தசாபுத்தி அந்தரப்படி நன்மை தரும் உங்கள் சாதக கிரக அமைப்புகள்’ என்ற எனது சென்ற சோதிட ஆய்வுக் கட்டுரையில் சொல்லப்படாமல் விடுபட்டுப்போன ஏனைய கிரகங்களின் நற்பயன் தொடங்கும் கால கட்டத்தை இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
புதன் 5ஆம் வீட்டுக்குரியவராகி 11ஆம் வீட்டிலிருந்தால் அவ்விதம் அமைந்த சாதகருக்கு 32ஆவது வயதிலிருந்தே நல்ல காலம் ஆரம்பிக்குமெனக் கொள்ள வேண்டும். அநேகமாக இடப லக்கின சாதகருக்கு இது அமையலாம். ஆனாலும், அந்த இலக்கினத்துக்கு 11ஆம் வீடானது புதனுக்கு நீசவீடு (மீனம்) என்பதால், அப்புதனுக்கு நீசபங்கம் ஏற்பட்டிருந்தாலன்றி அதனால் அச்சாதகருக்கு அதிர்ஷ்டம் தொடருவதென்பது அரிது. அதேவேளை கும்பலக்கினகாரருக்கு 5ஆம் வீடாகிய மிதுனத்திற்குரிய புதன் அதற்கு 11ஆம் வீடாகிய தனுவில் இருந்தாலும் இந்த நல்ல காலம் அதே வயதில் தொடங்கும்.
இந்தப் புதன் 9ஆம் வீட்டுக்குரியவராகி 10ஆம் வீட்டில் சஞ்சரித்திருந்தால் சாதகர் தமது 35ஆவது வயதிலிருந்தே பூர்வ புண்ணிய வினையாலும், தந்தை மூலமாகவும், தர்ம காரியங்கள் மூலமும் இலாபம் பெறுவதுடன் செய்யும் தொழிலிலும் அபிவிருத்தியடைவார் என்று முடிவெடுக்க வேண்டும். ஐந்தாம் வீட்டுக்குரியவர் சந்திரனாகி, அவர் 10ஆம் வீட்டில் இருப்பாரானால் அவ்விதம் அமைந்தவருக்கு அதிர்ஷ்டவசமாக 24ஆம் வயதிலிருந்தே தொழில் மேன்மையும் பொருள் வரவும் உண்டாக ஆரம்பிக்குமென கொள்ள வேண்டும்.
மேட லக்கினத்தில் பிறந்தவருக்கு இலக்கினாதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த சாதகருக்கு 28ஆம் வயதிலிருந்தே செய்தொழிலில் முன்னேற்றமும், மதிப்பும், கௌரவமும் உண்டாக ஆரம்பிக்குமெனக் கொள்ளவேண்டும். அதுபோல மீன லக்கினத்தில் பிறந்த ஒரு சாதகருக்கு வியாழன் 5ஆம் இடத்தில் உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு 16 வயதிலிருந்தே சௌபாக்கியங்கள் உண்டாக ஆரம்பித்து விடும். இதே வியாழன் கடக லக்கினத்தில் பிறந்தவருக்கு 9ஆம் வீட்டுக்கு உரியவராகிறார். அவர் கடகத்திலேயே இருப்பாரானால் அவ்விதம் தமது சாதகத்தில் அமைந்தவருக்கும் 16 வயது முதலே தந்தை மூலமாக நல்லதொரு முன்னேற்றம் உண்டாகச் செய்வார்.
அதேவேளை விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2ஆம்இ 5ஆம் வீடுகளுக்குரிய வியாழன் 9ஆம் இடத்தில் உச்சம் பெற்றிருந்தால் அச்சாதகர்கள் கல்வித்துறையில் முன்னேற்றமடைவதுடன், அதிர்ஷ்டவசத்தால் பொருள் வரவையும் பெறுவதற்குரிய காலம் 16 வயதிலிருந்தே ஆரம்பமாகும்.
ராகு ஒரு பாவக்கிரகம். ஆயினும் அவருக்குப் பொருத்தமான இடமொன்றில் அமர்ந்து சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருப்பாரானால் அவர் மூலம் பெறக்கூடிய பலன்கள் ஆகா, ஓகோ என்றிருக்கும்! இந்த ராகுவானவர் ஒரு கேந்திரத்திலமர்ந்து சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் அவருக்கு விளையக்கூடிய நற்பலன்கள் 42ஆவது வயதிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும்.
