Home » சந்தேகம்
(பொங்கல் சிறுகதை)

சந்தேகம்

by Damith Pushpika
January 14, 2024 6:11 am 0 comment

ஞ்சனிக்கு இரண்டு தினங்களாக மனதில் புயலைக் கிளப்பி விட்டிருந்தது. எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மனம் தவித்தது. தன் கணவன் விக்கியிடம் கேட்டு குடும்ப உறவில் தேவையற்ற கீறலை ஏற்படுத்தவும் ரஞ்சினி விரும்பவில்லை. பேசாமல் அதை அதன் போக்கில் விடவும் அவள் மனது இடம் கொடுக்கவில்லை. அவள் கணவன் விக்கியுடன் வழமை போல் சகஜமாக பழகினாலும் அவளது உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.

விக்கியும் ரஞ்சனியும் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரிகள். மாவட்டத்தின் இரு வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவானவர்கள். இருவரும் பல்கலைக்கழகம் வந்த முதலாம் வருடத்திலேயே காதலர்களாகி விட்டனர். இவர்கள் காதலுக்கு பெற்றார் எதிர்ப்புக் காட்டாததால் காதல் வானில் சிறகு கட்டிப் பறந்தவர்கள். மூன்று வருட பொதுப்பட்டத்தோடு பல்கலைக்கழக வாழ்வுக்கு விடை கொடுத்து வெளிவந்த இவர்கள் விரைவாக அரச துறையிலும் இணைந்தனர்.

ரஞ்சினிக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதுவும் ஏ.எல் வரை உள்ள பக்கத்து ஊர் பாடசாலை . விக்கிக்கு அபிவிருத்தி அலுவலர் பதவி ரஞ்சினியின் பாடசாலையை அண்மித்து இருந்த பிரதேச செயலகத்தில். அவர்கள் மகிழ்வுக்கு சொல்லவா வேண்டும். அந்த காதலர்க்கு இரு வீட்டார் இணைந்து செய்து வைத்த திருமணம். அவர்களின் இரு மனம் இணைந்த காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக ஆணும், பெண்ணுமாக இரு குழந்தைகள். கடி மணம் புரிந்த காதல் தம்பதிகள் தாம்பத்திய வாழ்விலும் எந்தக் குறையும் இன்றி இனிக்கத்தான் வாழ்ந்தனர்.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு மீன் வாங்கப் போயிருந்தான் விக்கி. அவன் போனைக் கொண்டு போக மறந்து விட்டான். அவன் மற்தது போனது பிரச்சினை இல்லை. அடிக்கடி இவ்வாறு நடப்பதுதான். அன்று போனில் வந்த ‘குறுஞ்செய்தி’ தான் பிரச்சினையை கொண்டு வந்தது. விக்கியின் போனுக்கு ‘குறுஞ்செய்தி’ வர. அலாரம் ஒலி எழுப்பி விட்டு ஓய்ந்தது போன். தற்செயலாக ரஞ்சினி அதனைப் பார்த்து விட்டாள். அந்த குறுஞ்செய்தி இதுதான். “மறந்து போனாயா விக்கி அவசியம் நாம் சந்திக்க வேணும் — உமா” அவ்வளவே அந்த செய்தி. ஆடிப் போனாள் ரஞ்சினி.

“விக்கியுடனான தன் பல வருட காதல் வாழ்வில் அறிந்திராத ஒரு புதிய பெயர். இன்று வரை ‘உமா’ பற்றி விக்கியும் சொன்னதில்லை. யாராக இருக்க முடியும்”. குழப்பமாக இருந்தது, ரஞ்சினிக்கு. “சரி விக்கி வந்தவுடன் கேட்டால் யாரென்று சொல்லுவான்” மனதில் நினைத்துக் கொண்டாள். “நானாக அதைக் கேட்டால்.. சந்தேகிப்பதாக விக்கி நினைத்து விட்டால் என்ன செய்வது” மனதில் தோன்றிய மறு கணம் விக்கியிடம் கேட்பதை கை விட்டாள்.

