காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் 80 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், மற்றொரு யுத்தநிறுத்தத்தின் தேவையும் அவசியமும் பெரிதும் உணரப்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசாக் ஹேர்ஸொக் தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்பு கொண்டு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்தராக செயற்படும் கட்டார் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து கைதிகள் பரிமாற்றத்திற்கான மற்றொரு போர்நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த யுத்தத்தினால் இற்றைவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் சிறுவர்களும் பெண்களுமாவர். 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸாவே சாம்பல் மேடாகவே காட்சியளிக்கிறது.
சர்வதேசத்தினதும் பணயக் கைதிகளின் உறவினர்களதும் அழுத்தம் மற்றும் எகிப்தின் ஒத்துழைப்பின் ஊடாக கட்டார் முன்னெடுத்த கடும் முயற்சி என்பவற்றின் பயனாக கைதிகள் விடுவிப்புக்கான நான்கு நாட்கள் தற்காலிக யுத்தநிறுத்தம் இஸ்ரேலினதும் ஹமாஸினதும் இணக்கப்பாட்டுடன் ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. அது இரண்டு தடவை நீடிக்கப்பட்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.
இக்காலப்பகுதியில் ஹமாஸ் பிடியிலிருந்த 81 இஸ்ரேலிய பிரஜைகளும் 23 தாய்லாந்து பிரஜைகளும், ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜையும் அடங்கலாக 105 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்களும் சிறுவர்களும் அடங்கலாக 240 பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இப்போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்கும் வகையில் கட்டாரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம், 129 பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் எஞ்சியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நவம்பர் முதலாம் திகதி மீண்டும் கடும் யுத்தத்தை ஆரம்பித்தது.
இந்த யுத்தத்திற்கு எதிராக காஸாவில் ஹமாஸ் போராடும் நிலையில் இப்போரை உடனடியாக நிறுத்துமாறும் காஸாவுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் செல்ல இடமளிக்குமாறும் கோரி லெபனானின் ஹிஸ்புல்லா, யெமனின் கௌதிகள், ஈராக்கின் போராளிக் குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.
இஸ்ரேல் யுத்தநிறுத்தத்தை முறித்துக்கொண்டு மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து 7 வாரங்கள் கடந்து விட்டன. இற்றைவரையும் ஒரு பணயக் கைதியையும் இஸ்ரேல் விடுவிக்கவில்லை. ஆனால் ஹமாஸ் பிடியிலிருந்து தப்பித்த மூன்று பணயக்கைதிகளை காஸாவின் சுரஜயா பகுதியில் டிசம்பர் 16 ஆம் திகதி இஸ்ரேலியப் படையினரே சுட்டுக்கொன்றனர்.
‘அவர்கள் சட்டையின்றி இருந்ததாகவும் ஒருவர் வெள்ளைக்கொடியைக் கையில் ஏந்திய வண்ணம் காணப்பட்டதாகவும் தெரிவித்த இஸ்ரேலிய இராணுவத்தினர், ஹமாஸ் போராளிகள் சிவில் உடையில் செயல்பட்டு ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்களோ எனக் கருதி சுட்டுக்கொன்றதாகவும், இது தவறுதலாக இடம்பெற்றவிட்டது எனவும் குறிப்பிட்டு இஸ்ரேலிய மக்களிடம் மன்னிப்பும் கோரினர்.
இதேவேளை காஸாவின் ஜபாலியா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஐந்து இஸ்ரேலியப் பணயக்கைதிகளுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அவர்கள் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஹமாஸ் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்த இரண்டு நாட்களில் குறித்த ஐந்து பணயக்கைதிகளின் பிரேதங்களையும் ஜபாலியா பிராந்தியத்திலுள்ள சுரங்கமொன்றில் இஸ்ரேலிய படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் ஹமாஸ், யுத்தம் நீடிக்கும் வரையும் எந்தவொரு பணயக்கைதியையும் உயிருடன் மீட்க முடியாது என்றுள்ளது.
