இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் மூன்று அணித் தலைவர்களை நியமிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழு எடுத்திருக்கும் முதல் முடிவு இது தான்.
இதனை ஒரு அதிரடி முடிவு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து அணியின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது இயல்பானது. இந்தப் போக்கிலேயே மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இருந்தே ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் தலைமை குறித்து பரவலாக கேள்விகள் எழுந்து வந்தன. அணி தொடர்ந்து சோபிக்கத் தவறியது மற்றும் தனிப்பட்ட முறையில் அவரும் சோபிக்காமல் இருந்தது இதற்குக் காரணம்.
மறுபுறம் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவும் கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டு காலமாக அணித் தலைமையில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி பேசி வருகிறார். பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான முந்தைய தேர்வுக் குழுதான் அவரை கட்டாயமாக தலைமை பொறுப்பில் தக்கவைத்து வந்தது.
இந்த நிலையில் குசல் மெண்டிஸிடம் ஒருநாள் அணித் தலைவர் பொறுப்பையும் வனிந்து ஹசரங்கவிடம் டி20 அணித் தலைமை பொறுப்பையும் வழங்குவதற்கு தேர்வுக் குழு தீர்மானித்திருக்கிறது. இந்த இரு அணிகளுக்குமான உப தலைவராக சரித் அசலங்கவை தேர்வுசெய்வதற்கு முடிவுசெய்திருக்கிறது.
அண்மைய எதிர்காலத்தில் இலங்கைக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லாததால் புதிய டெஸ்ட் அணித் தலைவரை தேர்வு செய்வது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதற்கு தனஞ்சய டி சில்வாவை தலைவராகவும் குசல் மெண்டிஸை உப தலைவராகவும் நியமிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
அணியில் இருக்கும் திறமையான வீரர்தான் அணித் தலைவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி என்றால் சச்சின் டெண்டுல்கரும், பிரையன் லாராவும், விராட் கோஹ்லியும் சிறந்த அணித் தலைவர்களாக இருந்திருப்பார்கள்.
தலைமைக்கான பண்பு, ஆளுமை என்பது பிரத்தியேகமானது. 2019 ஆம் ஆண்டு தசுன் ஷானக்கவை அணித் தலைவராக நியமித்தபோது அவர் தேர்ந்த வீரராக இருக்கவில்லை. ஒரு பலவீனமான அணியை கட்டியெழுப்பும் பொறுப்பே அவருக்கு பெரிதாக இருந்தது. அவர் ஓரளவுக்கு அதனை சாதித்துக் காட்டினார்.
என்றாலும் தற்போதைய சூழலில் தலைமையில் மாற்றம் ஒன்று தேவை என்று பெரிதாக உணரப்படும்போது, அவர் செல்லுபடியானவராக இல்லை.
டெஸ்ட் அணித் தலைமையும் அப்படித்தான். திமுத் கருணாரத்ன பிரத்தியே டெஸ்ட் வீரராக அடையாளம் காணப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு தினேஷ் சந்திமாலிடம் இருந்து பறிக்கப்பட்ட தலைமை பொறுப்பு கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை டெஸ்ட் அணி சற்று வலுவானதாகவே இருந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் திமும் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோதும் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 35 வயதாகும் திமுத் கருணாரத்ன இளையவர் ஒருவருக்கு அந்தப் பொறுப்பை வழங்குவது நல்லது என்று நினைக்கிறார். அவரின் நினைப்புடன் புதிய தேர்வுக் குழு ஒத்துப்போவதாகத் தெரிகிறது.
உண்மையில் இலங்கை அணியின் அடுத்த தலைமை பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று அனைத்து பொருத்தங்களுடனும் குறிப்பிட்டு ஊகிக்கக் கூடிய ஒருவர் இருக்கவில்லை.
குசல் மெண்டிஸ் அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீரராக இருந்தபோதும் அவர் தொடர்ச்சியாக சோபித்து வரும் வீரராக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த காலத்தில் நடத்தைப் பிரச்சினையால் போட்டித் தடை வரை சென்றவர் என்பது ஒரு கரும்புள்ளி.
என்றாலும், அண்மையில் நடந்த உலகக் கிண்ணத்தில் தசுன் ஷானக்க காயமடைந்தபோது குசல் மெண்டிஸிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. எஞ்சிய போட்டிகளில் தலைமை ஏற்ற மெண்டிஸிடம் நிரந்தரமாக தலைமைப் பொறுப்பை வழங்க தேர்வுக் குழு தீர்மானித்திருப்பதன் தர்க்கம் புரிகிறது.
என்றாலும் அவர் உலகக் கிண்ணத்தில் அணித் தலைவராக செயற்பட்ட 7 போட்டிகளில் இலங்கை அணி இரண்டில் மாத்திரம் வென்று மற்ற ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. உலகக் கிண்ணத் தொடரில் அதுவரை அபாரமாக துடுப்பெடுத்தாடி வந்த குசல் மெண்டிஸ் தலைமை ஏற்றபின் துடுப்பாட்டத்திலும் தடுமாறினார்.