கடற்கரை சென்ற விக்கி பாரை மீன் வாங்கி வந்திருந்தான். காலையில் போனில் வந்த ‘குறுஞ்செய்தி’ விக்கியை பார்த்ததும் ரஞ்சினியை உறுத்தியது. “விக்கி..”. “என்ன.. ரஞ்சினி சொல்லன்”. “உங்களது..” சொல்ல தொடங்கியவள் சற்று நிதானித்து விட்டு நிறுத்தினாள். “என்ன ரஞ்சினி..”. “ஒன்றுமில்ல.. உங்கட கழுவும் உடுப்புகளை எல்லாம் நீங்க சொன்னது போல ஊறப் போட்டிருக்கன்.. பாருங்கள்”. “சரி நான் அத பாக்கன்”. “இன்று நல்ல பாரை மீன் கிடைச்சிருக்கு என்னப்பா..”. ‘குறுஞ்செய்தி’ பற்றி அவள் எதுவும் கேட்காமல் விட்டாள். “அவனாகச் அதை சொல்லட்டும்” மனதில் நினைத்துக் கொண்டாள். “ரஞ்சினியிடம் திடீரென ஏதோ வித்தியாசம்” அவன் உள்ளுணர்வு சொல்லியது. ரஞ்சினியிடம் கண்ட தடுமாற்றத்தை விக்கி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வழமையான தனது வேலைகளில் கவனம் செலுத்தினான்.

அன்றும் வழமை போல் போனை நோண்டினான் விக்கி. காலையில் வந்திருந்த உமாவின் குறுஞ்செய்தி கண்டான். மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது. “உமாவோடு கதைத்தும் மிக நீண்ட காலமாச்சு” மனதில் ஒரு கணம் நினைத்தான். உமாவுடனான பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்தான். “விரைவில் சந்திப்பேன்” அவனும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். தன் மகள் காவியா அப்பா என்று அழைத்தபடி ஓடிவர அவளைத் அள்ளி அணைத்து தோளில் போட்டவன் அனைத்தையும் மறந்து போனான். அடுத்த நாள் பாடசாலை வந்த ரஞ்சினிக்கு நேற்றைய அந்த குறுஞ்செய்தி ஞாபகந்தான் அடிக்கடி வந்து போனது. அதனால் படிப்பிப்பதில் பெரிதாக ஈடுபாடும் இருக்கவில்லை. “நேற்றே விக்கியிடம் கேட்டு இதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் விக்கியும் இது பற்றி வாயே திறக்கவில்லையே. அப்படியானால் நான் சந்தேகிப்பது போல விக்கிக்கு விட்டுப் போன. உறவுதான் உமாவா. உமாவுடன் தொடர்பு இன்னும் இருக்குமா. பல வருடங்களாக காதலித்து கரம் பிடித்த எனக்கு இதுவரை இது தெரியாமல் போனது ஏன்” ரஞ்சினி மனதளவில் அவஸ்தைப்பட்டாள். அவளது மனதுக்குள் ஏதேதோ.. செய்தது.

