Home » மியன்மாரில் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள்!

மியன்மாரில் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள்!

விடுதலைக்காக ஏங்கி நிற்போரை விடுவிப்பதில் காணப்படும் சிக்கல்கள்

by Damith Pushpika
December 31, 2023 6:00 am 0 comment

நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்துக்காக ஏங்கும் அரசாங்கம், அதை நேரிடையாகப் பெறக்கூடிய இரண்டு வழிகளாக சுற்றுலாத்துறையையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளையும் கருதுகிறது. உள்நாட்டில் பொருத்தமான, திறமைக்கேற்ற தொழில் வாய்ப்புகள் கிடைக்காமை, கிடைத்தாலும் வாய்க்கும் வயிறுக்குமே அல்லாட வேண்டிய பொருத்தமற்ற சம்பளம், குடும்பத்தை ஈடேற்ற வேண்டிய அவசியம் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் வெளிநாடுகளில் கிடைக்கும் தொழில்களைப் பெறுவதற்காக போட்டி போடுகின்றனர்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் கடவுச்சீட்டு காரியாலயத்துக்கு முன்பாக ஆயிரக்கணக்கானோர் முண்டியத்ததை நாம் பார்த்தோம். எப்படியாவது இந் நாட்டில் இருந்து வெளியேறினால் போதும் என்பது போலவே கருதி ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டுப் பறந்தனர். வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் பணம் அனுப்பினால் மட்டுமே குடும்பத்தை சீராக கொண்டு செல்லலாம் என்று ஏராளமான குடும்பங்கள் கருதுகின்றன. இது உண்மையும் கூட.

எந்த ஒரு துறையோ அல்லது வர்த்தகமோ பரபரப்பாக நடைபெறும்போது அங்கே ஊழல் மோசடிகளும், தில்லுமுல்லுகாரர்களும் தோன்றி பிழைக்க முயல்வது இயற்கை. இருப்பினும் வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்காக அல்லது நாட்டை விட்டே வெளியேறுவதற்காக பல லட்சங்களை செலவு செய்து இன்றைக்கும் அவுஸ்திரேலியா போன்ற தூர தேசங்களுக்கு படகுகளில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஐரோப்பாவுக்கு கொண்டு விடுகிறோம் என்று சொல்லி பல லட்சங்களை வாங்கிக் கொண்டு உக்ரேனிலோ அல்லது மொஸ்கோவிலோ அவர்களை விட்டு விட்டு மாயமாகிவிடும் ஏஜன்சிகாரர்களை நாம் அறிவோம். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக பயணிக்க விரும்பினால் அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள், இந்நாட்டில் நீண்டகாலமாகவே நடைமுறையில் உள்ளன. இதன் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்புப் பணியகம் உள்ளது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அரசாங்கமே தகுதியானவர்களை அனுப்பி வைக்கிறது.

ஆனாலும் போலி முகவர் நிலையங்களின் ஊடாகவும் கணிசமானோர் வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு தெரியாமல், பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சுற்றுலா விசாவில் நாடொன்றுக்கு சென்று தொழில் பெற்றுக் கொள்வது குதிரைக் கொம்பு என்பது தெரிந்து தெரிந்தே செல்கிறார்கள். இவர்களை விமானத்தில் ஏற்றியதோடு இப்போலி முகவர்கள் கைகளை கழுவிக் கொள்வார்கள். செல்பவர்கள் தான் தொழில் கிடைக்காமல், உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகளின்றி தெருவில் அல்லாட வேண்டியிருக்கும். இவ்வாறு, இந்த வெளிநாடுகள் பச்சைப் பசேல் என்றிருக்கும் எனக் கருதி அந்நாடுகளில் கடும் கஷ்டங்களை அனுபவித்து வெறுங் கையுடன் நாடு திரும்புவோர் பற்றி நாம் நிறையவே கதைகளைக் கேட்டிருக்கிறோம்.

