Home » அறிவின் மேன்மை

அறிவின் மேன்மை

by Damith Pushpika
December 24, 2023 6:00 am 0 comment

அறியாமைத் தீயில் அகப்பட்ட வாழ்க்கைப்
பறிபோகு முன்பே படிப்பாய் – நெறியறிந்து
கொண்டாரைப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டேநீ
பண்புடனே வாழப் பழகு

பழகுவா ருள்மனம் பார்த்தன்பு நாட்டும்
உழவனா யுன்னை உயர்த்து – அழகெனக்
காண்பதிலா பத்தும் கலந்திருக்கும் எச்சரிக்கை
வேண்டும் எதிலுமே இங்கு

இங்கிருக்குங் காலம் இயற்கை
எமையெழிலாய்
தங்கிச் செலவிட்ட தற்காலம் – அங்குசெல
முன்னுனை ஆட்டிவைக்கும் மோகத்தைக் கொன்றழித்துச்
சென்றுவிட லொன்றே சிறப்பு

சிறப்புடன் வாழ்தல் சிறப்பல்ல, உன்னால்
சிறப்பற்றார் வாழ்தல் சிறப்பே – உறவுகள்
இல்லா தவர்க்காய் இருப்பதைத் தந்துதவிச்
செல்வதுவே செல்வச் சிறப்பு

சிறப்பெனும் பேரில் சிலரிங்கு செய்யும்
அறமற்ற செய்கை அகற்று – நிறம்மாறாப்
பச்சோந்தித் தன்மை படர்ந்திட வென்றேநீ
இச்செகம் மாற்ற இயங்கு

இயங்கிட வைக்கும் இறைவனைப் போற்றிச்
செயலாற்று வார்க்கின்பம் சேரும் – தயக்கங்கள்
போக்கித் தலைநிமிர்த்தப் போராடும் உன்னையே
தூக்கிவைப்பான் வாழ்வில் தொடர்ந்து

தொடர்கதை போலே தொடர்ந்துனை வாட்டும்
இடர்களை வோனே இறைவன் – திடமொடு
நெஞ்சை நிமிர்த்தி நிலையாகப் போராட
அஞ்சாதே! காப்பான் அவன்

அவன் காப்பா னென்று அனவர்தம் குட்டிச்
சுவர்மீ தமர்தல் சுகமோ – கவனம்
புவனத்தில் உன்னைப் புடம்போட்டு நீயே
எவனுக்கும் தீயாய் எரி

எரிகின்றத் தீயில் எடுக்கின்ற சேட்டைப்
புரிகின்றப் பேர்கொண்ட பூமி -மரியாதைக்
காட்டும் மனிதர்கள் கால்செல்ல நல்வழிக்
கூட்டிச் செலக்காண்பாய் கூர்ந்து

கூர்ந்து கவனிக்கும் கொள்கை உனக்கிருப்பின்
சேர்ந்து நடைபோடும் செல்வாக்கு – ஊர்ந்தே
செலுமாமை வென்றிடும் ஓட்டமாய் வாழ்வை
அலுப்பின்றி ஓட்டும் அறி.

மெய்யன் நடராஜ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division