பிறி பாட வேளை அது. ஓய்வு அறையில் இருந்தாள் ரஞ்சினி. “ரஞ்சினி என்ன யோசனை பலமாக இருக்கு” ரஞ்சினியின் நெருங்கிய நண்பி ‘பிரியா ரீச்சர்’ பக்கத்தில் வந்தமர்ந்தாள். “ஒன்றுமில்ல பிரியா..கொஞ்சம் தலைவலி அதுதான்”. “இல்லையே மனதில்தான் வலி போல தெரியுது. ஒரு நாளும் நீ தலைவலி என்று இருந்ததை நான் காணல்ல. அப்ப மன வலிதானே ரஞ்சினி. இப்ப சொல்லு என்னதான் பிரச்சினை. எதையும் என்னிடம் மறைக்க மாட்டாயே நீ. என்னால் முடிந்தால் நான் ஏதாவது செய்யலாம்”. “எனக்குத் தெரியாதா பிரியா உன்னைப்பற்றி”. “அப்ப சொல்லன் ரஞ்சினி”. “இது சொல்லக் கூடியதல்ல. அதுதான் பிரியா”. “சரி ரஞ்சினி.. ஆனால் யாரிடமாவது உன் மனச்சுமையை பகிர்ந்தால் மனப்பாரம் குறைந்து விடும். ஏன் விக்கியிடமாவது சொல்லிப் பார் ரஞ்சினி”. “அங்குதான் பிரியா பிரச்சினையே”. நீ சொல்வது எதுவும் புரியல்ல.. ரஞ்சினி”. “நீங்க இருவரும்தானே எப்போதும் விட்டுக் கொடுத்து வாழும் இனிய காதல் தம்பதிகள் உங்களுக்குமா பிரச்சினை”. “பிரச்சினை எதுவும் எங்களுக்குள் இன்னும் இல்ல பிரியா. ஆனா எனக்குத்தான் எதுவும் புரியாமல் இருக்கு”. எனக்கு கொஞ்சம் புரியும் படி சொல்லு ரஞ்சினி”. விக்கியின் மொபைலுக்கு உமாவிடம் இருந்து வந்த ‘குறுஞ் செய்தி’யை பிரியாவிடம் சொல்லி முடித்தாள் ரஞ்சினி. “ரஞ்சினி இவ்வளவும். நடந்திருக்கா. விக்கியுமா இப்படி இருக்கிறான். என்னால இதை நம்ப முடியல்ல. எல்லா ஆண்களும் இப்படித்தானா”. “எத நம்புற.. எதுவும் தெரியல்ல”. “ரஞ்சினி இதை விக்கியிடம் நேற்றே கேட்டு முடித்திருக்க வேணும். இத இவ்வாறு நீடிக்க விடுவது எனக்கு பிடிக்கல்ல”. “விடு பிரியா அத நான் பாக்கிறன்”. “நீ இத மனதில் போட்டு அமைதி இழந்து அவதிப்பட வேணாம். நான் போனில் விக்கியுடன் கதைக்கன்” பிரியாவும் ஒன்றாக படித்தவள். அதனால் விக்கியிடம் உரிமையோடு கதைக்க முன் வந்தாள். “பிரியா வேண்டாம். இதை நான் பார்க்கிறன். இதனால் இந்த சிறு பிரச்சினை பெரிதாய்ப் போய் விடும். எங்களிடம் இதுவரை எந்த ஒளிப்பும் மறைப்பும் இருந்ததில்லை பிரியா. ஆனாலும் இதனை ஏன்தான் விக்கி மறைக்கிறார். அதுதான் எனக்குள்ள ஒரேயொரு கேள்வி பிரியா”. “அப்போ உனக்கு விக்கி மேல் சந்தேகமா ரஞ்சனி”. “இல்லை இன்னும் எனக்கு குழப்பமாகத்தான் இருக்கு”. அடுத்த பாட வேளை மணி ஒலிக்க இருவரும் அவரவர் வகுப்புகளுக்கு போனார்கள். அன்று பாடசாலை விட்டுப் போகும் போது “எப்படியும் விக்கியிடம் கேட்டு விடவேண்டும்” என்ற முடிவோடுதான் ரஞ்சினி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

வழமை போன்று விக்கி அன்றும் அலுவலகத்திலிருந்து ஐந்து மணிக்கு வீடு வந்தான். ரஞ்சினி அவன் வருகையை எதிர்பார்த்து இருந்தாள். “எப்படியும் இன்று அந்த உமாவின் பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும்” முடிவே செய்திருந்தாள். விக்கி வந்த நேரம் அவளது தாயும் கூட இருக்கவே அந்த விடயத்தை பற்றி ரஞ்சினிக்கு கதைக்க முடியாமல் இருந்தது எனினும் ரஞ்சினியின் உள்ளம் குமுறிக் கொண்டுதான் இருந்தது.

