Home » மட்டக்களப்பை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்

மட்டக்களப்பை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்

by Damith Pushpika
January 14, 2024 6:00 am 0 comment

வருடாந்தம் மாரிகாலம் வந்துவிட்டாலே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒருகணம் கதிகலங்கிப்போவார்கள். தாழ்நிலங்களில் வாழும் மக்களின் வீடுகள் அனைத்தும் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரமும், முற்றாகப் பாதிக்கப்படும் நிலமையே அங்கு காணப்படுகின்றது. ஆனாலும் வெள்ள அனர்த்தத்தை முறையாக கையாள்வதற்கும் அதற்கு ஈடுகொடுக்கும் சீரிய திட்டங்களும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இன்னும் வகுக்கப்படவில்லை என்பது சுற்றாடல் ஆர்வலர்களின் கருத்து. இதுபோன்றுதான் இவ்வருடமும் அம்மாவட்ட மக்கள் வெள்ள அனர்த்த நிலமையை எதிர்கொடுள்ளார்கள்.

மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பிரதானமான குளங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதுடன் அக்குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீரும் வான்பாய்ந்து வருவதோடு, சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வருடமும் வெள்ளநீர் கடலைச் சென்றடைவதற்கு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும் கிராமங்களில் முறையான வடிகான் வசதிகள் இன்மையால் இன்னும் வீதிகளிலும், மக்கள் குடியிருப்புக்களிலும், வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. இதனால் மக்கள் தொற்று நோய்களுக்குட்படுவதுவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இதன்போது அரசாங்க அதிபரினால் அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட்டன.

தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல், நாசிவன் தீவில் உள்ள உயர்தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்களுக்கு கடற்படையினரினால் படகு மூலம் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல், பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள ஆற்றில் சல்வீனியா (ஆற்று வாழை) நிறைந்து காணப்படுவதனால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவது, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வடிகான்களை துப்பரவு செய்து வெள்ள நீரை வடிந்தோடச் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்துவித நிவாரண உதவிகளையும் உடனுக்குடன் வழகுவது தொடர்பாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்டத்தின் 9 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்டதுடன், முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலை கணேசா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களை சேர்ந்த 255 பேரையும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களை சேர்ந்த 131 பேரையும் அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இடைந்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நலன்புரி நிலையங்களில் 353 குடும்பங்களைச் சேர்ந்த 954 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் மேலும் தெரிவித்துள்ளார். 10846 குடும்பங்களைச் சேர்ந்த 37845 பேர் தங்களின் வீடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவர்களுக்கு வேண்டிய நலன்புரி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு 3 நாட்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதனைவிட உலருணவுப் பொருட்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும், அரச உதவியுடனும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு படுக்கை விரிப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் கொழும்பு அனர்த்த நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அடைமழை காரணமாக மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் புலிபாய்ந்தகல், வாகரை, கல்லரிப்பு, சித்தாண்டி, பெருமாவெளி, நாசிவன்தீவு போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தற்காலிக படகுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் இயந்திர சேவைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை. அது பற்றிய முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், நாசிவன்தீவில் மாத்திரம் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கடற்படையின் உதவியுடன் படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.

5100 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகான் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நிதித் தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது. இதனை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டி உள்ளது. இவ்வாறான இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் கால்நடைகளும், வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள அனர்த்தத்தினால் 5100 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள கமநல சேவை திணைக்களத்திற்குச் சென்று பாதிப்புகளை பதிய வேண்டும். அப்போது தான் அவர்களுக்குரிய விவசாய காப்பறுதி நஷ்டஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் அவ்வப்போது சுழற்சியாக இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு, நாசவேலைகள் என்பனவற்றுக்காக நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம் நமது பணியாக இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் கலாசாரத்தையும், மக்கள் நிவாரணங்களைப் பெற முண்டியடிக்கும் கலாசாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

அழிவுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அவதானமாக இருந்து அந்த அழிவுகளை முன்னாயத்தமாக முறியடிக்கும் யுக்தித் திட்டமிடல் அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, தற்காப்பு போன்ற விடயங்களில் இன்னமும் மக்கள் முழுமையாக தயார்படுத்தப்படாத நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

காலாகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை இடர்களையும், அவ்வப்போது மனிதனால் உண்டாக்கப்படும் அழிவு வேலைகளையும் தடுக்கக் கூடிய திட்டமிடல் பொறிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

வ.சக்திவேல்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division