Home » பரிசு கொண்டு வருவீர்களா…?

பரிசு கொண்டு வருவீர்களா…?

by Damith Pushpika
December 24, 2023 6:29 am 0 comment

பனிமான்கள் புடைசூழ
மின்மினிகள் கண்ணசைக்க
விண்தாண்டி விரைந்துவரும்
வண்ணத்திரு மேனி உடை
நத்தாரின் தாத்தாவே…

வருடம்தோரும் உமை
வரவேற்கும்
சின்னஞ் சிறார்கள் போல்
இன்னும் ஒரு தொகுதியினர்
காஸாத் தெருவெங்கும்
உருக்குலைந்து கிடப்பதுவும்
உடமைகளுக்கு இடைவெளியில்
இடர்பட்டுக் கத்துவதும்
உங்கள் காதுகளுக்கேனும்
கேட்கவில்லையா…?!

சமதானத் தூதுவரே
ஜனனித்த பெரு நிலத்தின்
ஒரு தளத்தில்
குருவிச்சைக்கு இடம்கொடுக்க
அது பெரு நச்சாய் உருவெடுத்து
அடைக்கலத்தை அழித்திட
அகிலமே அமைதிகாத்த
உண்மைகள்
உங்கள் புலன்களுக்கேனும்
புரிந்துகொள்ள முடியவில்லையா…?!
ஐந்தறிவு ஜீவனுக்கும்
ஆதரவாய்
ஜீவகாருண்யம் காட்டும்
புத்தி ஜீவிகளின்
நீலச்சிலுவைப் புத்தகங்களிலேனும்
பதிந்திட
இந்த நீண்ட துயரின்
நீளமோ ஆழமோ
இன்னும் போதவில்லையா…?!

ஆதிமுதல் அப்பூமி
ஆணியில் அறையப்படும்
அவலத்தை
எடுத்துரைப்பதாலோ
இதைத் தடுத்துரைப்பதாலோ
உங்கள் காகிதங்களின்
கனதி கூடுமென்றோ -இல்லை
அதன் கையிருப்புத் தீருமென்றோ
நீங்களும் கண்டுகொள்ளாமல்
சென்றுவிடுவீர்களா…?!

தமை அரவணைக்கும் உறவுகள்
உயிரிழந்தது உணராமல்
தோள் குலுக்கும்
சிறு பிள்ளைகளும்
மரணங்களின் ரணங்களுக்குள்
தன்பிள்ளை
தப்பிப் பிழைத்திருக்கும்
எனும் நப்பாசையின்
அழுகுரலோசைக்குள்
கசிந்து உருகும் உயிரின்
கண்ணீர் வலிதொட்டு எழுதுகிறேன்…!
நீங்களேனும்
கண்டுகொள்ள மாட்டீர்களா…?!

பல வர்ண மையிட்டோ
பல்வேறு சொல்லிட்டோ
சொல்லொணா சோகங்களை
இனியும் சொல்லத் தேவையில்லை
உயிர் பிரிந்த பிள்ளைகளின்
சிதறித் தெறித்திருக்கும்
சிறு இதயங்களின்
குருதிக் கறைதொட்டு
இதை எழுதுகிறேன்…!
கதையல்ல நிஜமென்பதை
நீங்களேனும்
நின்றுபார்க்கமாட்டீர்களா…?!

பாவைகளெல்லாம்
பாதையெங்கும்
தமைத் தூக்கிச் சுமந்த
பாலகர்களின்
குருதிதோய்ந்த
பரிதாபத்தினையும்
தாம் உரிமம் இழந்த
உண்மைதனையும்
உயிரிருந்தால்
ஊரறியக் கதறி அழுது
உமக்கறியத் தந்திருக்கும்
வாய்திறக்க வாய்ப்பிருந்தால்
வாழ்விழந்த குழந்தைகளின்
வலி சொல்லி அழுதிருக்கும்…!
போலியெல்லாம் ஆட்சி செய்யும்
பொல்லாத உலகிதில்
உண்மையின் காட்சியெல்லாம்
கண்டுகொள்ள மாட்டீர்களா…?!

இறந்த காலம் மட்டுமே
என்றும் இருப்பதாய்க் கருதும்
இச்சிறார்களுக்கு
சிறு புன்னகையொன்று
சிந்தக் காரணமாக
இந்தப் பூமிப்பந்தில் எவரும்

புண்ணியம் புரியவில்லை போலும்…
எல்லைக் கோடுகள்
எல்லாம் தாண்டி
எங்கோ இருந்து வருபவரே
இந்தப் பிஞ்சுப் பிள்ளைகள்
கொஞ்சமேனும் புன்னகைக்க
காரணம் கொண்டு வருவீர்களா…?!

ஷினாஸ் காகிதம் அனாமிகா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division