தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்கள் கிழக்கில் களைகட்டுவது முஸ்லிம் தலைமைகளின் பலவீனத்தைக் காட்டுவதாகக் கருத முடியுமா? முஸ்லிம் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் அனுரகுமார திஸாநாயக்கவின் உரைகள் அங்கு உன்னிப்பாக நோக்கப்படுகிறது. மாறி மாறி முதலாளித்துவ அரசுகளுக்கு சேவகம் செய்த முஸ்லிம் தலைமைகள், இன்னும் ஏமாற்று அரசியலுக்கே முயல்வதாகச் சாடுகிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு எதிராக கட்சி விசுவாசிகள் குரல் கொடுக்கவில்லை.
அஷ்ரஃபின் காலத்தில் முஸ்லிம் தனித்துவத்தின் கோட்டையாகத் திகழ்ந்த கிழக்கு, இன்று கதவுகள் திறந்த வீடாக மாறி விரும்பியோர் வந்துபோகும் உறைவிடமாக உள்ளது. தனித்துவ தலைமைகளின் ஆளுமைகளுக்கு விழுந்த பலத்த அடியிது.
தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையிலும் முஸ்லிம் கட்சிகள் இந்த அந்நிய கட்சிகளின் ஊடுருவலை கண்டுகொள்ளவில்லை. சுய மோதல்கள் முடிவுறாத நிலையில், மாற்றுக் கட்சிகளின் காலூன்றல்களை கண்டுகொள்ளும் மனநிலையில் இக்கட்சிகள் இல்லை. எம்.பிக்களை கட்டுப்படுத்த முடியாதமை, பாராளுமன்றத்தில் பகை தீர்க்கும் அரசியலில் ஸ்ரீலங்கா முங்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் மோதிக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடுநிலை வாக்களார்களின் சிந்தனைகளைக் கிளறத் தொடங்கியுள்ளன. இதனால், கிழக்கில் வேறு கட்சிகள் எதைச் செய்தாலும் தேர்தல் காலத்தில் நம் கைகளே ஓங்குமென கணிக்க முடியாதுள்ளது. இப்படிக் கணிக்கப்பட்ட அல்லது கருதப்பட்ட காலம் இன்றில்லை. இதை, முஸ்லிம் தலைமைகள் புரிவது அவசியம்.
விடுதலை அரசியல் தோற்றுப்போனதால் தனித்துவ அரசியலிலும் தேய்வு ஏற்பட்டுள்ள சூழலிது. இந்நிலையிலும், தோல்வி அரசியலில் துளிர்க்கவே தமிழர் தரப்பு முயற்சிக்கிறது. இந்த தைரியம் முஸ்லிம் தலைமைகளிடம் இல்லை. உரிமை அரசியல், அபிவிருத்தி அரசியலாக கீழிறங்கியமைக்கு தலைமைகளைக் குறைசொல்ல முடியாதுதான். ஆனாலும், காணிப் பிரச்சினைகளுக்காவது இந்தத் தலைமைகள் ஒன்றுபடுவதாக இல்லை. ஒலுவில் பொன்னன்வெளி கிராமம் அஷ்ரஃபால் 1997இல் மீட்கப்பட்டபோதிருந்த பேரம்பேசும் அரசியல் பலம் இன்றில்லை. இதனால், காணி மீட்பு விடயத்திலாவது முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைவது அவசியம். வட்டமடுக்காணி, பொத்துவில் முஹுது விகாரை விவகாரம் உள்ளிட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் பூர்வீகங்களைப் பாதுகாக்க என்ன வழியென முஸ்லிம் சமூகத்தில் அலசப்படுகிறது. இதுவரைக்கும் இந்த வழிகள் வெல்லப்படாமை, அபிவிருத்தி அரசியலையாவது செய்யும் அளவுக்கு அரசியல் பலம் இல்லாமை எல்லாம், முஸ்லிம் அரசியலின் இயலாமையாகவே நோக்கப்படுகிறது.
அரசாங்கத்தை ஆதரிக்கும் தேசிய காங்கிரஸால் கூட சாதிக்குமளவு நிலைமைகள் இல்லை. இவற்றையே, அனுரகுமார திஸாநாயக்க நன்றாகப் பயன்படுத்துகிறார். அண்மைய ஆய்வுகள், தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி 20 வீதத்தால் உயர்ந்துள்ளதை காட்டுகிறது. நாட்டின் எந்தப்பாகத்தில் இந்த அதிகரிப்பு என்பது தெரியவில்லை. ஒருவாறு கிழக்கில் அதிகரித்திருந்தால், முஸ்லிம் தலைமைகளின் பிரதிநிதித்துவத்துவமே பாதிக்கப்படும்.
தேசிய தேர்தல்களுக்கு சகல கட்சிகளும் தயாராக நேரிட்டுள்ள நிலையில், முஸ்லிம் அரசியலும் ஆரூடங்கள், ஐதீகங்களை நம்பியா களங்குதிக்கப்போகின்றன? அல்லது ராஜபக்ஷக்களை எதிர்க்கும் களத்திலேயா குதிக்கப்போகின்றன? எவற்றுக்கும் பதிலளிக்க முடியாதவாறுதான் நிலைமைகள் நீள்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஒரு கூட்டு அமைந்து,
ராஜபக்ஷக்களின் வழி நடத்தலில் ஒரு கூட்டும் சஜித் தலைமையில் இன்னொரு அணியும் களமிறங்கினால், நிச்சயம் முஸ்லிம் தலைமைகளின் நிலைமை பரிதாபமாகவே அமையும். இந்த முக்கூட்டுக்களால் நாடிபிடித்தறியும் நிலைமைகளும் இல்லாமலாகலாம். இவ்வாறின்றி பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் கள நிலைமைகள் இதைவிடவும் சிக்கலாகும்.
தேசிய கட்சிகளின் ஒத்துழைப்பின்றி தனித்துப் போட்டியிட்டு கிழக்கில், எம்.பிக்களைப் பெறுவது இயலாமல் போயுள்ளது. அதிலும், அம்பாறை மாவட்டத்தில் இது துளியும் சாத்தியப்படாது. இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் தலைமைகளின் முதுகெலும்பு இங்கேயே உள்ளது. இதனால், மும்முனைப் போட்டி உச்சமடைந்து பிரதிநிதித்துவம் பறிபோகலாம். இம்மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஒரு எம்.பியைப் பெறாவிடினும், முஸ்லிம் தலைமைகளின் வாக்குகளில் சிதைவை ஏற்படுத்தி பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யலாம். இவற்றைப் போக்க விழுப்பு, விவேகம் மற்றும் விட்டுக்கொடுப்புக்களுடன் முஸ்லிம் தலைமைகள் பணியாற்றுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
சுஐப்.எம்.காசிம்-