யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் பெற விண்ணப்பித்து தேர்வு பெற்ற வணக்கத்துக்குரிய கமிலாஸ் நிமால் ஜோன்பிள்ளை ஆண்டகை குருநகர் சந்தியமாயோர் தேவாலயத்தில் தமது முதலாவது நத்தார் திருப்பலியினை டிசம்பர் 25 காலையில் வழங்கினார். ஆயர்கள் அணியும் நாவல் நிற மேலாடை, சிலுவை, மோதிரம் ஆகிய அணிகலங்களுடன் வந்திறங்கிய இவரை மாலைகள் அணிவித்து மக்கள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். உத்தியோகபூர்வ விடயமாக ஒரு வாரம் யாழில் தங்கிய இவர் முரசுமோட்டை, பளை, கிளிநொச்சி, பரந்தன், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டபின் பல கத்தோலிக்க பிரமுகர்களையும் முக்கிய குருமார்கள் கன்னியாஸ்திரிகளையும் சந்தித்து வெள்ள நிவாரணம் பற்றி உரையாடினார். கொழும்பிலுள்ள தனது நீண்ட கால நண்பரான பாப்பரசரின் பிரதிநிதியை சந்தித்து நிலைமைகளை விளக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
வத்திக்கானின் பூரண நிதி உதவியில் கண்டியில் இயங்கும் தேசிய குருமடத்தின் பிரதம ஆலோசகராக உரோமையின் சர்வதேச மறைபரப்பு நிலையம் இவரை நியமித்துள்ளது. இங்கிருந்து கொழும்புக்கு செல்லும் இவர் இலங்கையின் இன்றைய பிரச்சினைகள் பற்றி கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் சில திட்ட வட்டமான பேச்சு வார்த்தைகளை முன்னர் நடத்தியதாக நத்தார் தின மறை உரையில் குறிப்பிட்டார். தற்போதைய யாழ்ப்பாணம் ஆயர் முதுமையடைந்து ஓய்வு பெறுவதனால் அந்தப் பொறுப்பை தாம் ஆற்றவேண்டியுள்ளதெனத் தெரிவித்த மேதகு கமிலாஸ் ஜோன்பிள்ளையின் நியமனம் பெப்ரவரி பதினோராம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் அல்லது மட்டக்களப்பின் ஆயராக பொறுப்பேற்கும்படி ரோமையின் சர்வதேச மறைபரப்பு நிலையம் தம்மிடம் கோரியதாகவும் ஆனால் தனது சேவை யாழ்ப்பாணத்துக்கே தேவை அறுதியாக கூறும் இவரது ஆயர் பட்டமளிப்பு என விழா ஒழுங்குகளை வடமாகாண கத்தோலிக்க மக்களும் குருமாரும் முன்னெடுக்கவுள்ளனர்.