‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் நிகழ்வொன்று இன்று (24) நுவரெலியாவில் நடைபெறுகிறது.
இன்று காலை 9.00 மணிக்கு நுவரெலியா நகரில் ரீகல் திரையரங்குக்கு முன்பாக ஊர்வலம் ஆரம்பமாகி, சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கிப் பயணிக்கும். இந்த ஊர்வலத்தில் 5 ஊர்திகளின் பவனி நடைபெறும். இதில் மலையக மக்களை இலங்கைக்கு அழைத்துவந்த முதலாவது கப்பலான ஆதிலக்ஸ்மி கப்பல் வடிவமைக்கப்பட்டு ஊர்வலத்தில் இடம்பெறும்.
மலையக மக்களின் வாழ்வு, படிப்படியாக பெற்ற வெற்றிகள் ஆகியவையும் ஊர்வலத்தில் கருத்திற்கொள்ளப்படுமென்பதுடன், வெள்ளைக்காரத்துறைமார் போன்ற வேடமிட்டு குதிரையில் நபரொருவர் வருவார். பாடசாலை மாணவர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு நடைபவனியாக வருவர். மலையக மக்களின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிலம்பம், காவடிதப்பு, பறை வாத்தியங்களை இசைத்தவாறு கலைஞர்கள் இதில் பங்கேற்பர்.ஊர்வலமானது புதிய கடை வீதி வழியாக தர்மபால சுற்றுவட்டத்தை கடந்து, நுவரெலியா – பதுளை வீதி வழியாக சினிசிட்டா நகர மண்டபத்தை அடையும். இதன் பின், மேடை நிகழ்வுகள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்கிறார். விசேட அதிதிகளாக இந்திய பிரதித் தூதுவர் சத்யன்ஜல் பாண்டே, கண்டிக்கான இந்திய உதவித் தூதுவர் எஸ்.ஆதிரா, சிறப்பு அதிதிகளாக ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணித்
தலைவருமான மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயில்வாகனம், உதயகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மலையகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த 90 பேர் கௌரவிக்கப்படுவர். கல்வி, கலை, கலாசாரம், பொறியியல், வைத்தியம், சட்டம், சமூகசேவை, ஊடகத்துறை, விளையாட்டு ஆகியவற்றில் உச்சம் தொட்டவர்களும் சுயதொழில் முயற்சியாளர்கள், இலக்கியத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், சிறந்த பெற்றோர் ஆகியோரும் கெளரவிக்கப்படுவர்.
இந்தியாவின் சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்வில் கலந்துகொண்டு இறுதிவரை பயணித்த மலையக மாணவி அசாணி விருது வழங்கி கௌரவிக்கப்படுவார். கிரிக்கெட்டின் உலக சாதனை வீரர் முத்தையா முரளிதரன் சார்பாக அவரது தந்தை முத்தையா, தாய் லக்ஸ்மி முத்தையா ஆகியோர் அவருக்கான விருதை பெறுவர்.
கடந்த காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளையும் வெற்றிகளையும் உலகளவில் கொண்டுசென்ற ஊடகங்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா தினகரன் நிருபர்