தென்னிந்தியாவின் ஷீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சி நிறுவனம் இவ்வருடம் ஜூலை மாதம் ஆரம்பித்து நடத்தி வந்த சிறுவர்களுக்கான சரிகமப – பருவம் 3 (Little Champ Season 3) இசைப் போட்டி நிகழ்ச்சியில் ஏழு வயது முதல் பதின்மூன்று வயது வரையிலான சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த சிறுவர்களுடன் இணைந்து கலந்துகொண்ட எங்கள் நாட்டைச் சேர்ந்த இரு சிறுமிகளில் ஒருவர் (Title Winner) என்ற முதன்மை நிலைக்கு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி இப்போது பேசு பொருளாகியிருக்கிறது. அந்த சாதனைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன் பலரது பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றைய சிறுமி புசல்லாவ நயப்பன தோட்டத்தைச் சேர்ந்த அசானி கனகராஜ். இவர், நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டொரு வாரங்கள் கடந்த நிலையிலேயே இணைந்து கொண்டபோதிலும், வாராவாரம் பலவித தடைகளையும் தாண்டி, போட்டியின் இறுதிச் சுற்றுக்குரிய போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படும்வரை நிகழ்ச்சியுடன் இணைந்திருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் நல்ல குரல்வளமும், பாடுவதில் திறமையும் கொண்டிருந்தமையால் நடுவர்களினதும், வாராவாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களினதும் பாராட்டைப் பெற்றுவந்தவர். இப்போது இலங்கை திரும்பியிருக்கும் இவருக்கு சிறப்பான வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஒருவர் பிறக்கும்போதே, அவரது விதியும் நிர்ணயிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே இந்த விஷயமும் அமைந்திருக்கிறது. அதாவது கில்மிஷா சரிகமப நிகழ்ச்சியில் பாடிய முதலாவது பாடலைக் கேட்டுவிட்டு, நடுவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாசன் சொன்ன வார்த்தைகள் கில்மிஷாவின் வெற்றியை அன்றைய தினமே நிச்சயம் செய்துவிட்டது என்றே சொல்லவேண்டும். கில்மிஷா பாடிய முதற்பாட்டு “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…” என்பதாகும். பாடலைப் பாடி முடிந்ததும் ஸ்ரீநிவாசன் கில்மிஷாவிடம் பெயர் என்ன என்று கேட்டு அறிந்த பின்னர், எந்த ஊர் என்று கேட்கிறார். கில்மிஷா “ஸ்ரீலங்கா சேர்” என்கிறார். “ஓ! இலங்கையா? இலங்கையில் எந்த ஊர்?” என்று மீண்டும் கேட்கிறார். “ஜெவ்னா” என்று பதில் சொல்கிறார் கில்மிஷா. “ஓ! யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குயில் சத்தம்.
உனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது – கடைசி வரைக்கும் போவதற்கு!” என்று அன்றே தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் ஸ்ரீநிவாசன். அதுவே கில்மிஷாவின் வெற்றிக்கு பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது.
சரஸ்வதிதேவி கல்வித் தெய்வம் – சகல கலைகளுக்கும் அதிபதி. கவிச்சக்கரவர்த்தி கம்பர் சரஸ்வதிதேவியின் அருட்கடாட்சம் பெற்றவர் என்பதால் கம்பரின் கவிபாடும் திறமை மேலோங்கியது. “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” என்று ஆரம்பித்து அந்தாதி பாமாலை சூட்டியவர் கம்பர்.
கில்மிஷாவின் வீட்டுக்கு அண்மையிலுள்ள கலைமகளான சரஸ்வதி தேவியின் ஆலயத்திலேயே கில்மிஷாவின் குழந்தைப் பருவத்தில் ஏடு தொடக்கியதாகவும், பின்னர் அவரது மூன்றாவது வயதில் இதே ஆலயத்தில் நடந்த வாணி விழாவில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று ஆரம்பிக்கும் பாடலை முதன்முதலாக இசையுடன் இணைந்து பாடியதாகவும் அவரது குடும்பத்தவர்கள் சொல்கிறார்கள்.
சமயகுரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரும் தனது மூன்றாவது வயதிலேயே தேவாரப் பதிகங்களைப் பாடத் தொடங்கினார் என புராண வரலாறு சொல்கிறது. அதுபோல, தனது மூன்றாவது வயதில் பாட ஆரம்பித்த கில்மிஷா, பின்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் சாரங்கா இசைக்குழுவில் இணைந்து பாடி வந்துள்ளார். அவரது திறமையைப் பாராட்டி பல விருதுகளும் கிடைத்துள்ளன. இப்போது பதின்மூன்றாவது வயதில் கடல்கடந்து தென்னிந்தியா சென்று ஷீ தமிழ் தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சியில் பாடி வெற்றியீட்டியிருப்பதன் ஊடாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளையும் கடந்து, உலகளாவிய ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களினதும் பெருமதிப்பைப் பெற்றிருப்பது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமே பெருமை தரக்கூடிய விஷயமாகும்.
சரிகமப நிகழ்ச்சியில் வாராவாரம் மிகத் திறமையாகப் பாடி வந்தவர்களுக்கு ‘Golden Performance எனப்படும் ‘தங்க செயல்திறன் சான்று’ வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
ஏனையோருக்கு புள்ளிகள் வழங்குவார்கள். கில்மிஷா இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளைத் தவிர, மீதி அத்தனை நிகழ்ச்சிகளிலும் ‘கோல்டன்’ பெற்று வந்திருப்பது சிறப்புக்குரியது. நிகழ்ச்சியின் நடுவர்களுள் இன்னொருவரான விஜய் பிரகாஷ் பலதடவைகள் கில்மிஷாவை பாராட்டி வந்துள்ளார். கடந்த அக்டோபர் 8ஆம் திகதியன்று ஒளிபரப்பாகிய சரிகமப, நிலா பாடல்கள் சிறப்பு நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் கில்மிஷா “கல்யாணத் தேன்நிலா..” என்ற பாடலைப் பாடி அனைவரையும் கவர்ந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். “இது எல்லோராலும் பாடக்கூடிய சாதாரண பாடல்போல் அல்ல. பாடலைப் பாடும் தன்மையும் இதன் இசையமைப்பும் சற்று வித்தியாசமானது. அந்த நிலையிலும் கில்மிஷா பாடலை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்” என புகழாரம் சூட்டினார் ஸ்ரீநிவாசன்.
மற்றொரு நடுவரான விஜய்பிரகாஷ் கில்மிஷாவிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். “இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பாடிய ‘கண்டால் வரச் சொல்லுங்க…” ‘அலேக்ரா அலேக்ரா…’, இன்று பாடிய ‘கல்யாணத் தேன்நிலா’ பாடல்களிலிருந்து இரண்டு வரிகளைப் பாடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். கில்மிஷாவும் மூன்று பாடல்களிலிருந்தும் சில வரிகளைப் பாடி அனைவரினதும் கரகோசத்தைப் பெற்றுக் கொண்டார்.
“கில்மிஷாவின் ‘வொய்ஸ்’ (குரல்) மிக அருமையானது” என ஆரம்பத்திலிருந்து பாராட்டி வந்தவர் ஸ்ரீநிவாசன்.
“இது இந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஒலிக்கக்கூடிய குரல் அல்ல.
ஒலிப்பதிவுக் கலையகத்தில் ஒலிக்க வேண்டியது” என்று பலதடவைகள் சொல்லியிருக்கிறார். சரிகமப நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த இசையமைப்பாளர்களிடமும் கில்மிஷா பாடலொன்றைப் பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சீமான், கில்மிஷா யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருப்பதை தெரிந்து கொண்டவராக, கடந்தகால போர் நிலைமைகளினால் யாழ்ப்பாண மக்கள் பெருந்துயரம் அனுபவித்ததை எண்ணித் தானோ என்னவோ “தொடர்ந்து பாடுங்க, வலியை மறக்கப் பாடுங்க, நமக்கு ஒரு வழி பிறக்கப் பாடுங்க!” என்று சொல்லி கில்மிஷாவை வாழ்த்தியிருந்ததையும் இங்கு சிறப்பாகச் சொல்லவேண்டும்.