விக்கிக்கு டீ போட்டு ஹோலுக்கு கொண்டு வரும் போது விக்கி ரீ.வி க்கு முன் அமர்ந்திருந்தான். ரஞ்சினி கொடுத்த டீ யை பருகினான். “ரஞ்சினி பாடசாலை தவணை விடுமுறைக்கு இன்னும் மூன்று நாள்தானே இருக்கு” .”ஓம்.. அதுக்கென்ன.. ” அவள் குரலில் சற்று விறைப்பு இருந்தது. “ஏன் ரஞ்சினி கதையே கொஞ்சம் காரமாக இருக்கு..” “என்ன, அப்படி இல்லையே”. “வழமையாக கதைப்பது போல தெரியல்ல எனக்கு. ஏதோ வித்தியாசம் தெரியுது”. “சரி சொல்ல வந்ததை நீங்க சொல்லுங்க” அவனுக்குள் ஏதோ உறுத்தியது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை. “பொங்கல் வருது புது உடுப்பு எடுக்க வேணும். கடைசி நேரத்தில் போனால் கடைகளில் கூட்டம் அதிகமிருக்கும். அதனால் ஸ்கூல் விடுமுறைக்கு அடுத்த நாள் ரவுணுக்கு போவோம் ரஞ்சனி”. “நான் வரல்ல ” வெடுக்கன வந்தது பதில். புரியாமல் குழம்பினான்” ஒரு நாளும் இப்படி ரஞ்சனி நடந்ததில்லையே ” விக்கி மனது கனத்தது. “அவள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பதுதான் சரியான வழி”. “அப்போ எப்ப போகலாம் ரஞ்சினி” “நீங்க போவதாக இருந்தால் போங்க” “எப்பவும் இப்படி பேச மாட்டாயே. ஏன் ரஞ்சனி இப்படி கதைக்கிறாய், ஏதும் பிரச்சினை என்றால் சொல்லு ரஞ்சினி நாம் இரண்டு பேரும் போகாமல் நான் மட்டுமா போவது. அப்படி, இதுகால வரை நடந்ததா சொல்லு”. “புரிந்தால் சரி”. “இப்பெல்லாம் நீ பொடி வைச்சு பேசுவது நல்லா இல்லையே. எனக்கு ஒரு மண்ணுமே புரியல்ல”. விக்கி எழுந்து பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடப் போனான்.

கடந்த சில நாட்களாக ரஞ்சினி மறக்கவும் முடியாமல் விக்கியிடம் கேட்கவும் முடியாமல் மனம் புளுங்கினாள். “கொஞ்சம் விட்டுப் பாப்பம் அவசரப்பட்டு உறவை கொச்சைப் படுத்துவது அழகல்ல” சிந்தனையில் இருந்து விடுபட்ட ரஞ்சனி தனது வழமையான காரியங்களில் ஈடுபட்டாள்.

“என்ன ரஞ்சினி இப்ப நீ மகிழ்வா இருப்பது போல தெரியுது. உன் சிக்கல் தீர்ந்து விட்டதா” பாட ஓய்வு வேளையில் சந்தித்துக் கொண்ட ரஞ்சினியின் தோழி பிரியா ரீச்சர் விசாரித்தாள். “எங்க, பிரியா, எதுவும் நடக்கல்ல”. “விக்கியிடம் அந்த உமாவை பற்றி கேட்டால் உன் சந்தேகம் போய் விடும்”. “நீ வேற பிரியா, நான் விக்கியிடம் கேட்கல்ல, எனக்கு கேட்கவும் தோணல்ல. விக்கி மேல் இருக்கும் எனது காதல் ஆழமானது. அது புனிதமானது. விக்கி உமா விசயத்தை அவராக சொல்லும் வரை அமைதி காப்பது என முடிவு செய்து விட்டன் பிரியா. விக்கி இன்று வரை எதையும் மறைத்ததும் இல்லை அதுதான்”. “சந்தேகம் என்பது புற்று நோய் போலகொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். அதை வளர விடக் கூடாது ரஞ்சினி”. “உண்மை எதுவென்று தெரியாது நான் மனதளவில் உடைந்து போய் இருக்கிறேன். அது உனக்கு மட்டும்தான் தெரியும்”. “ரஞ்சினி வீணான சந்தேகங்கள் பல குடும்பங்கள வீதியில கொண்டு விட்டிருக்கு. நீ ‘ஈகோ’ பாக்காம விக்கியிடம் மனம் விட்டு கதையன் அதுதான் நல்லது”. “எனக்கு ஈகோ எதுவுமில்ல பிரியா. எங்கட காதல், உனக்கு தெரியாதா? நான் இத போய் விக்கியிடம் கேட்டால் “என் மேல் உனக்கு சந்தேகமா” என்று விக்கி திருப்பி கேட்டுவிட்டால் அத என்னால தாங்க முடியாதே”. “அப்ப இதுக்கு என்னதான் வழி “. “பிரியா, இதை யாரிடமும் நீ போட்டு உடைத்து விடாத எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு”. “நான் இது பற்றி மூச்சு விட மாட்டன் ரஞ்சினி. சரி நான் பாடத்துக்கு போறன்”.

