2023 ஆம் ஆண்டு என்பது இலங்கை விளையாட்டில் மைதானத்தை விடவும் மைதானத்திற்கு வெளியிலான பரபரப்புகள் தான் அதிகம். கால்பந்து மீது தடை, கிரிக்கெட்டின் மீது தடை, ஏன் ரக்பியில் கூட தடை என்று தடைகளின் ஆண்டு என்றும் குறிப்பிடலாம். இதற்கு அப்பால் சர்வதேச மட்டத்தில் தடகளப் போட்டிகளில் பெற்ற சில வெற்றிகள் ஆறுதல் அளித்தன. 2023 ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டு எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
கால்பந்து
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தை தேர்வு செய்யும் தேர்தலுடனேயே 2023 ஆம் ஆண்டு ஆரம்பமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ ரங்கா ஜனவரி மாதம் தலைவராக தெரிவானார். ஆனால் பதவியில் இருந்த தலைவர் ஜஸ்வர் உமர் போட்டியிட தடுக்கப்பட்டது.
இந்தக் குழப்பத்திற்கு மத்தியில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) அரசியல் தலையீடு பற்றி இலங்கை கால்பந்து சம்மேளனத்தை எச்சரிக்க கடைசியில் ஜனவரி நடுப்பகுதியாகும்போது இலங்கை கால்பந்து மீது தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை இலங்கையின் ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.
இலங்கை கால்பந்தின் இயக்கத்திற்கு பிஃபாவின் நிதி அடிப்படையானது. அது தடைப்பட்டதால் தேசிய மட்டத்திலும் கால்பந்து விளையாட்டு தோய்ந்து போனதோடு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கால்பந்து ஆட முடியாமல்போனது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சாஃப் சம்பியன்சிப் கால்பந்து தொடரில் இலங்கையால் ஆட முடியாமல்போனது. இலங்கை அணி இந்தத் தொடரில் பங்கேற்காதது வரலாற்றில் முதல் முறையாக இருந்தது. இலங்கை இல்லாத நிலையில் பிராந்தியத்திற்கு வெளியில் இருக்கும் குவைட் மற்றும் லெபனான் அணிகள் போட்டிக்கு அழைக்கப்பட்டன.
குவைட்டுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷுட் அவுட் முறையில் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
தடையை நீக்கினாலே இலங்கை கால்பந்தால் நகர முடியும் என்ற நிலையில் தேர்வு செய்யப்பட்ட புதிய கால்பந்து நிர்வாகமும் முழுமையாக இயங்கவில்லை. எனவே பிஃபா சொன்ன போக்கில் செயல்படுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கடைசியில் கால்பந்து இடைக்கால சபை ஒன்று நியமிக்கப்பட்டு புதிதாக தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்தே இலங்கை கால்பந்து மீதான தடை நீக்கப்பட்டது.
ஏழு மாதங்கள் நீடித்த பிஃபாவின் தடை ஓகஸ்ட் 28 ஆம் திகதி நீக்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதிக்கு அமைய புதிய நிர்வாகத்திற்கான தேர்தலும் நடத்தப்பட்டது. செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தடை நீக்கப்பட்டதால் 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் ஆட்டத்தில் ஆடுவதற்கு இலங்கை கால்பந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. யெமன் அணிக்கு எதிராகவே அந்த தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி களமிறங்கியது.
சவூதியில் ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்டப் போட்டியில் யெமனிடம் 0–3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த இலங்கை, சொந்த மண்ணில் ஒக்டோபர் 17 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியை 1–1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. எவ்வாறாயினும் 4–1 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் யெமன் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாக கால்பந்து வாடையே வீசாத இலங்கை அணி இந்தத் தகுதிகாண் சுற்றில் கெளரவமான பின்னடைவு ஒன்றை சந்தித்ததே பெரிய செய்தி. பிஃபா தரவரிசையில் இலங்கை தற்போது 204 ஆவது இடத்தில் உள்ளது. அதாவது இலங்கைக்கு பின்னால் ஏழு நாடுகள் தான் இருக்கின்றன. எனவே, 2024 இல் இலங்கை கால்பந்து பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது.