எங்கே கூட்டமும் பரபரப்பும் அதிகமோ அங்கே கில்லாடிகளும் சுற்றி வருவார்கள் என்பது யதார்த்தம். அவ்வாறானவர்களிடம் சிக்கி திக்குத் தெரியாமல் பரிதவிக்கும் இலங்கையர் தொடர்பாகக் கடந்த வாரம் வெளியான தகவல்கள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன. ஏனெனில் பல்வேறு வகையான மோசடிகளைக் கேள்விப்பட்டிருக்கும் நமக்கு, இணைய வெளி பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு சித்திரவதை அனுபவிக்கும் இளைஞர் யுவதிகள் தொடர்பான தகவல்கள் புதியவை. இப்படியெல்லாம் நடக்குமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

கம்பஹாவைச் சேர்ந்த, சீனர்களை முதன்மையாகக் கொண்ட ஒரு குழுவே, படித்த, உயர்கல்வி கற்ற, கணினி அறிவியலில் அறிவும் அனுபவமும் பெற்ற இளைஞர்களை தாய்லாந்தில் நல்ல சம்பளத்தில் தரவு பதிவேற்றுதல் (Data Entry) துறையில் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக சொல்லி இளைஞர், யுவதிகளைத் திரட்டியிருக்கிறது. நல்ல சம்பளத்துடன் தாய்லாந்தில் வேலை என்றதும் கிஞ்சித்தும் சந்தேகமின்றி இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தாய்லாந்து சென்ற பின்னரேயே, இளைஞர்களின் விருப்பத்துக்கு இணங்கவோ அல்லது மாறாகவோ அங்கிருந்து மியன்மாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். சில இலங்கை இளைஞர்கள் சுய விருப்பத்தின் பேரில் மியன்மாருக்கு செல்வதாகவும், தரவேற்றும் பணியில் விருப்பத்துடன் ஈடுபடுவதாகவும் மியன்மாருக்கான எமது தூதுவர் ஜனக பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட நாடே மியன்மார் என தற்போது அறியப்படுகிறது. இந்தியா, சீனா, தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளுடன் அதன் எல்லைகள் அமைந்துள்ளன. முன்னர் ரங்கோன் என அழைக்கப்பட்ட அதன் தலைநகரின் இன்றைய பெயர் யங்கொன் என்பதாகும். பர்மா சுதந்திரம் பெற்றதும் அங்கு வாழ்ந்து வந்த ஏராளமான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், அந்நாட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைத்தையும் இழந்தவர்களாக, பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அடர்ந்த கானகத்தைக் கடந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அவர்கள் வாழ்வதற்காக சென்னையில் கடைகள் அமைத்து கொடுக்கப்பட்ட இடமே இன்றைக்கும் பர்மா பஜார் என அழைக்கப்படுகிறது. இம்மக்களை மையமாக வைத்தே அறிஞர் அண்ணாதுரை ‘ரங்கோன் ராதா’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார். இவ்வாறு அகதியாக வந்த ஒரு குடும்பத்தை பின்னணியாகக் கொண்டதே பராசக்தி திரைப்படம்.

மியன்மாரில் ஜனநாயக ஆட்சி, பாகிஸ்தானைப் போலவே நிலவுவது அபூர்வம். அங்கு பலம் பொருந்தியதாக இராணுவமே திகழ்கிறது. அங்கு இப்போது ஒரு புரட்சி இராணுவக் குழு ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை இராணுவம் கையில் வைத்திருந்தாலும் அந்நாட்டின் சில பகுதிகள் ஆயுதம் தாங்கிய தனிநாடு கோரும் புரட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்நாட்டில் 12க்கும் மேற்பட்ட புரட்சிக் குழுக்கள் உள்ளன. தவிர, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 135 பூர்வீக இனக் குழுக்கள் அங்கு வசித்து வருகின்றன. பில்.ஏ, பி.என்.ஏ., பி.என்.எல்.ஏ., ஆர்.எஸ்.ஓ., எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தீவிரவாத அமைப்புகள் தமது சமூக மக்கள் வாழும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. மியன்மார் அரசின் சட்டம், ஒழுங்கு செல்வாக்கெல்லாம் இப் பகுதிகளில் செல்லுபடியாவதில்லை.