“பாடசாலைக்கு லீவும் விட்டாச்சு. நாளைக்கு எப்படியும் ரவுணுக்கு போக வேணும்” முடிவு செய்த விக்கி அலுவலகத்துக்கும் விடுமுறைக்கு அறிவித்து விட்டான். உமாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்திக்குப் பின் இரு தடவை மொபைல் மூலமும் கதைத்து விட்டான். “இன்று எப்படியும் உமாவை ரவுண் இல்லத்தில் சந்திக்க வேணும், போற கையோட பொங்கலுக்கு புது உடுப்புகளயும் வாங்கலாம்” திட்டமிட்டான், விக்கி. “இன்றைக்கு நீங்க லீவா விக்கி ‘ஒபீஸ்’ போகல்லையா”. ரஞ்சினி வழமை போலத்தான் கேட்டாள். “ஓம் நான் லீவுதான் போகல்ல ரஞ்சினி ஏன் கேக்கிறா”.”ஏன் என்னாச்சு உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா” “எனக்கு ஒண்ணுமில்ல நீ பதற வேணாம் ரஞ்சினி”. “இல்ல ஏதோ வித்தியாசமா இருக்கே அதுவும் லீவு போட்டு நிக்கிறிங்க அதுதான்”. “நான் அன்று சொன்னன்தானே. நீதான் அத மறந்து போனா. இன்னைக்கு நாம ரவுணுக்கு போறம் பொங்கலுக்கு உடுப்பு எடுக்க”. “நான்தான் சொன்னனே வரமாட்டன் என்று”. “சரி உனக்கு என்னாச்சு, அத விடு. இனி நான் பொங்கலப் பற்றி கதைக்க மாட்டன்”. முடிவாகச் சொல்லி விட்டான் விக்கி.”விக்கிக்கு கோபம் வந்திட்டு போல வேற வினையே வேணாம்”. அவள் மனம் சொன்னது. “சரி, சரி கோவத்த காட்ட வேணாம், நான் வாறன் வெளிக்கிடுங்க போவம்” கோவத்தக் வெளிக் காட்டாமல் குழைந்தாள் ரஞ்சினி. “ரஞ்சினி ரவுணுக்கு போறதோட எனக்கும் அங்க ஒரு அலுவல் கிடக்கு அதையும் பாக்க வேணும் போகும் போது சொல்றன் வெளிக்கிடு” .

“எப்ப இருந்தாலும் ரவுணுக்கு போக வேணும் பொங்கலுக்கும் புது உடுப்பு எடுக்கும் வேலையை முடித்தும் விடலாம்”. “இன்னும் என்ன ரஞ்சினி வெளிக்கிடன் உனக்கு என்னதான் பிரச்சினை நீ அதையாவது சொல்லன்..”. “எனக்கு எதுவுமில்லை, சரி வாறன், வாறன் இருங்க எதுக்கு சத்தம் போடுறீங்க”. அடுத்த சில நிமிடங்களில் ரஞ்சினி ஆயத்தமானாள். அவன் எதிரில் வந்து நின்றாள். இருவரும் உந்துருளியில் புறப்பட்டனர். “நாம் புது உடுப்புகள் எடுப்பது என்றால் இரண்டு மூன்று கடைகளாவது ஏறி இறங்கத்தான் வேணும். நல்லதாக ஒரு கடைக்கு மட்டும் போனால் தேவையானத எடுக்கலாம்”. “சரி றோட்டப் பார்த்து பைக்கை ஓட்டுங்க புறகு கதைக்கலாம் அங்க போய்க் கதைக்கலாம்”. “நான் பாத்து கவனமாகத்தான் போறன். நீதான் எல்லாத்துக்கும் எடுத்தெறிஞ்சு கதைக்கிறா “. கதையோடு கதையாக உந்துருளி ரவுணை அண்மித்தும் விட்டது.