அங்கு நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில், விராட் கோஹ்லி 49 ஒருநாள் சதங்கள் பெற்று சச்சினின் சாதனையை சமன் செய்தது குறித்து கோஹ்லிக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு “நான் ஏன் அவரை வாழ்த்த வேண்டும்?” என நையாண்டியாக பதில் கூறியிருந்தார். அது சமூக ஊடகத்தில் வைரலானது.
குசல் மெண்டிஸின் பதில் சரியாக இருந்தபோதும், ஊடகங்களை எதிர்கொள்ளும்போது அணித் தலைவராக முதிர்ச்சியுடன் செயற்பட வேண்டும். அதனை குசல் மெண்டிஸே இலங்கை வந்த பின் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த பின்னணியிலேயே குசல் மெண்டிஸுக்கு ஒருநாள் அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
என்றாலும் இலங்கை அணியில் இருக்கும் அனுபவ வீரர்களில் ஒருவர், நிரந்தமாக அணியில் இடம்பிடித்து வருவபவர், சில சந்தப்பங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர், அவரைத் தாண்டி அணியில் அனுபவம், திறமையான வீரர் இல்லாதது என்று குசலுக்கு அணித் தலைமையை வழங்குவதற்கு ஏகப்பட்ட காரணிகள் பொருந்திப் போகின்றன.
மறுபுறம் வனிந்து ஹசரங்கவை டி20 அணித் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது அந்த வகை கிரிக்கெட்டின் போக்கு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு என்று கருதலாம்.
வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட்டில் சிறப்பு மிக்க வீரர், ஐ.பி.எல். தொடக்கம் உலகெங்கும் நடக்கும் டி20 லீக் ஆட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார். அந்த வகை கிரிக்கெட்டில் அவரது அனுபவம் முக்கியமானது.
சர்வதேச கிரிக்கெட்டில் தலைமை பொறுப்பேற்று அனுபவம் இல்லாதபோதும் கடந்த லங்கா பிரீமியர் லீக்கில் சம்பியன் கிண்ணத்தை வென்ற பி லவ் கண்டி அணியின் தலைவராக வனிந்து செயற்பட்டார். அடுத்த ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் வனிந்துவின் நியமனம் தீர்க்கமானது.
ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டிருப்பது தவிர்க்க முடியாத ஒரு முடிவு. அவர் சர்வதேச போட்டிகளில் தலைமை பொறுப்பு ஏற்ற அனுபவம் இல்லாதபோதும் முதல் தர மற்றும் கழக மட்ட போட்டிகளில் தலைமை ஏற்ற அனுபவம் பெற்றவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டால் அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏற்கனவே இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் உப தலைவராக செயற்பட்டு வந்த 32 வயதான தனஞ்சய டெஸ்ட் அனுபவம் பெற்ற முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு அணித் தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். மூன்று வகை கிரிக்கெட்டின் போக்குகள் இடையே இடைவெளி அதிகரிப்பதால் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் பொருத்தமான வீரர்கள் என்பது காலப்போக்கில் குறைந்து வருகின்றனர்.
எனவே தனித்தனி அணித் தலைவர்கள் நியமிக்கப்படும் போக்கு அதிகரித்திருக்கிறது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஆடி வந்த இந்தியா கூட தற்போது தனித்தனி தலைமைகளை நியமிப்பது பற்றி ஆலோசித்து வருகிறது.
என்றாலும் முன்னணி அணிகளை பார்த்தோம் என்றாலும் ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாளுக்கு ஒரு தலைவர் மற்றும் டி20க்கு வேறு தலைவர் அல்லது ஒருநாள் மற்றும் டி20க்கு ஒரு தலைவர் டெஸ்டுக்கு வேறு தலைவர் என்று இரண்டு தலைவர்களையே நியமித்து வருகின்றன.
மேற்கிந்திய தீவுகள் அணியே மூன்று தலைவர்களை நியமித்திருப்பதோடு தற்போது இலங்கையுடன் பாகிஸ்தானும் இந்தப் போக்கிற்கு மாறியிருக்கிறது. இது மூலோபாய ரீதியான திட்டம் என்பதற்கு அப்பால் தலைமை பஞ்சம் அல்லது ஆளுமை பஞ்சமாக பார்க்க வேண்டி இருக்கிறது.
என்றாலும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு ஒரு நிரந்தரமான தலைவர் இருந்ததில்லை. தசுன் ஷானக்க, திமுத் கருணாரத்ன அணித் தலைவர்களாக செயற்பட்டதற்கென்ன ஒரு தொடரில் இருந்து மற்ற தொடருக்கு அணித் தலைவராக நியமிக்கப்படுவார்கள் என்று நூறு வீதம் உத்தரவாதம் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை அணிக்கு மொத்தம் 14 வீரர்கள் அணித் தலைவர்களாக செயற்பட்டிருக்கிறார்கள். இவர்களில் குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்ன, சாமர கப்புகெதர போன்ற வீரர்களுக்கு எதிர்காலத்தை எதிர்பார்த்து தலைமை பெறுப்பு வழங்கப்பட்டபோதும் பெரிதாக சாதிக்கவில்லை.
எனவே, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டதற்கு என்ன அது நிரந்தரம் என்று எதிர்பார்க்க முடியாது.
எஸ்.பிர்தெளஸ்