நூலின் பெயர் -: இஸ்லாமிய சட்டப் பின்னணியில் குடும்பப் பொருளாதாரப் பராமரிப்பு
நூலாசிரியர்: – மிஷ்காத் ஆய்வுக் குழுவினர்
வெளியீடு :- மிஷ்காத் ஆய்வு நிறுவனம், கொழும்பு
மிஷ்காத் ஆய்வு நிறுவனம், காலப் பொருத்தம் கருதி வெளியிடும் மற்றுமொரு கூட்டுப்பணி இது. இஸ்லாத்தின் நெகிழ்வு, முழுமை, காலத்துடன் இணைந்து செல்லல், அனைத்தையும் தழுவிய பூரண வழிகாட்டல் போன்ற சிறப்பம்சங்களின் நடைமுறை உதாரணமாக இந்நூலைக் கருதலாம்.
இஸ்லாமிய வழிகாட்டலுக்கான அடிப்படை மூலாதாரமாகவும் உசாத்துணையாகவும் அதனது ஆதார சுருதியான இறைகட்டளையும் அதன் வழி எழுந்து நின்று வழிகாட்டும் அல் குர்ஆனும் அஸ் ஸுன்னாவும் அமைகின்றன.
இஸ்லாமிய குடும்பம் என்பது வணக்க வழிபாடுகள் நிரம்பிய குடும்பங்கள் மட்டுமல்ல. பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்து உறவுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சுமுகமாக வாழும் குடும்பங்களும் தான். குடும்பங்கள் பிளவுபடக் காரணம் காணி தகராறுகள், பொருளாதார இழுபறிகள், கடன் சார்ந்த விடயங்கள் போன்றனவேயாகும். எனவே குடும்பங்களின் உள்ளக பொருளாதார சீர்கேடுகள் பிளவுகள், இடைவெளிகள், தேவைகள் இனங்காணப்பட்டு அவை நிவர்த்திக்கப்படுமாயின் குடும்பங்கள் பிளவுபடவோ பகைமை வளர்க்கவோ தேவைப்படாது.
அத்தகைய நிலைமைகள் உருவாகாமல் குடும்பங்கள் ஒன்று இன்னொன்றை தாங்கி உதவி உபகாரம் செய்து ஒத்துழைக்கும் வகையில் வழிகாட்டலை இந்நூல் வழங்குகிறது. கூட்டுப்பணி என்பதால் தனி நபரின் சிந்தனையாகக் கருதாமல் நிறுவனத்தின் சிந்தனையாகக் கருத வேண்டும். உண்மையில் சமூகமயமாக்கி ஜனரஞ்சகப்படுத்தி விட வேண்டிய மிகப்பெரும் பணியாக இதனைக் கருதலாம். எனவே உயர் சொகுசு வர்க்கம், மத்திய வர்க்கம், விளிம்பு நிலை வர்க்கம் என்று கூறு போடப்பட்ட சமூக அடுக்குகள் இன்று பணக்கார சொகுசு வர்க்கம், வசதியற்ற ஏழை வர்க்கம் என்று இரண்டாக மாறியுள்ளது. மத்திய வர்க்கமோ மரியாதை நிமித்தம் கை நீட்டவோ கடன் வாங்கவோ வெளியில் சொல்லவோ முடியாமல் அவலத்தை விழுங்கி அடுப்படியில் வைத்து விட்டு வெளியில் வரும் நிலையில் இந்நூல் வெளிவருவது ஓரளவு ஆறுதலாக உள்ளது. மறுபுறம் குடும்பத்தில் ஏனையோரை சுமக்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கும் இது ஆறுதலைத் தருகிறது. இதேபோன்று சமூகம் சார்ந்த ஏதாவது வழிகாட்டல்கள் கிடைப்பின் அவர்களும் நெருக்கடியில் இருந்து சற்று தணிந்து நிம்மதியாக வாழலாம். கௌரவமாக இருக்கலாம்.
