ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை தனித்த யானையாக தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டை முன்னேற்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
பிரச்சினைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதா? பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கிச் செல்வதா? என்ற கேள்வியைக் கேட்டால், புத்தியுள்ள மனிதரெனில் தீர்வை நோக்கி செல்வதே சிறந்தது என்ற பதிலையே சொல்வார்கள்.
எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு கொளுந்துவிட்டெரிந்த போது யாரும் தீர்வுகளைத் தேட வில்லை. என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல வழியின்றி அரசியல் தலைவர்கள் தவித்தனர். அப்போது ரணில் விக்கிரமசிங்க துணிச்சலாக ஜனாதிபதி பதவியை ஏற்றார். நாட்டை வழிநடத்தினார். ஒவ்வொரு பிரச்சினையாக அலசி ஆராய்ந்து, தூர நோக்கு சிந்தனையுடன் முடிவுகளை எடுத்து தீர்வுகளைக் கண்டுவருகின்றார். இதற்கமைய குறுகிய காலப்பகுதிக்குள் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை வழங்கிவருகின்றார். நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடன் திட்டங்களை வகுத்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான இந்த பயணத்தில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஒரு தடவை அல்ல பல தடவைகள் இவ்வாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்ட வகையில் அந்த அழைப்பை எதிரணிகள் நிராகரித்துவருகின்றன.
தேர்தல் வருடம்!
இந்த வருடம் தேர்தல் வருடம். தேர்தல் சமரை சந்திக்க கட்சிகள் தயாராகிவருகின்றன. இதனால் அரசியல் களமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் வருடத்தின் முதல் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்தார். தேர்தல் வருடமென்பதால் இந்த பயணத்துக்கும் அரசியல் சாயம் பூசப்பட்டது. உண்மை அதுவல்ல. இது அரசியல் பயணம் அல்ல, அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பயணமாகும். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடரவிடக்கூடாது. அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னர், நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற தெளிவான செய்தியையே தனது வடக்கு பயணம் மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
‘ இவ்வருடத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை செய்ய வேண்டும். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், அதன் பின்னர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல் வருடம் என்றாலும் வடக்கு பயணத்தில் ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்தியை மையப்படுத்திய, கூட்டங்களையும், சந்திப்புக்களையும் அதிகமாக நடத்தியிருந்தார்.
பொதுவாக தெற்கில் இருந்து அரசியல் தலைவர்கள் வடக்குக்கு செல்லும்போது போரினால் ஏற்பட்ட பிரச்சினைகளை மட்டும் கதைத்துவிட்டு வருவார்கள்.
உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்து தற்போது 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் போரினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
யுத்தத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகளை இந்த இரண்டு வருடங்களில் முழுமையாக தீர்க்க வேண்டும். அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும் என்பதே ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடாகும்.
யாழ்ப்பாண விஜயத்தில் என்ன நடந்தது?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை ஜனாதிபதி நடத்தியிருந்தார். பின்னர் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை வவுனியாவில் நடத்தியிருந்தார்.
இதன்பின்னர் பூநகரி நகரை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்தார். அத்துடன் பூநகரி கோட்டையைப் பார்வையிட்டதுடன், பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் வன்னி மரமுந்திகை தொழிற்சாலைக்கும் சென்றிருந்தார்.
சர்வதேச ரீதியாக சாதனை செய்த கில்மிசா, அகிலநாயகி ஆகியோரையும் சந்தித்து கௌரவப்படுத்தினார். உற்சாகப்படுத்தினார். 72 வயதில் சர்வதேசத்தில் சாதனை செய்த அகில நாயகியை, வடக்கில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த ஆலோசனை வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.
அதேபோல், யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்திருந்தார். ஜனாதிபதியை சந்தித்த மாணவர்களை வடக்கிலுள்ள ஊடகங்கள் விமர்சித்திருந்தன. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முதல்தர பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அடுத்த இரண்டு வருடங்களில் யாழ். பல்கலைக்கழகத்தை முதல்தர பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
சுகாதாரத் துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்பினர், மீனவ, விவசாய சங்கப் பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் ஜனாதிபதி தனது விஜயத்தில் சந்தித்திருந்தார்.