மியாவடி என்ற இடம் தாய்லாந்து – மியன்மார் எல்லையோரமாக அமைந்திருக்கும் வனப்பான காடு சார்ந்த ஒரு நகரம். எல்லையைத் தாண்டி ஐந்து கி.மீ பயணித்தால் தாய்லாந்தின் எல்லை நகரமான மாசொட்டை அடையலாம். இப்பிரதேசம் கரன் தேசிய விடுதலை இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பின் ஆட்சிக்குட்பட்டது. சீன, தாய்லாந்து மற்றும் லாவோஸ் எல்லையோரமாக இந்த தீவிரவாத குழுக்கள் மியன்மாரில் இருந்து செயல்பட்டு வருகின்றன. காடு, மலை, சதுப்புக் காடுகள், இனம் சார்ந்த ரீதியாக மக்களிடம் கிடைக்கும் ஆதரவு என்பனவற்றை மையப்படுத்தி இவை அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

நமது இலங்கை இளைஞர்கள் நூறுபேர்வரை மியாவடி பகுதியில் பணிபுரிவதாக நம்பப்படுகிறது. எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். தாய்லாந்தில் இருந்து மியன்மாரின் மியாவடிக்கு அனுப்பப்படுபவர்கள் கரன் தேசிய விடுதலை இயக்கத்தின் பொருளாதார பிரிவில் சேர்க்கப்பட்டு விடுவதாக அறிய முடிகிறது. இணையவெளி குற்றவாளிகள் என அழைக்கப்படுவோர் உலகம் முழுவதும் உள்ளனர். இணையத்தில் உலாவரும் செல்வந்த ஆனால் அப்பாவிகளை லாவகமாக வளைத்துப் பிடித்து அவர்களின் பணத்தை சூறையாடுவது, அவர்களது இரகசியங்களைத் திருடுவது, மிரட்டி பணம் பறிப்பது இவர்கள் வேலை.

இத்தகைய மியாபடி சைபர் கிரிமினல்களிடம் இந்த இளைஞர்கள், யுவதிகள் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த ‘டேட்டா ஒபரேட்டர்’கள் செய்ய வேண்டிய வேலை எல்லாம், ஐரோப்பிய, ஸ்கெண்டிநேவிய, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பசையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுடன் மிக அன்பான ஒரு தொடர்பை வளர்த்துக் கொள்வதுதான். கொஞ்சலாக பேச வேண்டும். காதலிப்பதாக சொல்ல வேண்டும். அவர்களை உணர்ச்சிப் பிரவாகத்துக்குள் தள்ளி தமது வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்ய அவர்களைத் தூண்ட வேண்டும்.

நேர்மை உள்ளம் கொண்டோர் தொழில் என்ற அடிப்படையில் ஒருவரை மயக்கி, பொய் பித்தலாட்டம் செய்து அவரிடமிருந்து பணம் பறிக்க முற்பட மாட்டார்கள் என்பதால் தான், படித்துவிட்டு போதிய வருமானத்துக்காக முயற்சிக்கும் இலங்கை போன்ற நாடுகளின் இளைஞர்களை இத்தீவிரவாதக் குழு தன் பக்கம் வஞ்சகமாக ஈர்த்து வருகிறது. உண்மையில் இது ஆள்கடத்தல்தான். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் இத் தொழிலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் சொல்கிறபடி நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. ஆனால் இது ஒரு வஞ்சகம். ஏமாற்றுவேலை. பணம் பறிக்கும் செயல் எனக் கருதி இதைத் தொழிலாக செய்ய மறுக்கும்போதுதான் இந்த இணையவெளி மோசடிக்காரர்கள் தமது கோரமுகத்தை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். மறுக்கும், இலக்கை எய்தத் தவறும், வேண்டா வெறுப்பாக ‘கடமை’யை செய்யும் இளைஞர் யுவதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறைக்கப்படுகின்றன. துன்புறுத்தப்படுகிறார்கள். சித்திரவதை செய்யப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். அதாவது, பலவந்தமாக தொழிலைத் தொடர்வதற்கான எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன.