கிரிக்கெட்
இலங்கை அணி 2023 ஆம் ஆண்டு ஆடிய மொத்த சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை 44. அதிலே 24 ஆட்டங்களில் தோல்வியுற்ற இலங்கை அணி 19 போட்டிகளில் வெற்றியீட்டியது. அதாவது இந்த ஆண்டில் ஆடிய 6 டெஸ்ட்களில் 2 வெற்றி 4 தோல்விகளையும், 31 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 16 வெற்றி, 15 தோல்விகளையும், 7 டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு வெற்றி 5 தோல்விகளையும் பெற்றது.
ஒட்டுமொத்தத்தில் 2023 என்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு நல்லதாக இருக்கவில்லை. ஆண்டை ஆரம்பித்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 சர்வதேச தொடரை 2–1 என இழந்ததோடு பின்னர் நடந்த ஒருநாள் சர்வதேச தொடரை 0–3 என பறிகொடுத்தது. அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 390 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தத் தோல்விப் படலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முழுமையான கிரிக்கெட் தொடர் ஒன்றுக்காக நியூசிலாந்து சென்ற இலங்கை அணிக்கு தோல்விகள் தான் மிஞ்சின. அதிலும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 0–2 என இழந்ததால் இலங்கையால் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற முடியாமல்போனது.
இதனால் சிம்பாப்வேயில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்றாலும் பலவீனமான அணிகள் பங்கேற்றதால் இலங்கைக்கு அந்தத் தொடரில் பெரிய சவாலாக இருக்கவில்லை. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
என்றாலும் இடையில் வந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் இலங்கை அணிக்கு சாதகத்தை விடவும் பாதகமாகவே முடிந்தது. ஜூலை மாதத்தில் முதல் முறையாக லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு வீரர்கள் ஏலம் விடப்பட்டது. அதிக விலைபோன வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை ஜப்னா கிங்ஸ் அணி 92,000 டொலர்களுக்கு வாங்கியது.
ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடர் நல்லதே இடம்பெற்றது. பி லவ் கண்டி அணி சம்பியன் கிண்ணத்தையும் வென்றது. என்றாலும் இந்தத் தொடர் முடியும்போது இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கிண்ணம் மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முன்னணி வீரர்களால் பங்கேற்க முடியாமல்போனது. ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 50 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது அணியின் கட்டமைப்பை கேள்விக்குரியாக்கியது.
இது இந்தியாவில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியிலும் தொடர்ந்தது. வீரர்களில் காயங்கள் ஒருபக்கம் இருக்க, இருக்கின்ற வீரர்களும் சோபிக்கத் தவறினார்கள். இதனால் குழுநிலையில் இலங்கை அணி மொத்தமாக ஆடிய 9 போட்டிகளில் 2 இல் மாத்திரமே வெற்றி பெற்று 9 ஆவது இடத்தை பிடித்ததோடு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இழந்தது.
இந்தியாவின் ஆதிக்கத்துடன் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோதும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்தத் தோல்வி இலங்கை கிரிக்கெட்டில் மைதானத்திற்குள் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மே மாதம் நடந்த இலங்கை கிரிக்கெட் தேர்தலில் வெற்றியீட்டிய ஷம்மி சில்வா 2025 ஆம் ஆண்டு வரை தலைவராக இருக்க தேர்வு செய்யப்பட்டார்.
என்றாலும் நவம்பர் மாதத்தில் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் நியமிக்க, அதனை நீதிமன்றம் இடைநிறுத்த இந்தக் குழப்பம் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்தும் அளவுக்குச் சென்றது. என்றாலும் இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு ஐ.சி.சி அனுமதித்ததால் பெரும்பாலும் இந்தத் தடை ஓர் அடைய நடவடிக்கையாகவே இருந்து வருகிறது.
கிரிக்கெட்டை ஒட்டி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் விளையாட்டில் எப்படித் தாக்கம் செலுத்தும் என்று இப்போது கணிக்க முடியாது. என்றாலும் உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதோடு இலங்கை கிரிக்கெட்டின் நிரந்தர ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எனவே, 2024 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
என்றாலும் சமரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி புதிய உச்சத்தைத் தொட்டது. ஜூன், ஜூலையில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்றில் முதல் முறை ஒருநாள் தொடர் ஒன்றை வென்றதோடு இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஒன்றை கைப்பற்றி வரலாறு படைத்தது. பின்னர் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிவரை முன்னேறி தோற்றபோதும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
தடகளம்
ஏப்ரல் மாதம் உஸ்பகிஸ்தானில் நடந்த 5ஆவது ஆசிய இளையோர் தடகள சம்பியன்சிப் போட்டியுடனேயே 2023 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இதில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. உயரம் பாய்தலில் நிபுல் பெஹசரவும், கோலூன்றிப் பாய்தலில் துஷேன் சில்வாவும் அந்தப் பதக்கங்களை வென்றனர்.
