இந்திய அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த நடைப் பயணத்தில் மக்களை எளிதாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வாய்ப்பாக இருந்தது. மக்களிடம் ஒரு எழுச்சியும் ஏற்பட்டது. இந்தப் பயணத்தின் வெற்றியாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. இதேபோல விரைவில் வர இருக்கும் மக்களவை தேர்தலை முன்வைத்து, மீண்டும் இரண்டாவது நடைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். ஜனவரி 14 ஆம் திகதி இரண்டாம் கட்ட நடைப் பயணத்தை, மணிப்பூரிலிருந்து தொடங்குகிறார். நாட்டின் வடமேற்கில் இருந்து கிழக்காக 15 மாநிலங்கள் வழியாக 6.713 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நடைப்பயணத்திற்கு பாரத நீதிப் பயணம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. முதல் நடைப்பயணத்தைப் போல இரண்டாவது பயணத்துக்கு எந்தளவு பலன் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினரும் அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்தப்பயணம் வெற்றியடைந்தால் இந்திய அரசியலில் பெரிய மாற்றம் வரலாம், ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது போன்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது. தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிைணந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருப்பது பலம் என்றாலும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்படும் குழப்பங்களால் இந்தியா கூட்டணியின் வெற்றியை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்தே பல மாநிலங்களில் புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கருத்து முரண்பாடு இருந்தாலும்இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. தேர்தலில் எந்தெந்த கட்சியை முன்னிலைப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்து தொகுதிப் பங்கீடு செய்வது என்பதில் குழப்பமும் இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களிடைய கருத்து மோதல் எழுந்துள்ளது.மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு வழங்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி காங்கிரஸ் தலைவர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.
மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, திரிணமுல் காங்கிரஸிடம் தொகுதிகளை கேட்டு கையேந்தும் நிலையில் காங்கிரஸ் இல்லை. அவர்களின் நன்கொடை எங்களுக்குத் தேவையில்லை. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தீர்மானிக்க அவர்கள் யார்? தேவைப்பட்டால் மக்களவைத் தேர்தலில் தனித்துக்கூட போட்டியிடுவோம் என்று கொந்தளித்துள்ளார்.
அதீர் ரஞ்சன் சௌதரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திரிணமுல் காங்கிரஸின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் சௌகதராய் கூறியதாவது, திரிணமுல் குறித்தும் மம்தா பானர்ஜி குறித்தும் தவறாகப் பேசுபவர்களின் கூட்டணியில் தொடர்வது முறையல்ல. கூட்டணியில் தொடர வேண்டுமானால், அதீர் ரஞ்சன் சௌதரி மற்றும் மாநிலத்தில் உள்ள பிற காங்கிரஸ் தலைவர்களும் தவறான கருத்துகளை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் மேலிடம் இவர்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை முடக்க வேண்டும், தற்போது டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி தான் ஆட்சி நடத்தி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை நடத்துவார்கள் என்றுதான் மக்கள் ஆம்ஆத்மியை நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆளும்கட்சி இவர்கள் மீது ஊழல் புகார்களைக் கூறிவருகிறது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்தவிதமான எதிர்வினையும் இல்லை என்ற முணுமுணுப்பும் அரசியல் மட்டத்தில் இருக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறது. எனினும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் மீதும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் அண்மையில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல வெற்றிவாய்ப்பு கிடைத்திருக்கும். தனித்த அடையாளத்துடன் வெற்றிபெற வேண்டும் என்று காங்கிரஸ் அடம்பிடிப்பதிலிருந்து விலகி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பயணிப்பது தான் எதிர்காலத்துக்கு நல்லது.
ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு உலக அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகள் பயனுள்ளதாக இருப்பதாக பலரும் பேசத் தொடங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் அவதானிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா வலுவாக செயலாற்றி வருவதாக, சீனாவில் இருந்து வெளியாகும் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் பாராட்டியுள்ளது. இந்தியா, – சீனா இடையே எல்லைப் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்கள் தீர்க்கப்படாமல் இருந்த போதிலும், பொருளாதார ரீதியாக கடும் போட்டிகள் இருந்தாலும் சீனப் பத்திரிகை பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் முதற்கொண்டு பல்வேறு துறைகளில் வளர்ச்சிப்பாதையில் இந்தியா பயணிக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக மோடி தலைமையிலான அரசின் முக்கிய தலைவர்களின் செயல்பாடுகளும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக கருத்துக்கணிப்புகள் கூறி வருவது மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியே இந்தியாவில் அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதும் அவதானிக்கத் தக்கது.
இவ்வாறான சூழலில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் எந்தளவுக்கு பயன் தரும் என்பது சந்தேக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு ராகுலைத் தவிர நாடறியக்கூடிய ஆளுமைமிக்க தலைவர் இல்லை என்பதும் ஒரு குறையே. இந்தியாவில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக இருந்தாலும், காங்கிரஸ் அதைக் கொண்டு வருமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.