இந்த ஆட் கடத்தல் எவ்வளவு காலமாக நடைபெற்று வந்திருக்கிறது என்று தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்னரேயே, இலங்கையின் ஒரு முன்னணி தொலைக்காட்சி இந்த மியன்மார் சைபர் கிரிமினல்களிடம் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தொடர்பில் ஒரு காணொளியை வெளியிட்டது. அதில் தன் முகத்தை மறைத்துக் கொண்ட ஒரு இலங்கைப் பெண், தான் அனுபவிக்கும் கஷ்டங்களையும், சித்திரவதைகளையும் தெரியப்படுத்தி தன்னையும் ஏனையோரையும் மீட்கும்படி கேட்டிருந்தார். இதன் பின்னரேயே இந்த ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, தாம் வாழும் முகாம்கள், சித்திரவதை செய்யப்படும் காட்சி ஆகிய காணொளிகளும், தகவல்களும் இந்த இளைஞர்கள் மூலம் வெளியாகின. தன் உடலையும் முகத்தையும் கறுப்பு உடையால் மறைத்துக் கொண்டு பேசிய பெண்மணி, தான் யார் என்று தெரியவந்தால் கொலை செய்துவிடுவார்கள் என்ற கூறியது, இந்த இலங்கையர்கள் எத்தகைய பயங்கரமான சூழலில் உள்ளனர் என்பதை உணர்த்தியது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் துன்புறுத்தப்படுவது வழமைதான். ஆனால் மியன்மாரில் நடப்பதோ முற்றிலும் வேறானது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக தாய்லாந்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் எமக்கு எந்த சந்தேகமும் எழவில்லை. நாட்டை விட்டு கிளம்பிவிட்டால் போதும் என்பதாகவே நினைத்தோம் என்று ஒரு இளைஞர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. துபாய் சென்றிருந்த மற்றொரு இலங்கைப் பெண்மணியை சந்தித்த ஒரு சீனப் பெண்மணி, தாய்லாந்தில் நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என ஆசை வார்த்தை கூறி அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதில் இருந்து, நேரடியாக இலங்கையில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையரும் தாய்லாந்து ‘தரவேற்ற’ தொழிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பதை அறிய முடிகிறது. தொழில் செய்யும்படி பலவந்தப்படுத்தப்படும் மற்றொரு பெண்மணி, ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் தமது சம்பள சேமிப்பு சூறையாடப்படுவதாகவும், எட்டாயிரம் டொலருக்கு விலை பேசப்படும் மற்றொரு அழைப்புக்கு விற்கப்படுவதாகவும் கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக தகவல் இல்லையானாலும் அதுவும் இருக்கலாம்.

ஒரு இந்தியத்தகவல், 300 இந்தியப் பிரஜைகள் மியன்மாரில் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. இதே சமயம் மியன்மார் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தன்னால் 32 இலங்கையரை விடுவிக்க முடிந்ததாகவும் பேச்சுவார்த்தைகளை தாம் தொடர்வதாகவும் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக்க பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார். ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு நாடுகள் இந்த சட்ட விரோத ஆட் கடத்தல் தொடர்பாக பேச வேண்டும் என்றும் இவர் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கதேசம், இலங்கை, இந்தியா, பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

மியன்மாரில் சிக்குண்டிருப்பவர்களை விடுவிப்பதில் ஒரு பெரிய சிக்கல் காணப்படுகிறது. யங்கொன்னை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும் இராணுவ அரசுக்கு மியன்மார் முழுவதிலும் ஆட்சி அதிகாரம் கிடையாது. அங்கு வாழும் இனக் குழுக்களை 12க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்புகளே ஆட்சி செய்கின்றன. இத்தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக இயங்குகின்றன. தலைநகரில் உள்ள இராணுவ அரசுக்கு இவை கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதேசமயம் இலங்கை அரசு இராணுவ அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர, இத்தீவிரவாத இயக்கங்களுடன் அல்ல. இந்த இயக்கங்களுடன் மியன்மார் இராணுவ அரசு மோதி, சிக்கியிருப்பவர்களை விடுவிக்கப் போவதில்லை. எனவே பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இவர்களை விடுவிக்க முடியும்.