தொடர்ந்து ஜூன் மாதத்தில் தென் கொரியாவில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி நடைபெற்றது. இதில் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி திசாநாயக்கவினால் இலங்கைக்கு இரண்டு தங்கங்களை வென்று கொடுக்க முடிந்தது. பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டபோட்டியில் தங்கம் வென்ற அவர் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் தங்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்தார். தவிர அவர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.
தரூஷியின் பதக்க வேட்டை இத்தோடு முடியவில்லை. ஜூலை மாதம் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் 19 வயதான தரூஷி பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் முதலிடம் வென்றார்.
இதில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் நதீஷா ராமநாயக்கவும் தங்கப் பதக்கத்தை வென்றதோடு ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணியால் தங்கம் வெல்ல முடிந்தது. இதன்மூலம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கையால் நான்காவது இடத்தை பிடிக்க முடிந்தது.
2023 ஆம் ஆண்டில் இலங்கை பங்கேற்ற பிரமாண்ட விளையாட்டுப் போட்டியாக கடந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹொன்சு நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியை குறிப்பிடலாம். அதிலும் தரூஷியத்தை தான் குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற அவர் 2002 ஆம் சுசந்திகா ஜயசிங்கவுக்கு பின் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இலங்கையின் முதலாமவரானார்.
இந்த விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான ஈட்டியெறிதலில் டில்ஹானி லொகுகே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுகொடுத்தார்.
தடகளப் போட்டிகளில் இலங்கைக்கு நம்பிக்கை தந்த ஆண்டாக இது இருந்தது. குறிப்பாக தரூஷி மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்ட அணியினர் 2024 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். எனினும் இலங்கையின் மற்றொரு எதிர்பார்ப்பான யுபுன் அபேகோன் காயம் காரணமாக 2023 ஆம் ஆண்டு முக்கிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
2024 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறப்போகிறது. இந்தத் திறமைகள் இலங்கைக்கு ஒரு பதக்கமேனும் வென்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.
ரக்பி
கால்பந்து, கிரிக்கெட் போன்று இலங்கை ரக்பிக்கும் உலக ரக்பி கெளன்சில் கடந்த மே மாதம் தடை விதித்தது. அதே அரசியல் தலையீடு என்ற காரணம் தான். இதனால் சர்வதேச போட்டிகளில் இலங்கை ரக்பி அணிக்கு தேசிய கொடியுடன் விளையாட முடியாமல்போனது.
அதிலும் தென்கொரியா மற்றும் தாய்லாந்தில் நடந்த ஆசிய ரக்பி செவன் போட்டி இலங்கைக்கு கை நழுவியது. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் கொடியின் கீழேயே பங்கேற்றது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள், சீர்திருத்தங்கள் என்று முன்னெடுக்கப்பட்ட முயற்சியை அடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் இந்தத் தடையை உலக ரக்பி நீக்கியது. இந்தத் தடை இலங்கை ரக்பிக்கும் இந்த ஆண்டு கெட்ட காலமாக மாறியது. அதில் இருந்து விடுபடுவது இலகுவானதாக இருக்காது.
ஏனையவை
ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பிடித்ததோடு ஜூன் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசிய இளையோர் வலைப்பந்து போட்டியிலும் இலங்கை அணி 3ஆம் இடத்தை பிடித்தது.
ஆறு அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்ட இலங்கை வலைப்பந்து நட்சத்திரமான தர்ஜினி சிவலிங்கம் கடந்த ஓகஸ்டில் சர்வதேச வலைப்பந்து போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தது பெரும் இழப்பு. அதேபோன்று பெட்மின்டன் நட்சத்திரம் நிலுக கருணாரத்னவும் செப்டெம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார்.
எஸ்.பிர்தெளஸ்...?