சுபர் பார்வை அல்லது சுபர் சேர்க்கை என்று சுப பலம் பெற்ற ஒரு கிரகம் 10ஆம் வீட்டில் அமர்ந்திருந்து 10ஆம் வீட்டுக்குரிய கிரகமும் கேந்திரம் அல்லது திரிகோணமேறியிருந்தால் அச்சாதகர் முயன்று உயர் பதவியை அல்லது அந்தஸ்தை அடைய அதுவே தகுந்த அடிப்படையாகும்.
அதுபோல கேதுவும் பலம் பெற்று எந்த வீட்டோடு எந்தக் கிரகத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறாரோ அந்த வீட்டின் பலனையும் சேர்ந்துள்ள கிரகத்தின் பலனாகவும் தன் கையில் வாங்கிக் கொண்டு சாதகருக்கு அவரது 48ஆவது வயதிலிருந்து நலம் விளைவிக்க ஆரம்பிப்பார்.
ஒரு சாதகத்தில் இலக்கினத்திற்கு அதிபதியான கிரகம், 10ஆம் வீட்டில் பலம் பெற்றிருந்தால் அச்சாதகருக்கு சுபீட்சங்களும் நலன்களும் உண்டாகத் தடையிராது. ஒரு கிரகம் பலம் பெறுவதென்பது அது உச்சம் பெறுவதும், கேந்திர, திரிகோண நிலைகளில் அமர்ந்திருப்பதுமாகும். சுபக்கிரக பார்வை அல்லது சேர்க்கை என்பது இவ்விதம் அமர்ந்துள்ள கிரகங்களுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகும். இலக்கினாதிபதிக்கு 10ஆம் வீடு நீச வீடாயிருந்தால் அதற்கு பாவிகள் பார்வை அல்லது சேர்க்கையிருந்தாலும் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பங்கப்படுத்திவிடும்.
9ஆம் வீட்டுக்குரிய கிரகம் 10ஆம் வீட்டிலும்இ 10ஆம் வீட்டுக்குரிய கிரகம் 9ஆம் வீட்டிலும் மாறியமர்ந்து இடப்பரிவர்த்தனம் பெற்று சுப பலமும் பெற்றிருந்தால் அவ்விதம் அமைந்த சாதகருக்கு அதிர்ஷ்டமும் உயர் பதவியும் வாழ்க்கையில் கிட்ட உத்தரவாதமுண்டு. 9ஆம், 10ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் ஒன்று கூடி 9ஆம் வீட்டிலோ அன்றி 10ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்தால் மிகவும் விசேடமான பலனுண்டு. அரச பணியில் இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் இத்தகையவரை அரியணையிலேற்றி அழகு பார்க்கும் இக்கிரக அமைப்பு மிகவும் உன்னதமான ‘தர்ம கர்மாதிபத்திய யோகம்’ என்று இதற்குப் பெயர்.
9ஆம், 10ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் ஒரு திரிகோணத்தில் (1, 5, 9 ஆகிய இடங்கள் அல்லது ஒரு கேந்திரத்தில் (1, 4, 10 ஆகிய இடங்கள்) அமர்ந்து வலிமை பெற்றிருந்தால் அவ்விதம் அமைந்த சாதகர் வாழ்க்கையில் முன்னேற நிறைய வாய்ப்புகள் கிட்டும். அது போல 5ஆம், 10ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் இடப்பரிவர்த்தனை பெற்றிருப்பதும் மிகுந்த சுபிட்சங்களை சாதகர் தம் வாழ்நாளில் பெறுவதற்கு வழி வகுக்கும். இந்த 5, 10க்கு உள்ளவர்கள் எந்தக் கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ அமர்ந்திருந்தாலும் அதனால் மதிப்பும் செல்வாக்கும் கொண்ட உன்னதமான ஸ்தானத்தை சாதகர் தமது வாழ்க்கையில் அடைய வைப்பர்.