மியன்மாருக்கான தூதுவர் தான் இதுவரை 32 நபர்களை விடுவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது வாகனம் தீவிரவாத அமைப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு தன் சாரதியை ஏழு நாட்களாகத் தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்திருப்பதை கவனிக்கும்போது, விடுவிப்பதில் காணப்படும் முட்டுக்கட்டைகளை யூகிக்க முடிகிறது. மியன்மாருக்கான ஆட் கடத்தல், எத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது என்பது தெரியாத ரகசியம். சிக்கியிருப்போர் நூறுபேராக இருக்கலாம் என்பது அனுமானம் மட்டுமே. எமது வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மியன்மார் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏனையோரையும் விடுவிக்க முயற்சிப்பார் எனவும் அறிய முடிகிறது. எவ்வளவு தூரம் இது சாத்தியம் என்பது வேறு விஷயம்.

எனினும் இந்த இணையவெளிக் கொள்ளையர்கள் எமது வேண்டுகோளை ஏற்று அனைவரையும் விடுவிப்பார்களானால் அவர்கள் தமது ‘சைபர்’ கொள்ளையை எப்படித் தொடர முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இது ஒரு பெரிய வலையமைப்பு. மியன்மாரின் இராணுவ அரசின் ஒரு பிரிவினர் இச் ‘சைபர்’ குழுக்களுடன் இரகசிய தொடர்புகளை பேணி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்கிரிமினல் குழுக்கள் ஆட் கடத்தல் மாத்திரமின்றி, போதைப் பொருள் கடத்தல், விபசாரம், கசினோக்களை நடத்துதல், மனித அவயங்களை கடத்துதல், வங்கிக் கணக்குகளுக்குள் ஊடுருவி சேமிப்புகளை கொள்ளையிடுதல் போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் சிக்குண்டிருப்பவர்களை விடுவிக்க பெரிய அளவில் அழுத்தம் தரவேண்டியிருக்கும். இதனால்தானம் பிம்ஸ்டெக் அமைப்பு இவ் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது. மியன்மாரில் இலங்கையர்கள் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள் என்று செய்தி வெளியானதும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கை முகவர்களாக செயல்பட்ட குழுவினரை பொலிஸார் கூண்டோடு கைது செய்து உள்ளே தள்ளிவிட்டனர். இந்த சட்ட விரோத ஆட் சேர்ப்பு எங்கெல்லாம் வேர் விட்டிருக்கிறது என்பதில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் செய்யக் கூடியதெல்லாம் இலங்கையின் கதவுகளை அடைப்பது மட்டுமே. சைபர் கொள்ளையர் வலையமைப்பை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மியன்மாரில் என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வழியாக பகிரப்படுத்துவதன் மூலம், எந்தத் தொழில் கிடைத்தாலும் சரி நாட்டைவிட்டுக் கிளம்பினால் போதும் என அவசரம் காட்டுபவர்களுக்கு உண்மை நிலவரத்தை, வெளிநாடுகளில் பச்சை பசேல் என்ற பசுமை மட்டுமல்ல, புதை மணலும் காத்திருக்கிறது என்பதை தெரிவிக்க முடியும்.

அதுவே எமது பணி. உலகெங்கும் சைபர் கொள்ளையர்கள் உள்ளனர். அமெரிக்க உளவு நிறுவனம் உட்பட பல நாடுகளின் உளவு அமைப்புகள் இவர்களைத் தேடி வருகின்றன. எனவே இக் கொள்ளையர்களின் கோட்டையை நாம் தகர்க்க முடியாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பதிவு செய்யப்பட்ட சட்ட பூர்வமான முகவர் நிலையங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளுங்கள் என்ற செய்தியை அழுத்தமாக சொல்வதுதான்!

அருள் சத்தியநாதன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division