Home » VAT அதிகரிப்பு வரமா? சாபமா?

VAT அதிகரிப்பு வரமா? சாபமா?

by Damith Pushpika
December 24, 2023 6:00 am 0 comment

இலங்கையின் பெறுமதி சேர் வரி (VAT) 01 ஜனவரி 2024 முதல் 15%இல் இருந்து 18% ஆக அதிகரிப்பதோடு VAT வரம்பு ரூ. 60 மில்லியனாக குறைக்கப்பட உள்ளது. 138 பொருட்களில் 95 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட VAT வரி விலக்குகளை நீக்குவது பணவீக்கத்தை 2.5% அதிகரிப்பதுடன் இதனால் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இரண்டாவது தவணையின் இறுதி தீர்மானம் 12.12.2023 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. IMF கடனின் இரண்டாவது தவணையான $300 மில்லியனுக்கு இன்று ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் VATக்கான திருத்தங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியின் பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெறுமதி சேர் வரி (VAT) செலுத்த வேண்டிய வரம்பை ரூ.80 மில்லியனில் இருந்து 60 மில்லியனாக குறைப்பதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.15% வருமான வளர்ச்சியையும் அரச வருவாயில் ரூ.40 ஆயிரம் கோடி வளர்ச்சியையும் அரசு எதிர்பார்க்கின்றது.

மேலும், 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் / பட்ஜெட்டில் (Budget) ஜனவரி 2024 இல் VAT விகிதம் 18% வரை அதிகரிக்கப்படும் என்றும், சுகாதாரம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான பொருட்கள் தவிர VAT விலக்குகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நிலையான VAT விகிதத்தின் அடிப்படையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய சக நாடுகளுடன் இலங்கையைக் கொண்டு வருகின்றது. பெறுமதி சேர் வரியை (VAT) 15%ல் இருந்து 18% ஆக அதிகரிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.72% வருமான வளர்ச்சியையும் அரச வருவாயில் ரூ. 227 பில்லியன் வளர்ச்சியையும் அரசு எதிர்பார்க்கின்றது.

நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.4% ஆக இருந்ததால் பணவீக்கம் 2.5% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பணவீக்கம் CBSL இலக்கான 5% ஐ விட அதிகமாக இருக்கும்.

அரச வருமானம் அதிகரிப்பு

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. வரிக் கொள்கைகளை திருத்துவதன் மூலம் தற்போதைய $3.8 பில்லியனில் இருந்து கையிருப்புகளை $5-6 பில்லியனாக உயர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அடுத்த வாரத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்க சாதக நிலைமையாகும். ஜனவரி 01, 2024 முதல் புதிய வரி முன்மொழிவுகள் IMF இலக்குகளுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 முதல் ஒன்பது மாதங்களில் அரச வரி வருவாயில் 51% அதிகரிப்பை அளித்துள்ளது. இருப்பினும் 18% VAT அதிகரிப்பு ஒட்டுமொத்த நுகர்வு குறைவதற்கு வழிவகுக்கும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு VAT வரி

கையடக்கத் தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுகள் (SMS in fixed telephone networks) VATக்கு உட்பட்டுள்ளன.

பெற்றோல் மற்றும் டீசலுக்கு VAT வரி

பெற்றோல் மற்றும் டீசலுக்கு பெறுமதி சேர் வரி அறவிடப்படும். இருப்பினும் கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்பட மாட்டது.

ஒரு லீற்றர் டீசல் தற்போது 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 18 சதவீதமாக VAT வரி விதிக்கப்பட்டதன் பின் ஒரு லீற்றர் டீசலின் விலை ஜனவரி முதல் 63 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

சுற்றுலா தொடர்பான சேவைகள்

உள்வரும் சுற்றுப்பயணங்கள் தொடர்பான சேவைகள் மற்றும் உள்நாட்டில் இயங்கும் ஹோட்டல்கள் உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் ஹோட்டல் தங்குமிடம் மற்றும் ஏதேனும் ஒரு விளையாட்டு நிகழ்வு அமைப்பாளர் அல்லது விளையாட்டுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு புதிதாக அமுல்படுத்தப்படும் VATற்கு உள்வாங்கப்படும்.