ஒருதடவை, நடுவர்களில் ஒருவரான விஜய்பிரகாஷ் சரிகமப நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கத்திலிருந்து, அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த கில்மிஷாவின் தந்தையாருடன் தொலைபேசி ஊடாக நேரடித் தொடர்புகொண்டு பேசியதுடன் “உங்க பொண்ணு இன்று கோல்டன் பெற்றிருக்கிறார்” என்று அந்த மகிழ்ச்சியான தகவலையும் சொல்லிவைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தென்னிந்திய இசையமைப்பாளர்களுள் ஒருவரான சந்தோஷ் நாராயண் இவ்வருடம் அக்டோபர் 21ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து நடத்திவிட்டு சென்னை திரும்பிய பின்னர், சரிகமப நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கில்மிஷா பாடி முடித்தபின், சந்தோஷ் நாராயண் இவ்வாறு சொன்னார்.
“யாழ்ப்பாணத்தில் நடத்திய இசை நிகழ்ச்சியில் கில்மிஷாவையும் பங்குகொள்ள வைப்பதற்கு நினைத்திருந்தேன். தற்போது போட்டியாளராக இருக்கும் ஒருவர், வெளியில் நடக்கும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வது பொருத்தமானது அல்ல என்று சொல்லப்பட்டது.
எனவே, இங்கு சென்னையில் நான் நடத்தவிருக்கும் இசைநிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்கவிருக்கிறேன். ஏற்கனவே ஒரு தினத்தில் நடத்த திட்டமிட்டிருந்த அந்த இசை நிகழ்ச்சியை, இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நிறைவடைந்த பின் இன்னொரு தினத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார் சந்தோஷ் நாராயண்.
சரிகமப இறுதி நிகழ்ச்சியில் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அதாவது டிசெம்பர் 10ஆம் திகதி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் வசந்த் ஆகியோர் வந்திருந்தனர்.
கில்மிஷா, உன்னி கிருஷ்ணனுடன் இணைந்து “காற்றே என் வாசல் வந்தாய்..” என்று ஆரம்பமாகும் பாடலைப் பாடி அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். இதன்போது திரைப்பட இயக்குநர் வசந்த் ஒரு மகிழ்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தினார்.
“திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள அறிவு ஆதீனத்திலுள்ளவர்கள் சரிகமப நிகழ்ச்சியை கேட்டு வருகிறார்கள்.
கில்மிஷா பாடுவதையும் கேட்டு ரசிப்பார்கள். ஆதீனம் அருகே ஆயிரம் ஆண்டுகால பழமைவாய்ந்த ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது.
அங்கு எழுந்தருளியுள்ள முருகன்மீது தோத்திரப் பாடல் ஒன்றை எழுதிவருகிறேன். கில்மிஷாவே அந்தப் பாடலைப் பாடுவார்.
இங்கு இருக்கும் ஒருவரே (ஸ்ரீநிவாசனை சுட்டிக்காட்டி) அந்தப் பாடலுக்கு இசையமைக்கவிருக்கிறார்” என்று சிறப்பு விருந்தினர் வசந்த் தெரிவித்த இந்த நல்ல செய்தியும் கில்மிஷாவின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். சரிகமப நிகழ்ச்சியின் ஏனைய இரு நடுவர்களான சைந்தவி, அபிராமி, நிகழ்ச்சித் தொகுப்பு அறிவிப்பாளரான அர்ச்சனா உட்பட அவ்வப்போது வந்துசென்ற சிறப்பு நடுவர்களும் கில்மிஷாவை பாராட்டத் தவறவில்லை.
நடுவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாசன் “கில்மிஷா குயில்பாட்டு பாடியதிலிருந்து அவரது குரலும் பாடும் தன்மையும் எனக்கு ரெம்பவும் பிடித்துவிட்டது” என்று இறுதிப் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் சொல்லியிருந்த இவர், கில்மிஷாவின் வெற்றிக்குப் பின்னர், “எனது எதிர்பார்ப்பு இலங்கையிலிருந்து வருபவர் தெரிவாக வேண்டும் என்பதே. இப்போது கில்மிஷா தெரிவுசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்று சொல்லி பெருமிதமடைந்தார்.
- ஊரெழு அ. கனகசூரியர்