விக்கிக்கு உமாவின் ஞாபகம் வந்தது. “முதலில் உமா வீட்டுக்குப் போனால் என்ன” யோசித்தான் விக்கி. “ரஞ்சினி. நான் சொல்ல மறந்து போனன்.. எனக்கு தெரிந்த உமாவின் வீட்டுக்கு முதலில் போவோம் புறகு நேரமிருக்காது”. அவள் இதை எதிர்பாக்கவில்லை எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளானாள் ரஞ்சினி. “என்ன சொல்ல வாறீங்க விக்கி நீங்க “. “ஓ.. உனக்கு சொல்லாமல் விட்டுத்தன்”. “ஆ..” வாயைப் பிளந்தாள் .அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ரஞ்சினி அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. இவ்வளவு நாளாக தன்னை வாட்டி எடுத்த பிரச்சினை அல்லவா அது. “என்ன உமாவின் வீட்டுக்கா”. “என்ன ரஞ்சினி உமாவை முன்னமே தெரியுமா ரஞ்சினி நானும் சொல்லவில்லை “.

“எனக்கு எப்படித் தெரியும். நீங்க இப்ப சொன்னதால் கேட்டேன்” சமாளித்தாள் ரஞ்சினி. “சரி ரவுணுக்குள் உமாவின் வீடு இருக்கு வா போவம்”. “உங்களுக்கு உமாவுடன் நல்ல பழக்கமா”. நான் ஏ.எல் படிக்கிற காலத்தில இருந்து நல்ல பழக்கம்தான். நீண்டகாலத் தொடர்பு விட்டுப் போயிருந்தது”. “அப்ப ஏன் எனக்கு சொல்லவேயில்ல”.

“நான் இப்பதானே சொன்னன் தொடர்பு விடட்டுப் போய் இருந்தது”. “ஓ, அப்படியா “அவளது மனதில் தீ பற்றி எரிந்தது. “பள்ளிக் காலத்து காதல் போலும்”. அவள் சந்தேகம் மனதில் உறுதியாக நங்கூரமிட்டது. “ரஞ்சினி, எனக்கு இப்பதானே போன் நம்பர் கிடைச்சது. எனக்கு அன்று ‘எஸ்.எம்.எஸ்’ வந்த புறகுதான் நான் போன் பண்ணிக் கதைத்தன்”. “ஓ. . போனில் கூட கதைச்சாச்சா நான்தான் எதுவும் தெரியாத முட்டாளாக இருந்திட்டன்”. ரஞ்சினியின் மனம் ஓலமிட்டது. ‘பொறுமை.. பொறுமை’ என அவள் மனம் எச்சரித்தது. “நீங்கதான் எதுவும் சொல்லவில்லையே விக்கி”. உனக்கு நான் எதை சொல்லாமல் விட்டன். இது என்ன பெரிய விசயமா. எனக்கு கூட சொல்ல ஞாபகம் வரல்ல”.

“கொஞ்சம் கூட விக்கி குற்ற உணர்வு கூட இல்லாமல் கதைக்கிறானே ஏன்”. ஆச்சரியமாக இருந்து அவளுக்கு. “உமாவின் வீடு வந்து விட்டது.” சொல்லிய படி தன் உந்துருளியை உரிமையோடு திறந்திருந்த இரும்பு கேற் ஊடாக உள்ளே விட்டான். ரஞ்சினிக்கு விக்கியின் பேச்சும் நடத்தையும் ஆச்சரியத்தையே கொடுத்தன. என்னிடம் இவர் இவ்வளவு சர்வசாதாரணமாக இந்த விடயத்தை கூறுகிறார். ரஞ்சினி மனதில் நினைத்து கலவரப்பட்டாள்.

வீட்டுக்கு வெளியில் எவரையும் காணவில்லை.”உமா, உமா..”சத்தமிட்டு விக்கி அழைத்தான். ரஞ்சினிக்கு எதுவும் புரியவில்லை உமாவின் அம்மாதான் குசினிப் பக்கமிருந்து வந்தாள். “தம்பி விக்கி வாங்க. எங்கள மறந்து போச்சா”. “அப்படி இல்லம்மா, உமா ‘யூக்கே’ போன பின்பு நானும் வரல்ல.. இவதான் என் ‘வைவ்”ரஞ்சனி. எங்கட உறவு எதுவும் ரஞ்சினிக்கு தெரியாது”. “இருங்க மகள், உமா வரட்டும்” வாசலில் கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய உமா வீட்டில் விக்கியும் ரஞ்சினியும் அம்மாவுடன் கதைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து “விக்கி ” வாஞ்சையுடன் அழைத்த படி வந்த உமாவை விக்கி அவர்கள் முன் கட்டி அணைத்து தழுவிக் கொண்டான். “ரஞ்சனி இவன்தான் உமாசங்கர். ‘உமா’என்று அழைத்துப் பழகிப் போனது எனக்கு”. ரஞ்சினி நிலை குலைந்து போனாள்.

