Home » வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர்

வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர்

by Damith Pushpika
December 31, 2023 6:18 am 0 comment
  • 02 நாட்களில் 15 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி
  • நல்லடக்கத்தின் பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின் படி 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : ‘தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றி. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தலைமை அலுவலகம் வரை 14 கி.மீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அத்தனை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றி.

ஒரே நாளில் இடங்களை ஏற்பாடு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், அமைச்சர் வேலு அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டனின் இறுதி ஊர்வலம் நடைபெற உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல வழி நெடுக கேப்டனுக்கு வரவேற்பு கொடுத்த அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் நமது கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின் படி 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நமது கேப்டன் செய்த தர்மமும் அவரின் நல்ல எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான் காரணம். அதேபோல் கேப்டன் மறைவிற்கு இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நேரில் மற்றும் போனில் தொடர்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தலைமை அலுவலகம் சிறியதாக இருந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியவில்லை. இறுதி அஞ்சலி செலுத்தவந்த அனைத்து தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நன்றி. ராகுல் காந்தி அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். கேப்டன் கையில் அணிந்திருந்த கட்சி மோதிரத்தை அவருடனே வைத்து நல்லடக்கம் செய்திருக்கிறோம்.

அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல், சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் கைவிரலில் இருக்கும் கட்சி மோதிரம் அகற்றப்படவில்லை. இன்று நாம், நம் தலைவரை இழந்திருக்கிறோம். இந்நாளில் நம் தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயமாக வெற்றிபெறச் செய்து, அந்த வெற்றிக்கனியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை சூளுரைப் போம்.

எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி அமைத்திருக்கிறார்களோ அதேபோல தலைவருக்கும் இங்கு சமாதி அமைக்கப்படும். அவர் நம்மில் ஒருவராக நம்முடன் தான் இருக்கிறார். அவர் சொர்க்கத்தில் இருந்து நம்மை வாழ்த்திக் கொண்டுதான் இருப்பார்’.

ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிபடக்கூடிய கோயிலாக அது இருக்கும் என்று தெரிவித்தார்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division