இஸ்லாம் உருவாக்க முனையும் அழகிய கட்டமைப்புகளில் பிரதானமானது குடும்பம். முழு நிறைவான தனி மனித உருவாக்கத்தின் நோக்கமே அத்தகைய செழுமையும் போஷிப்பும் கொண்ட குடும்பங்கள் உருவாக வேண்டும். அதன் வழியாக சமூகங்கள் உருவாகி மிகச்சிறந்த ஆரோக்கியமான மாற்றம் உருவாக வேண்டும் என்பது தான். இந்த இஸ்லாமிய போதனைகளை நெறிமுறைகளை கைக்கொள்ளும் குடும்பங்களின் அச்சாணியாக ஆன்மீக வழியில் அமைந்த பொருளாதாரத்துக்குப் பிரதான பங்கும் பணியும் இருப்பது தவிர்க்க முடியாது. குடும்பம் சகல வகையிலும் பலமடைகையில் தான் சமூகம் பலமும் வலிமையும் காணும். பொலிவுடன் இருக்கும். அதன் கற்கள் பலமிழந்து செல்கையில் சமூக நிறுவனம் ஆட்டங்கண்டு இருப்பையும் அடையாளத்தையும் இழக்கும். இறுதியில் சரிந்து விழும். சுவடுகளும் எஞ்சாது. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு தான் ‘இஸ்லாமிய சட்டப் பின்னணியில் குடும்பப் பொருளாதாரப் பராமரிப்பு’ எனும் இந்த நூலை நோக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள செல்வாக்கும் வசதியும் படைத்தவர்கள் உடனடியாக செய்து ஆக வேண்டிய தார்மீக பொறுப்பை பணியை பாரத்தை அதன் பங்கை அழகுற வலியுறுத்துகிறது இந்நூல். குறிப்பாக குடும்ப ஒன்றுகூடல்களின் போது இந்நூல் அறிமுகம் செய்யப்பட்டு குடும்பத்தின் தனவந்தர்களுக்கு அறிவூட்டப்படுமானால் நிச்சயமாக மிகப்பெரும் மாற்றமும் குடும்பங்களுக்கிடையிலான ஆத்மார்த்த உறவும் உரையாடலும் தாங்குதிறனும் பலமடையும். இதுவே இஸ்லாம் எதிர்பார்க்கும் இறுதி இலக்குமாகும்.
இரத்த உறவின் முக்கியம், இரத்த உறவும் பொருளாதாரப் பராமரிப்பும், பொருளாதாரப் பராமரிப்புக்கு உட்பட வேண்டிய இரத்த உறவினர்கள், செலவழித்தலுக்கான வழிகாட்டல்கள், பராமரிப்புக்கான நிபந்தனைகள், பராமரிப்பு உள்ளடக்கும் விடயங்கள், பராமரிப்புக்கு உட்படுவோருக்கு ஸகாத் வழங்கல், குடும்பக் கூட்டு பொருளாதாரப் பராமரிப்பின் சமூக ரீதியான நன்மைகள், குடும்பப் பராமரிப்புக்கான மாதிரித் திட்டம், கேள்வி பதில் என நூல் ரத்தினச்சுருக்கமாக இது குறித்தான நிறைவான ஒரு பார்வையை எமக்கு முன்வைக்கிறது.
ஸகாத், ஸதகா இதர செலவழிப்புக்கான அம்சங்கள் கஞ்சத்தனத்தைப் போக்கி விடுவதுடன் பிறர் குறித்தும் நெருக்கமானவர்கள் குறித்துமான உணர்வை அதிகரிக்கும்.
தொடர்ந்தும் அருமையான நூல்களை மிஷ்காத தர வேண்டும். எம்மை சூழ படிந்து மண்டியிட்டுள்ள அம்சங்களை நோக்க வைத்து அதன் மீது இஸ்லாமிய ஒளி வெள்ளம் பாயச்செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
அஷ்ஷேக்: அஹமத் பிஸ்தாமி