அதனால் ஹமாஸ் பிடியிலுள்ள பணயக்கைதிகளின் உறவினர்களும் நண்பர்களும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி கைதிகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
யுத்தநிறுத்தத்தில் இருந்து வெளியேறி போரைத் தொடங்கிய இஸ்ரேல், சில நாட்களுக்குள் யுத்தநிறுத்தத்தின் தேவையை மீண்டும் உணர்ந்து கொண்டது. அதனடிப்படையில் பணயக்கைதிகளை விடுவிக்கவென மற்றொரு யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளை கடந்த நவம்பர் நடுப்பகுதி முதல் ஆரம்பித்தது. இதன் நிமித்தம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட்டின் தலைவர் டேவிட் பார்னே, அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பின் தலைவரையும், கட்டார் நாட்டு தலைவர்களையும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.
குறிப்பாக கடந்த 16 ஆம் திகதி நோர்வேக்கு விஜயம் செய்திருந்த கட்டார் பிரதமர் அப்துர் ரஹ்மான் அல் தானியை ஒஸ்லோவுக்கு சென்று சந்தித்த மொஸாட் தலைவர், கட்டார் பிரதமர் 18 ஆம் திகதி போலந்துக்கு விஜயம் செய்திருந்த போது அந்நாட்டு தலைநகர் வார்சோவுக்கு சென்றும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இந்தச் சூழலில் இஸ்ரேல் ஜனாதிபதி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான மற்றொரு தற்காலிக யுத்தநிறுத்தத்திற்கு தயாரென கடந்த 19 ஆம் திகதி அறிவித்தார். இந்நிலையில் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயீல் ஹனிய்யா கடந்த 20 ஆம் திகதி இல் எகிப்துக்கு விஜயம் செய்து எகிப்தின் உளவுப் பிரிவு தலைவருடன் புதிய யுத்தநிறுத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இவ்வாறான சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிறன்று (24ஆம் திகதி) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளில் முன்னேற்றங்கள் காணப்படாதுள்ளன. அதனால் கட்டார் மத்தியஸ்தர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து மீண்டும் கைதிகள் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் ஹமாஸ், கைதிகள் பரிமாற்றத்திற்கான யுத்தநிறுத்தத்திற்கு புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘காஸா மீதான யுத்தம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், காஸாவில் இருந்து இஸ்ரேலிய படையினர் திரும்பப் பெறப்பட வேண்டும். மூடப்பட்டுள்ள காஸாவுக்கான நுழைவாயில் பாதைகள் திறந்துவிடப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் வந்து சேர இடமளிக்க வேண்டும்’ என்பனவே அந்த நிபந்தனைகளாகும்.
இவை இவ்வாறிருக்க, நுவா அகர்மானி என்ற பணயக்கைதியை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவிக்க உதவுமாறு சீன ஜனாதிபதியிடம் பிரதமர் நெதன்யாகு கேட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமட் அல் தானியுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு, ‘அமெரிக்க குடிமக்கள் உட்பட ஹமாஸ் பிடியில் எஞ்சியிருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான அவசர முயற்சிகள் குறித்தும் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த அனைத்து முயற்சிகளையும் நோக்கும் போது விரைவான யுத்தநிறுத்தத்தின் தேவையும் முக்கியத்துவமும் உணரப்பட்டிருப்பது தெளிவாகிறது. 80 நாட்களுக்கும் மேலாக காஸா மீது யுத்தத்தை முன்னெடுத்தும் ஒரு பணயக்கைதியையும் யுத்தத்தின் ஊடாக விடுவிக்கக் கிடைக்கவில்லையெனில் இதன் பின்னரும் ஒரு யுத்தம் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதனால் யுத்தத்தை நிறுத்தி அனைத்து கைதிகள் விடுவிக்க வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் விரைவாக வெற்றிபெற வேண்டும். அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.
மர்லின் மரிக்கார்