கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் கெய்ண்டி (Kaindy Lake) வாவியில் காடு வளர்ந்திருப்பதை காணலாம். வாவியை சுற்றிகாடு வளர்ந்திருப்பதையே நம் நாட்டில் கண்டிருக்கிறோம்.
ஆனால், இங்கு இப்படி ஒரு அதிசயம் ஒளிந்திருக்கிறது. 300 மீற்றர் அகலமும் 30 மீற்றர் ஆழமும் உடைய இந்த ஏரியின் வெளியிலிருந்து பார்த்தால் ஏரிக்குள் மரங்கள் நட்டுவைத்ததைப் போல் ஆங்காங்கே குச்சிகள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு குச்சியும் ஒரு பெரிய மரமென்பது ஏரிக்குள் சென்று பார்க்கும்போது மட்டுமே புரியும்.
1911ஆம் ஆண்டு கெய்ண்டி இருக்கும் பகுதியில் வந்த பூகம்பம், 700க்கும் மேற்பட்ட கட்டடங்களை அழித்தது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக் கற்களினாலான ஒரு பெரிய மலை போன்ற தடுப்பை உருவாக்கியது. பெரும் பள்ளத்துடன் மரங்கள் நிறைந்த காடாக மாறிய இப்பகுதி, நாளடைவில் மழை நீரை உள்வாங்கி ஏரியாக மாறத் துவங்கியது. ஏரியின் வெப்பநிலை காரணமாகவும் (6 டிகிரி செல்சியஸ்), அங்கிருக்கும் மண்ணின் தன்மையாலும் நீரில் மூழ்கிய மரங்கள் அழுகிப்போகாமல், இன்றுவரை இருக்கின்றன. பல வருடங்களாக நீருக்குள் இருப்பதால் மரங்கள் கொஞ்சம் அழுக்கேறியது போலிருக்கின்றன. அது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக் கற்களின் காரணமாக மற்ற ஏரிகளைக் போலல்லாமல் இந்த ஏரியிலிருக்கும் நீர், நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கிறது.