“ஜனாதிபதி தேர்தலே என்னுடைய இலக்கு. நான் ஆட்சிக்கு வந்தால் முதலில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு 3 வேளை உணவு. பின்னரே தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு” என தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி வருமாறு,
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து அரசாங்கம் வெளியேற்றியமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையை அதன் தலைவராக அப்போது நான் முன்னெடுத்திருந்தேன். இருந்தபோதிலும் அரசியல் ஊழல்களால் எனக்கெதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்டேன். இந்த விடயத்தில் ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் உரிய படிமுறைகளை பின்பற்றியிருந்தாலும் அதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்களை அரசாங்கம் உறுதிப்படுத்தத் தவறியுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக மின் கட்டணத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமென இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தேன். ஆனால் அரசாங்கம் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது அரசாங்கமே அடுத்த ஆண்டு மின்கட்டணத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. எது எப்படியோ நாட்டு மக்களின் நிலை அறிந்து அரசாங்கம் செயற்பட வேண்டியது கட்டாயம்.
தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற தங்களின் தீர்மானத்துக்கு என்ன காரணம்?
அரசியலுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 வருடகால தொடர்பு காணப்படுகின்றது. இந்த 20 வருட அனுபவத்தில் நான் எத்தனையோ அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பார்த்துவிட்டேன். இங்கு யாருமே ஜனநாயக அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக வாக்குகளை மாத்திரமே மக்களிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த கிராமத்து நபரான நான் பாமர மக்களின் தேவைகளை நன்கறிந்தவன் என்ற ரீதியில் மக்கள் எதிர்பார்க்கும் தகைமைகளுடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளேன். என்னுடைய அரசியல் வறுமைக் கோட்டுக்குள் வாழும் பாமர மக்களுக்கானதாகவே நிச்சயம் அமையும்.
ஜனாதிபதி தேர்தலில் யாருடன் இணைவதாக உத்தேசம் ?
என்னுடைய அரசியல் பிரவேசம் மக்களுக்கானது. இதில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை. என்னுடைய தேர்தல் குறித்த அறிவிப்பை அடுத்து பல அழைப்புகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனால் நான் யாருடனும் இணையப்போவதில்லை. மக்களில் ஒருவனாக மக்களுக்காக தேர்தலில் களமிறங்குவேன்.
கடந்த காலங்களில் நீங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து செயற்பட்டீர்கள். இந்த நிலையில் தேர்தலில் மக்கள் ஆதரவு எந்தளவு உங்களுக்கு கிடைக்குமென நினைக்கின்றீர்கள்?
தற்போது இலங்கை வாழ் மக்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்துக்கொண்டுள்ளார்கள். சரியான ஒரு படித்த தலைமைத்துவம் அமையாவிட்டால் அவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். இதனால் நாட்டு மக்கள் அரசியல் களத்தை அலசி ஆராய்ந்து நோட்டமிட்ட வண்ணமுள்ளனர். இலங்கைக்கும் அப்படியொரு தலைமைத்துவமே ஏற்புடையதாக அமையும். இதனால் விரும்பியோ விரும்பாமலோ சரியான தலைமைத்துவம் எங்கிருக்கின்றதோ அந்த தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள நாட்டு மக்கள் தயாராகவுள்ளனர்.
எனவே மக்களில் ஒருவராக மக்களுக்காக சேவையாற்ற காத்திருக்கும் எனக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
இலங்கையின் தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டுமென்ற கருத்து தற்போது வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பான தங்களின் அபிப்பிராயம்?
இலங்கையின் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டுமென தற்போது சகலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இலங்கையின் தேர்தல் முறைமை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்தாண்டு தேர்தல் காலமாக அமையப்போகிறது. இந்த நிலையில் தேவையற்ற தேர்தல் செலவுகளால் நாடு இன்னும் பொருளாதார சுமைக்கு முகம்கொடுக்க வேண்டிய ஒரு நிலையும் ஏற்படும். அதேநேரம் ஒரு நாட்டின் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது என்பது இலகுவான விடயமும் அல்ல. ஆனாலும் முன்கூட்டியே மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் துரிதகதியில் செயற்பட வேண்டுமென ஜெனிவா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உங்களின் கருத்து?
ப. :- பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் காத்திரமான முறையில் செயற்பட வேண்டியது அவசியம். ஒரு சமூகம் தமது உறவுகளை தொலைத்து, அடையாளத்தை இழந்து உரிமைகளுக்காக போராடி வருவதென்பது சாதாரண விடயமல்ல. மக்களின் நிலையறிந்து இந்த விடயத்தில் அரசாங்கம் துரிதகதியில் செயற்பட வேண்டும். உலக நாடுகளின் உதவி மற்றும் ஆதரவு என்பன இலங்கை போன்ற வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு மிகமிக அவசியமானது. இந்த நிலையில் சர்வதேசம் இலங்கை மீது பிரயோகித்துள்ள அழுத்தத்தை உரியவாறு எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
இலங்கையில் வேரூன்றிவரும் இனப்பிரச்சினை தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?
ப. :- இலங்கையில் அண்மைக்காலமாக இனப்பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதற்கு அரசியல் பின்புலங்களே காரணமாக அமைகின்றது. இதனால் பாதிக்கப்படப் போவது சாதாரண பொதுமக்களே தவிர அரசியல்வாதிகளோ அல்லது மதத் தலைவர்களோ அல்ல. குடும்ப அரசியலால் இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்து வங்குரோத்து அடைந்தவொரு நாடாக மாறியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் 3 வேளை உணவு உண்பதைக் கூட நிறுத்தியுள்ளனர். நாட்டு மக்களின் நிலைமை இவ்வாறிருக்க அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவித்து மக்களை திசைத்திருப்பி தங்களின் தேவைகளுக்கு அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்க முற்படக்கூடாது.