மலையகம் 200 விரிவான நிகழ்வுகளோடு, நீண்ட காலமாக பல்வேறு பற்றாக்குறைகள் மற்றும் பிரச்சினைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக பெருந்தோட்ட மக்கள் பக்கம் அரசாங்கத்தின் பார்வை திரும்பியுள்ளது. பாராளுமன்றத்திலும் வெளியிலும் மலையகப் பெருந்தோட்டப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனையுடன் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றமை பல்வேறு தளங்களிலும் இடம்பெற்று வருகிறது.
அதேவேளை, நாட்டின் ஜனாதிபதியொருவர் முதல் தடவையாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக செயல்படுவதுடன் அந்த விடயத்தில் நேரடியாகவே தலையிட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
தொழில் அமைச்சு, பெருந்தோட்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதுடன் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்மானத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தாலும் தற்போது அதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அத்துடன் ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டப்புறங்களில் உள்ள காணிகளை குத்தகைக்கு விடுவதற்கும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவதற்குமான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இத்தகைய பின்னணியிலேயே கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, அவர்கள் எதிர் நோக்கும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கான காணி வழங்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அதன் மூலமாக முன்வைக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அது தொடர்பான கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
அதன் போது விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய அது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் சபையில் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இதன் மூலம் வெளிப்படுகிறது.
இனி விவாதங்களை பார்ப்போம்…
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய:
மலையக பெருந்தோட்டப் பகுதியில் ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் காணிகளை குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவு வேலை வாய்ப்புகளும் உருவாகும். புதிய பெருந்தோட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்புடன் ஏற்றுமதி செய்யக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்காக 300 ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேர்மையான விதத்தில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவசாயக் காணியை குத்தகைக்கு விடுவதற்கான வசதிகளை வழங்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணிகளை இனம் காணுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கான அடிப்படை வரைபும் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் தற்போது அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. அவர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் நேரடி தலையீட்டுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் காணிகளை வழங்கி சுயமாக அவர்கள் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில தோட்டங்களில் பரீட்சார்த்த நடவடிக்கையாக ஒரு ஏக்கர் வீதம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலபொட, கெந்தல் ஓய, மவுன்ஜின், நாகஸ்தென்ன போன்ற தோட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாதாந்தம் அதிலிருந்து 6500 கிலோ தேயிலைக் கொழுந்து கிடைப்பதுடன் பல்வேறு பிரச்சினைகள் அங்கு நிலவிய போதும் பரீட்சார்த்த நடவடிக்கையாக தொடர்ந்தும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார்
வீழ்ச்சியடைந்துள்ள பெருந்தோட்டத்துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றியமைக்க வேண்டுமானால் பெருந்தோட்டங்களை சிறுதோட்டங்களாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பெருந்தோட்ட மக்கள் இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து எவ்வாறு இலங்கைக்கு வந்தார்களோ அவ்வாறே இன்றும் அடிமைகள் போன்று வாழ்ந்து வருகிறார்கள்.
லயன் அறைகளிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். அதனால் 200 வருடங்களாகியும் இந்திய வம்சாவளி மக்கள் கூலித் தொழிலாளிகளாகவும் அவர்களின் வாழ்விடம் லயன் அறைகளாகவுமே இருந்துவருகின்றன. அதில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.
அந்த மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் பெருந்தோட்ட தேயிலை கைத்தொழிலுக்கு பதிலாக தேயிலை சிறுதோட்ட முறைமையினை ஏற்படுத்தும் பிரேரணையை நான் சபையில் முன்வைத்திருக்கிறேன்.
அத்துடன் 1948 காலப்பகுதியில் நாட்டின் அந்நிய செலாவணியில் 90 வீதமானவை பெருந்தோட்ட கைத்தொழில் மூலமே பெறப்பட்டு வந்திருக்கிறது. அதேபோன்று அரசாங்கம் சம்பாதித்த மொத்த வருமானத்தில் நூற்றுக்கு 24வீதம் பெருந்தோட்டக் கைத்தொழில் மூலமே கிடைத்துள்ளது.
தனியார் துறையிலிருந்து அரசாங்கத்தால் 1972ஆம் ஆண்டின் சட்டத்தின் ஊடாக இந்த பெருந்தோட்டத்துறை பொறுப்பேற்கப்பட்டு 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது.
