ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா நடித்துள்ள திரைப்படம், ‘ரூட் நம்பர் 17’. நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள படமான இதை ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். ஹரிஷ் பெரேடி, அருவி மதன், அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர் உட்பட பலர் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் இசையமைத்துள்ளார். வரும் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.
பூமிக்கு அடியில் குகை அமைத்து ரூட் நம்பர் 17 படப்பிடிப்புபடம்பற்றி அபிலாஷ் ஜி.தேவன் கூறியதாவது: இது சர்வைவல் த்ரில்லர் கதை. ரூட் நம்பர் 17-ல், மாலை நேரத்தில் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள். ஒரு பெண் கடத்தப்படுகிறார். போலீஸ்காரர் ஒருவரும் கடத்தப்பட்டு குகைக்குள் அடைத்து வைக்கப்படுகிறார். அவர்களை யார், எதற்காகக் கடத்தினார்கள் என்பது கதை. படம் 2 மணி நேரம் தான். அதைப் பரபரப்பாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப் படத்துக்காகக் கேரளாவில் மண்குவாரியில் பூமிக்கு அடியில் குகை செட் அமைத்தோம். உள்ளே கடும் வெப்பம். ஃபேன் கூட வைக்க முடியாது. அதில் கஷ்டப்பட்டு படமாக்கினோம். அந்த வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு 29 நாட்கள் நடித்தார் ஜித்தன் ரமேஷ். அவர் உழைப்பு பிரமிக்க வைத்தது. அச்சன்கோயில் மற்றும் கர்நாடக காடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினோம். இவ்வாறு அபிலாஷ் ஜி.தேவன் கூறினார்.