இந்தியாவில் அடுத்த வருடத்தின் முன்னரைப் பகுதியில் நடைபெறவிருக்கம் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் படுதீவிரமாக களமிறங்கி உள்ளது. ‘இந்தியா’ கூட்டணியை காங்கிரஸ் தூசு தட்டி கையில் எடுத்திருக்கிறது. அந்த சுறுசுறுப்புடன் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கும் காங்கிரஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழுவை இப்போதே அமைத்துவிட்டது காங்கிரஸ்.
பொதுவாக நேரு குடும்பத்தினர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுவது வழக்கம். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் மேடக் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டு 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அறுவடை செய்தார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியிலும் இந்திரா போட்டியிட்டு வென்றார். ஆனால் ரேபரேலி எம்.பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு மேடக் எம்பியாகவே நீடித்தார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது இன்றைய தெலுங்கானாவின் மேடக் தொகுதி எம்.பியாகவே மரணித்தார். இதனை அண்மைய தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்துக்கு பயன்படுத்தியது.
1999 ஆம் ஆண்டு இந்திராவின் மருமகள் சோனியா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பெல்லாரியில் பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை வீழ்த்தினார் சோனியா. ஆனாலும் அமேதி தொகுதி எம்.பி பதவியை தக்க வைத்துக் கொண்டார் சோனியா. 2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் சோனியா போட்டியிட்டு வென்று வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியும் நேரு குடும்பத்தின் தொகுதிதான். சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வென்ற தொகுதி இது. 2004, 2009, 2014 இல் இந்திராவின் பேரன் ராகுல் காந்தி வென்ற தொகுதி. ஆனால் 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். அப்போது கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டு வென்றார். இதனால் இப்போது வயநாடு தொகுதி எம்.பிதான் ராகுல் காந்தி.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சோனியா காந்தி மீண்டும் ரேபரேலியில் போட்டியிட்டால் வெல்வாரா? என்கின்ற சந்தேகங்களை தேர்தல் கருத்து கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
காரணம் இந்தி பெல்ட் எனப்படும் வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது. உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அத்தனை தொகுதிகளையும் பா.ஜ.கதான் அள்ளும் என்கின்றன இந்த கருத்துக் கணிப்புகள். பா.ஜ.கவின் இந்த அலையில் சோனியா தோல்வியைத் தழுவினாலும் ஆச்சரியமில்லை என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதனால் இப்போதே பாதுகாப்பான ஒரு தொகுதியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்காக தேடுகிறார்கள். அப்படியான தொகுதிகளில் ஒன்றுதான் தெலுங்கானாவின் மகபூப் நகர் தொகுதி எனப்படுகிறது. தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி வென்ற கோடங்கல் சட்டசபை தொகுதியை உள்ளடக்கியது மகபூப் நகர் தொகுதி. 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சிதான் இங்கு வாகை சூடியது. இருப்பினும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தற்போது சோனியா காந்திக்காக களப்பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறார். சோனியா காந்தியை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பதன் மூலம் காங்கிரஸில் தமது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் வியூகம்.
பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரசும் நேருக்கு நேர் மோதும் மூன்று மாநிலங்களிலும் காங்கிரசைத் தோற்கடித்திருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, ராஜஸ்தானிலும் சட்டீஸ்கரிலும் ஆட்சியை காங்கிரசிடமிருந்து பறித்திருக்கிறது அக்கட்சி. பா.ஜ.கவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி தெலுங்கானாவில் பெற்ற வெற்றி மட்டும்தான் காங்கிரசிற்கு ஒரே ஆறுதல். இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.கவின் பிடியை இந்த வெற்றிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
தற்போது இந்தியாவின் தேர்தல் வரைபடத்தைப் பார்த்தால், பா.ஜ.கவின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு, மேற்குப் பகுதிகள் ஒரு பக்கமாகவும் பா.ஜ.கவின் ஆதிக்கத்தில் இல்லாத தீபகற்பப் பகுதிகள் மற்றொரு பக்கமாகவும் பிரிவுபட்டிருப்பது தெரிகிறது. இருந்தபோதும், தெலுங்கானாவில் கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்றிருந்த பா.ஜ.க. இந்த ஆண்டு எட்டு இடங்களில் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உறுதியான வெற்றியால் தான் விரும்பிய வகையில் அரசை உருவாக்க பா.ஜ.க. மத்திய தலைமையால் முடியும். இந்த வெற்றியில் பெரும் பங்கு நரேந்திர மோடிக்கே உரியது. மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவிக்கு 2024 இல் போட்டியிடும் அவரது அதிகாரத்தை இந்த வெற்றி உறுதிசெய்திருக்கிறது.
இது ஒருபுறமிருக்க பா.ஜ.கவின் தென்னகக் கனவு, இன்னும் தொலைதூரத்திலேயே இருக்கிறது.
மறுபுறத்தில், மூன்று மாநில தேர்தல் தோல்விக்கு பின் சோனியா குடும்பத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் கேள்விக்குறியாகி விட்டது. இதனால், ராகுலின் இரண்டாவது பாதயாத்திரைக்கு பதிலாக, உபியில் மட்டும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ராகுலுடன், பிரியங்காவும் இடம்பெறுகிறார். முக்கிய பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் ‘இண்டியா’ கூட்டணியுடன் இணைந்தே நடைபெறும். எங்களது முக்கிய கூட்டணியான திமுகவிடம், அதன் தலைவர்கள் கவனமாக பேசும்படியும் கோரியுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பஞ்சாப், மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல் ஆகிய மாநிலங்களில் முக்கிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகா, கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் காங்கிரஸுக்கு செல்வாக்கு உண்டு. இந்த இரண்டின் வடக்கில் 110 மற்றும் தெற்கு மாநிலங்களில் 116 தொகுதிகள் உள்ளன. இத்துடன் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்தால் காங்கிரஸுக்கு சுமார் 250 தொகுதிகளில் பா.ஜ.கவுடன் அல்லது ‘இண்டியாவில்’ சேராத கட்சிகளை எதிர்க்க வேண்டி இருக்கும்.
எஸ்.சாரங்கன்