எனினும் ஜே.ஈ.டி,பி மற்றும் எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனங்கள் ஊடாக பெருந்தோட்டத்திறை 1.5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக 1992இல் இனம் காணப்பட்டிருந்தது. இற்றைக்கு 30 வருடங்களாக இந்த நிறுவனங்கள் நட்டமடைந்தே வருகின்றன. ஆனால் எந்தவொரு அரசாங்கமும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் தேயிலை உற்பத்தியில் நூற்றுக்கு 90வீத உற்பத்தி பெருந்தோட்ட துறையில் இருந்தே பெறப்பட்டது. இதில் 3லட்சத்து 89ஆயிரத்து 549 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் இருந்தார்கள். ஆனால் நூற்றுக்கு 90 வீத உற்பத்தியை பெற்றுக்கொடுத்துவந்த பெருந்தோட்டத் துறை தற்போது நூற்றுக்கு 22, 23வீத உற்பத்தியையே பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் இப்போதும் இந்த கம்பனிகளிடம் 40வீதமான காணிகள் இருந்து வருகின்றன. பெருந்தோட்டத்துறை முறை இன்று தோல்வியடைந்த முறையாக மாறி இருக்கிறது. அதேபோன்று ஜே.ஈ.டி,பி மற்றும் எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனங்கள் 20 வருடங்களாக நட்டமடைந்த நிறுவனங்களாக மாறியுள்ளன. அதனால் பெருந்தோட்டத்துறையையும் இந்த நிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை வேண்டும். அவ்வாறு செய்வதானால். பெருந்தோட்டங்களை சிறுதோட்டங்களாக மாற்ற வேண்டும். தற்காலத்தில் சிறுதோட்டத்துறையே வெற்றியடைந்த துறையாக இனம் காணப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச:
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எனது தந்தை ரணசிங்க பிரேமதாச பிரஜா வுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தது போன்று அந்த மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போது நடவடிக்கை எடுக்கும்.
தோட்டத் தொழிலாளர் சமூகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசியல்வாதிகளால் வாக்குறுதிகளில் அவர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
மலையக மக்கள் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர்களாக இருக்கவேண்டும் என நாம் நினைப்பதில்லை. மாறாக அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதைவிட அந்த மக்களை தொழில் முயற்சியாளர்களாக்க வேண்டும். எனது தந்தை மலைநாட்டு மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த அவர்களுக்கான காணி உரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்பி
பெருந்தோட்ட மக்களை வஞ்சிக்காது தோட்ட கம்பெனிகள் அவர்களுக்கான சம்பளத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் தோட்ட கம்பனிகளுடனான உடன்படிக்கையை இரத்து செய்து அரசாங்கம் தோட்டங்களை அரசுடமையாக்க வேண்டும். பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவுகள் சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் பெருந்தோட்ட மக்கள் கடந்த மூன்று வருட காலமாக 1000 ரூபா சம்பளத்திலேயே வாழ்க்கையை நடத்துகின்றார்கள். பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகாலமாக சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. பதுளை, நுவரெலியா, கண்டி, களுத்துறை, கேகாலை, மாத்தளை, இரத்தினபுரி, தெனியாய ஆகிய பெருந்தோட்ட பகுதிகளில் ஒருசில தோட்ட கம்பனிகள் நாட்டின் தொழில் சட்டத்தையும், மனித உரிமைகளையும் மீறி செயற்படுகின்றன.
இதற்கு எதிராக பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் தொழில் அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக மக்களை துன்புறுத்துவதை கம்பெனிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எமது மக்களின் சாபத்துக்கு ஆளாகாமல் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு வழங்க வேண்டும். நட்டமடைவதாக குறிப்பிடும் தோட்ட கம்பனிகள் வெளிநாடுகளில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றன. அது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.
எவ்வாறெனினும் காலங்காலமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் மலையக பெருந்தோட்டத்துறை மக்களுக்கு அதிலிருந்து விடிவு கிடைக்க வேண்டும். 1700 ரூபா சம்பள அதிகரிப்பு முன்னெடுப்புகள் வெற்றி பெற வேண்டும்.
நாட்டில் ஏனைய சமூகங்கள் போன்று சகல உரிமைகளையும் பெற்று அந்த சமூகத்தினர் இனியாவது வாழ வேண்டும். அதற்கு மலையக பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்துவிட்டு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.