பல்வேறு திட்டங்களைஆரம்பித்து வைப்பதற்காக தமிழ்நாடு, திருச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் மற்றும் தமிழர் பற்றிய பேச்சு, திராவிடக் கட்சியினருக்கு உறக்கத்தை தொலைக்க வைத்துள்ளது.
‘தமிழ்மொழி, தமிழர், தமிழகம் என்றாலே நாங்கள் மட்டும்தான்’ என்று மொத்த குத்தகைக்கு எடுத்தது போல் திராவிடத் தலைவர்கள் எப்போதும் பேசுவது வழக்கம்.
தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும் அவர்கள் வேறு யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால் அவர்களின் எண்ணத்தை பிரதமர் நரேந்திர மோடி புண்ணாக்கிவிட்டார். திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் மோடி பேசிய பேச்சு, பாஜ.கவுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
அந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எடுத்த எடுப்பிலேயே “வணக்கம்… தமிழ்க் குடும்பங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று பேச்சை ஆரம்பித்தார். அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது. மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் இலேசாக சிரித்துக்கொண்டார்.
ஆரம்பத்திலேயே கூட்டத்தை தன்வயப்படுத்துவார் மோடி என்று முதல்வர் எதிர்பார்க்கவில்லை. அதோடு பிரதமர் விடவில்லை. பேச்சுக்குப் பேச்சு அடிக்கடி, “என் குடும்ப உறவுகளே, சொந்தங்களே, எனது தமிழ்க் குடும்பமே” என்று குறிப்பிட்டார்.
“இது நமது பாணியல்லவா? பிரதமர் இப்படி நமது ஆயுதத்தை கையில் எடுத்து விட்டாரே! தமிழை சொல்லித்தானே வாக்குகள் வாங்குகிறோம். அதற்கும் இந்த மனிதர் ஆப்பு வைத்து விட்டாரே!” என்ற அதிர்ச்சியில் அங்கு கூடியிருந்த தி.மு.கவினர் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தனர்.
“தமிழ் உங்களுக்கு மட்டுமா சொந்தம்? எங்களுக்கும் அது சொந்தம் தானே” என்று மோடி சொல்லாமல் சொல்லி விட்டார். அவ்வார்த்தை திராவிட கொள்கையாளர்களை கிள்ளாமல் கிள்ளியது. முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியின் ‘ஸ்டைல்’ அங்கு பரிதாபமாக சிதறியது.
“தமிழ், தமிழர் என்று பேசினால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம்” என்ற எளிய தத்துவம், அங்கு இலகுவாக கடைவிரிக்கப்பட்டது.
தமிழின் மொத்த வியாபாரிகள் அங்கு சில்லறை வியாபாரிகளாக சிதறிப் போனார்கள்.
அதுமட்டுமன்றி, மாணவர்களிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி “எனது மாணவக் குடும்பமே” என்று தமிழில் அடிக்கடி குறிப்பிட்டு திராவிடக் கட்சிகளின் அடிவயிற்றில் நெருப்பை வைத்தார்.
பிரதமர் மோடியின் இந்த பாணிக்கு மாணவர்கள் கரகோஷம் செய்தனர். இந்தக் கரகோஷம் சில திராவிடத் தலைவர்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது.
முன்பெல்லாம் தமிழ் பற்றி பலமுறை நரேந்திர மோடி பேசியிருந்தாலும், இம்முறை அவர் தமிழர்கள், தமிழ்க் குடும்பங்கள் என பேச்சுக்குப் பேச்சு குறிப்பிட்டு தன்னையும் தமிழர்களில் ஒருவராகக் காட்டிக் கொண்டார்.
இது மோடியின் முன்னைய பேச்சிலிருந்து நிறைய மாறுபட்டது. அவரது இந்தப் புதிய அணுகுமுறை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று திராவிடக் கட்சிகளை புலம்ப வைத்தது. இந்த தாக்கம் இருக்குமா என்பது எதிர்வரும் தேர்தலில் தெரிந்து விடும்.
“தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி நான் பேசாத நாளே இல்லை. தமிழ்ப் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது” என்றும் பிரதமர் மோடி அங்கு பேசினார்.
திருச்சி விமானநிலையத்தில் இரண்டாவது முனையம் ரூபா 1112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டு புதிய முனையத்தை திறந்து வைத்த இந்தியப் பிரதமர், “இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சியே தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழக மக்களுக்காக ரூபா 20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தத் திட்டங்களால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். தொடங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடந்த ஆண்டின் இறுதியில் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். மாநிலத்தில் அண்மையில் பலத்தமழையால் உயிரிழப்பும், உடைமைகள் இழப்பும் அதிகம் ஏற்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது” என்றார் அவர்.
அதேசமயம் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கும் அவர் இதயபூர்வமான அனுதாபம் தெரிவித்தார்.
“கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ‘கப்டன்’. திரைப்படங்களில் தன்னுடைய செயற்பாடுகள் வாயிலாக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் விஜயகாந்த். அரசியல்வாதியாக அவர் மக்கள் நலனை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. சேர் சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் அளப்பரியது. அந்த திறமைசாலிகளை உருவாக்கியது தமிழக மண். மேலும், திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.
நான் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து தமிழ் கலாசாரத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழ் பண்பாட்டை பற்றி நான் பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. அதேபோல் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் சிறந்த தூதுவராகவும் தமிழகம் மாறி வருகிறது. பொருளாதாரம் மற்றும் கலாசாரம் மூலமாக இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பைக் காண முடிகிறது. அதேநேரம், தமிழகத்துக்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூபா 120 இலட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது.
எஸ்.சாரங்கன்