சுபர் பார்வை அல்லது சேர்க்கை சுபர் வீடு என்று சுப பலம் பெற்ற ஒரு கிரகம் 10ஆம் வீட்டில் அமர்ந்திருந்து 10ஆம் வீட்டுக்குரிய கிரகமும் கேந்திரம் அல்லது திரிகோணமேறியிருந்தால் அச்சாதகர் முயன்று உயர் பதவியை அடைய அதுவே தகுந்த அடிப்படையாகும். சூரியனும் செவ்வாயும் கூடி 10ஆம் வீட்டிலமர்ந்து 10ஆம் வீட்டுக்குரிய கிரகமும் ஏதோவொரு வகையில் பலம் பெற்றிருந்தால் அச்சாதகர் வாழ்க்கையில் அடைய வேண்டிய யாவற்றையும் அடைந்து அனைவராலும் பாராட்டப்படவும் செய்வார். ஆனால், இந்தக் கிரகச் சேர்க்கையானது தனித்து இராமல் வேறும் பாவக்கிரகத்தின் சேர்க்கையைப் பெற்றிருந்தால் அது அச்சாதகரின் தந்தைக்கு நலக்குறைவையும் பிரிவையும் கொண்டுவரும். அல்லது சாதகரால் தந்தைக்கு யாதொரு சுகமும் கிடையாது எனக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு சாதகத்திலும் சனி 10ஆம் வீட்டிலிருந்தால் அச்சாதகர் எத்தகைய அடி மட்டத்தில் பிறந்து வளர்ந்தாலும் தமது கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற்றப்படிகளில் ஏறி முதல் நிலைக்கு வந்துவிடுவார்.
சரி. கட்டுரையை இவ்வளவோடு நிறுத்திவிட்டு சந்தேக நிவர்த்திக்காக என்னிடம் வந்துள்ள வாசகர்களின் கடிதங்களில் ஒன்றுக்கு மட்டும் இம்முறை பதிலளிக்க முயல்கிறேன்.
முதலில் வத்தளையிலிருந்து சண்முகம் என்பவரின் கடிதம். தனு லக்கினம். இலக்கினத்தில் சூரியனும் புதனும். இரண்டில் சுக்கிரனும் சந்திரனும். மூன்றில் கேது, 5இல் சனியும் செவ்வாயும், ஆறில் வியாழன், 9இல் ராகு. இது எனது சாதக கிரக நிலை. பல வருடங் களாக எனக்கு ‘எக்ஸிமா’ என்ற சரும நோய் பீடித்து வாட்டுகிறது. அவ்வப்போது வைத்தியம் செய்தால் குணமாகும். பிறகு கொஞ்ச நாளில் மறுபடியும் தலைதூக்கும். சொறியச் சொறியச் சொர்க்கம் தெரியும். சொறிந்து ஓய்ந்தால் சிதலும் இரத்தமும் வழிந்து கொண்டேயிருக்கும். வலி உயிர் போகும். இது குணமாகாதா? அதற்குரிய சாத்தியங்கள் என் சாதகத்தில் தென்படுகின்றனவா? அல்லது எனது சாவில் தான் இதற்கு முடிவா?
உங்கள் சாதகக் கிரக நிலைகளெல்லாம் ஒரு தொழு நோயாளிக்குரிய பொதுவான அடையாளங்களாகும். இருப்பினும் அதற்கான சில குறிப்பிட்ட கிரகங்கள் இடம்மாறியுள்ளதால் அந்த நோய் தவிர்க்கப்பட்டு எக்ஸிமா என்ற சருமநோயின் அளவோடு நிற்கிறீர்கள். இலக்கினாதிபதி ரோகத்தானத்தில் (6 ஆம் வீட்டில் மறைவு பெற, ரோகத் தானாதிபதியும் ஆயுட் தானாதிபதியும் இலக்கினத்தில் கூடி நின்றால் அத்தகையவருக்கு தொழுநோய் பீடிக்குமென்பது விதி.
உங்கள் சாதக விடயத்தில் அது கொஞ்சம் மாறிவிட்டது. தனுவின் இலக்கினாதிபதி வியாழன் ஆறில் மறைய, ஆறாம் வீட்டுக்குரிய சுக்கிரனும், ஆயுட்தானாதிபதி சந்திரனும் இலக்கினத்தில் அல்லாது அதற்கடுத்த வாக்குத் தானத்தில் மாறி நிற்க வாக்குத்தானாதிபதி சனி மேடத்தில் நீசமடைந்து கூடவே அவ்வீட்டுக்குரிய செவ்வாயும் அமர்ந்துள்ள காரணத்தால் நீச பங்கமும் பெறுகிறார். இந்தச்சனி சந்திர கேந்திரம் பெற்றிருப்பதும் சனியின் நீசபங்கத்திற்கு இன்னொரு காரணம். இந்த அமைப்பு காரணமாக பாரதூரமான எந்த நோயும் இதுவரை உங்களை பீடிக்கவில்லையென்று எண்ணுகிறேன்.
வெறும் எக்ஸிமா என்ற அளவில்தான் உங்கள் வியாதி இருக்கிறது. ஆங்கில வைத்தியம் எதுவும் இதற்குச் சரி வராது. சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளையே பின்பற்றுங்கள். நோய் முற்றாக குணமடையாவிடினும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
திருவோணம்-