“கடவுளே என்னை நீ காப்பாற்றி விட்டாயப்பா. என்னை மன்னித்து விடு விக்கி. உங்கள, நான் சந்தேகப்பட்டு விட்டனே”. மனதுக்குள் மன்றாடினாள். “விக்கியிடம் அமைதி காத்தது, நல்லதாக போய் விட்டது. நான் அவசரப்பட்டு சந்தேகத்தை கொட்டியிருந்தால் நம்பிக்கை அல்லவா உடைந்து போய் இருக்கும். குடும்ப வாழ்வில் பொறுமை, நிதானம், மிக முக்கியம்”. புரிந்தது அவளுக்கு.

“எங்கள் இனிய காதல் வாழ்வு சிதைந்து போகாமல், விக்கியை மட்டமாக நினைக்காமல் என்னைக் காப்பாற்றியது என் பொறுமைதான்” ஓராயிரம் எண்ணங்கள் ஒரு நொடியில் மனதுக்குள் வந்து போனது ரஞ்சினிக்கு. “ரஞ்சினி என்ன, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்”. “உண்மைதான்.. நான் திகைத்துத்தான் போனன் விக்கி. உங்களுக்குள் இவ்வளவு அன்பா” கேட்க நினைத்தாள். அவள் கேட்கவில்லை. “சொரி.. ரஞ்சனி உமா வெளியில போய் நீண்ட காலமாக ஒரு தொடர்பும் இல்லாமல் போனது. நானே மறந்து போனன். அதுதான் நான் சொல்லல்ல. உமாவை நேரில் வந்து சந்திப்பம் என்று இருந்து விட்டன்”. “சரி அதை விடுங்க “. “கண் மூடித்தனமாக நாம் சந்தேகிக்கிக்க கூடாது எதையும் மனம் விட்டுக் கதைத்தால் எந்தக் குழப்பமும் வரவே வராது. என் சந்தேகம் என்னை சாகடிக்கப் பாத்தது”. மனதில் தெளிவு பிறந்தது ரஞ்சினிக்கு. உமா வீட்டில் தடபுடலான அன்றைய மதிய உணவு அவர்களை மகிழ்வித்தது. “விக்கி இந்த பொதி உங்களுக்குத்தான் வைத்து இருக்கன். உங்களுக்கான புதிய ஆடைகள் இதில் இருக்கு. பிள்ளைகள் இருவருக்கும் அளவுகள் கூட சரியாக இருக்கும். கூடவே ‘சுவீட்ஸ்’ பார்சல் இதில் இருக்கு. மாமா தந்ததாக சொல்லு விக்கி” பொதியை வழங்கி விக்கியை வழியனுப்பி வைத்தான் உமாசங்கர். “அம்மா நீங்க இருவரும் தைப்பொங்கலுக்கு கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வரவேணும்”. மகிழ்வோடு ரஞ்சினியும் விக்கியும் அழைப்பு விடுத்தனர். “நீங்கள் அழைக்காவிட்டாலும் எங்கள் பொங்கல் கொண்டாட்டம் இந்த வருடம் உங்களது வீட்டில்தான்”. உமா சொல்லி மகிழ்ந்தான்.”சரி அம்மா, உமா, நாங்க வாறம்” மகிழ்வுடன் விக்கி தம்பதியர் விடை பெற்றனர்.” இனி எதுக்கு புடவைக் கடைக்கு நாம போகணும் வாங்க வீட்டுக்கே போவம்”. மகிழ்ச்சி மேலிட ரஞ்சினி விக்கியிடம் சொன்னாள்.” அப்பாடா, இப்பதான் நீ நீயாக இருக்கிறா ரஞ்சினி உனக்கு என்ன நடந்தது. எனக்குத்தான் எதுவும் புரியல்ல”. ரஞ்சினியின் சிரிப்பில் கரைந்து போனான் விக்கி.

விவேகானந்தம் வெல்லாவெளி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division