இது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகரிக்க செய்து இறுதியில் வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

VAT வரி திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சேவைகள்

விலக்குகளில் மருந்துகள், ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் (சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், மற்றும் காது கேட்கும் கருவிகள்), அரிசி மா, கோதுமை மா, பாண், காய்கறிகள், பழங்கள், திரவப் பால், குழந்தைப் பால் மா மற்றும் “சுவாசரிய” (Suwasariya) அம்புலன்ஸ் சேவை ஆகியவை அடங்கும்.

மருத்துவமனை அறைக் கட்டணம் தவிர மருத்துவமனை பராமரிப்பு சேவைகள், இரசாயன உரங்கள் தவிர மற்ற உரங்கள் மற்றும் கைத்தறி ஆடைகளும் VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் போக்குவரத்து வாகனங்கள் தவிர, பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவையும் VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆகியவற்றுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளிற்கு நிபந்தனைக்கு அமைவாக VAT வரி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பெறுமதி சேர் வரிக்கு (VAT) உட்படுத்தப்படும். கடற்றொழில் துறை ஏற்கனவே சீர்குலைந்துள்ளது. 18 வீத பெறுமதிக்கு சேர் வரியை (VAT) நடைமுறைப்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும்.

அலைபேசி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் VAT விதிப்பினால் மேலும் பாதிப்பு

சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான அலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சட்ட ரீதியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது. மேலும் சட்டவிரோதமான வழிகளில் அலைபேசிகள் கொண்டு வரப்படுவதனால் நாட்டுக்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதிசேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சட்டரீதியாக அலைபேசி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும். சட்ட ரீதியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் மூலம் வருடாந்தம் 52 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்படும் அலைபேசிகளினால் நாட்டுக்கு 96 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் எரிவாயு, குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும்.

மின்சாரக் கட்டணத்தில் வரி சேர்க்கப்படாது என அரசு கூறுகின்றது. ஆனால், நாட்டின் மொத்த மின் உற்பத்திக்கு 40 சதவீதம் எரிபொருளே பயன்படுத்தப்படுகின்றது. எனவே டீசல் மீதான VAT வரி விதிக்கப்பட்ட பின்னர், மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்திற்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களும் நிச்சயமாக அதிகரிக்கும். இதன் தாக்கத்தினை குறைப்பதற்கு 500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700 மெகாவாட் (MW) சோலார் பவர் திட்டத்தில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 1,727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தித் திட்டம் நிறுவப்படவுள்ளது.

மேலும் உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது அடுத்த மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதனாலும் இலங்கை மின்சார சபை (CEB) மின் உற்பத்தியில் நீர்மின்சாரத்தை அதிகபட்சமாக பயன்படுத்தியுள்ளதாலும், மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. மின்சார கட்டணத்தைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலைக் குறைப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தில் மின் கட்டண குறைப்பை எதிர்பார்க்கலாம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும், VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மின் கட்டணத்தை குறைப்பதில் நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்தை இணைத்து ஒரு சூத்திரத்தின்படி குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே, டீசல் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர், நீர்க் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும். இதேவேளை, உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கும் VAT வரி விதிக்கப்படும். இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 680 ரூபாவுக்கும் அதிகமாக விலை உயர்த்தப்படும்.

VAT வரி குறைக்கப்படலாம் : ஜனாதிபதி அறிவிப்பு

கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் VAT வரியைக் குறைக்க முடியும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் அரசிற்கு தாமதம் ஏற்பட்டது. அதனால் வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 15 சதவீதமாகக் காணப்பட்ட VAT வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அறிவித்துள்ளார். மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

VAT வரி தொடர்பில் போலியான தகவல்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பரப்பப்படுகின்றன. வரவு மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அரசாங்கத்தை நிர்வகித்துச் செல்ல முடியாது.

யார் ஆட்சியைப் பொறுப்பேற்றாலும் இரு வாரங்களுக்கு மேல் அவர்களால் ஆட்சியைக் கொண்டு செல்லவும் முடியாமல் போகும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் என்பவை எமக்கு கடன் சலுகைகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் VAT வரியைக் குறைக்க முடியும். அதற்கமைய முடிந்தளவு மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division