஜனவரி 22 ஆம் திகதி ‘ சிசேரியன்’ மூலம் பிரசவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு மட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளுக்கும் இது போன்ற கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அன்றைய தினம் கூர்ம துவாதசி. மிருகசீரிடம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 11 மணி 51 நிமிடம் முதல் 12 மணி 33 நிமிடம் வரை உள்ள நல்ல நேரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இது அபிஜித் முகூர்த்த நேரமாகும். ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, ஜோதிட ரீதியாகவும், வானியல் சாஸ்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு மிகக்கவனமாக இராமர் கோவில் திறப்புவிழாவிற்கான நாளும், முகூர்த்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளன.
புராணங்களின்படி சிவபெருமான் திரிபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்தது அபிஜித் முகூர்த்தத்தில்தான் எனச் சொல்லப்படுகிறது. அதனால் இது அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய நேரம் என்பது இந்துக்களின் நம்பிக்ைகயாகும்.
இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அரசியல் பிரமுகர்களுக்கும் பா.ஜ.கவினர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதியன்று நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திறப்புவிழாவுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அயோத்தி வழக்கு விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டமை தொடர்பாக இக்பால் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இராமர் கோயிலில் இராமர் சிலை நிறுவப்பட உள்ளமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்து,- முஸ்லிம்,- சீக்கியர்,- கிறிஸ்தவ சமூகங்களின் நல்லிணக்கத்திற்கான இடம் அயோத்தி. இது அப்படியே தொடர வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மதிப்புக் கொடுத்தனர். எங்குமே போராட்டம் நடைபெறவில்லை. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். நானும் மகிழ்ச்சியில் உள்ளேன்” என்றார்.
அயோத்தி இராமர் கோயில் எதிர்வரும் 22 ஆம் திகதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளார்.
இது ஒருபுறமிருக்க, அயோத்தியில் இராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்நகரை சுற்றுலா நகரமாக மட்டுமல்லாது, மிகப்பெரிய வணிக நகரமாகவும் மாற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டிருக்கிறது.
இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 இலட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்கேற்ப அயோத்தியின் உட்கட்டமைப்புகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அயோத்திக்கு ரூபா 15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.மொத்தமாக 875 சதுர கி.மீ பரப்பளவில் இந்த வளர்ச்சிப் பணிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
அயோத்திக்கான தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்கிய கட்டடக் கலைஞரும் நகர்ப்புறத் திட்டமிடுபவருமான திக்ஷு குக்ரேஜா, 21 ஆம் நூற்றாண்டில் உலகத் தரம் வாய்ந்த நகரங்களில் இருக்க வேண்டிய அனைத்து நவீன வசதிகளும் அயோத்தி கட்டமைப்பில் முன்மொழியப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஜனவரி 22 ஆம் திகதி அயோத்தியில் ஸ்ரீ ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, இந்தியா முழுவதும் சாவடி மட்டத்தில் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் நியூேயார்க் நகரத்தில் உள்ள சின்னமான டைம்ஸ் சதுக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பகவான் இராமரின் பக்தர்கள் அனைவருக்கும் உரையாற்றவிருக்கிறார்.
இதற்கிடையில், சாவடி மட்டத்தில் ஸ்ரீராமர் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்பவதற்கு பெரிய திரைகளை அமைக்குமாறு ஆளும் பா.ஜ.க தனது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எஸ்.சாரங்கன்