சுகாதார துறையினர் முதல் மீனவச் சங்கங்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தற்போதிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதற்கான விளக்கங்களையும், தீர்வுகளையும் ஜனாதிபதி முன்வைத்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதற்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஜனாதிபதி தெளிவாக முன்வைத்தார்.
கட்டுப்படியான ரயில் பெட்டிகள்
நாட்டின் 50 வீதமான பொருளாதாரம் மேல் மாகாணத்தில் மட்டுமே பெருமளவில் தங்கியிருக்கிறது. ஏனைய 8 மாகாணங்களிலும் 40 வீதமான பொருளாதாரம் தங்கியிருக்கிறது. எனவே, இந்த ரயில் பெட்டிகளில் (மாகாணங்களில்) மேலும் நான்கு எஞ்ஜின்களைப் பொருத்தி, பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஐந்து என்ஜின்களுக்கு ஐந்து பெட்டிகள் என்ற வகையில் பொருளாதாரத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர் ஏனைய நான்கு பெட்டிகளுக்கும் இன்னும் இரண்டு பெட்டிகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் 2024ஆம் ஆண்டில் 2 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.
2025ஆம் ஆண்டு இதனை 5 வீத வளர்ச்சியாக மேம்படுத்த முடியும். இதனை தொடர்ந்து இயக்கினால் 2030ஆம் ஆண்டு 78 வீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இந்தப் பயணம் நீடித்தால் அடுத்த பத்து வருடங்களில் நாடு அதிவேக பொருளாதார வளர்ச்சியை எட்டும். இதுவே ஜனாதிபதியின் திட்டமாகும். இதனை தெளிவாக வடக்கில் பொதுமக்களுக்கு விளக்கினார் ஜனாதிபதி.
அதேநேரம் 2048ஆம் ஆண்டில் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கை ஜனாதிபதி கூறி வருகிறார். இலங்கை சுதந்திரமடைந்து 2048இல் நூறு ஆண்டுகள் பூர்த்தியாகும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் தற்போது இலங்கை பெற்றுள்ள சர்வதேச கடன்களை சலுகை அடிப்படையில் செலுத்தி முடிக்க இன்னும் 20 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரையில் செல்லும்.
எனவே அதுவரையில் கடன் செலுத்துவதையும் ஏனைய நிதிச் செயற்பாடுகளையும் முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
இந்த தூரநோக்குடனேயே ஜனாதிபதி அந்த இலக்கை வைத்துள்ளார். அதேபோல் அதற்கான ஆரம்ப புள்ளியை இட்டுவரும் ஜனாதிபதி, மறுமுனையில் எதிர்கால சந்ததியினர் எவ்வாறான இலக்குகளை கொண்டு நகர வேண்டும் என்ற விடயங்களையும் தனது பேச்சுக்களில் அதிகம் கூறி வருகிறார்.
வடக்கின் வளம்!
வடக்கில் காற்றாலை இருக்கிறது. இதனை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 10 வீதத்தை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர், மீதமுள்ளதை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும்.
இதன்மூலம் பாரியளவு வெளிநாட்டு வருமானத்தைப் பெற முடியும். இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால திட்டமாக இருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரத்தின் விலையும் வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அத்துடன், பூநகரி நகரை அபிவிருத்தி செய்து, வடக்கின் முக்கிய வர்த்தக மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் பொருளாதார கேந்திர நிலையமாக பூநகரி நகரை அபிவிருத்தி செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மன்னார் முதல் திருகோணமலை வரை தீவுகளை இணைத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை கல்வி கேந்திரமாக மாற்றி, வெளிநாட்டு மாணவர்களையும் உள்ளீர்ப்பதற்கான திட்டத்தை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.