* கம்பனி தரப்புக்கு மூக்கணாங் கயிறாக அமையுமா?
* அதிரடி மாற்றங்களுக்கு அத்திவாரமாக இருக்குமா?
‘கம்பனி தரப்பை பேச்சுவார்த்தை மேசைக்கு எப்படி அழைப்பது என விழித்துக் கொண்டிருந்த சங்கங்களுக்கு ஆறுதலாக அமைந்த ஜனாதிபதியின் அறிவிப்பு!’
கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதி ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தி முக்கியமானது. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக, பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர் வேதன அதிகரிப்பு தொடர்பாக ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமென கம்பனி தரப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டிருப்பதாகவும், தொழிலாளர்களுக்கான தின வேதனம் தற்போதைய ஆயிரம் ரூபாவில் இருந்து எழுநூறு ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் 15, 20 ரூபாவை சம்பள அதிகரிப்பாக பெற்றுக் கொள்வதற்காக எவ்வளவோ போராட்டங்களை ஒப்பந்த மேசையிலும் வெளியிலும் செய்ய வேண்டியிருந்தது. 2021ஆம் ஆண்டு ஆயிரம் ரூபா கோரிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதியாக முன்வைத்த போதிலும் தோட்ட கம்பனிகள் அத்தொகைக்கு இணங்க மறுத்துவிட்டன. இதையடுத்தே சம்பள நிர்ணய சபைக்கு தொழிற்சங்கங்கள் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு, கம்பனிகள் 900 ரூபாவும் வரவுசெலவு திட்ட ஒதுக்கீடான நூறு ரூபாவுமாக சேர்த்து, ஆயிரம் ரூபா தினசரி வேதனம் என்பது முடிவாயிற்று. இதையும் கம்பனி தரப்பு ஏற்கவில்லை. கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. ஆயிரம் ரூபா தொகையை நீதிமன்றம் அங்கீகரிக்கவே, கம்பனி தரப்பு உயர்நீதிமன்றம் சென்றது. அங்கும் தொழிலாளர் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பின்னரேயே ஆயிரம் ரூபா வேதனம் நடைமுறைக்கு வந்தது.
தாம் ஒரு விடாக் கண்டன் கொடாக் கண்டன் என்பதை கம்பனி தரப்பு இதற்கு முன்னரும் பல தடவைகள் நிரூபித்துள்ளது. இந்தப் பின்னணியில், தொழிலாளரின் தினசரி வேதனம் ஒரே தடவையில் எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வெளியான அறிவித்தலை கம்பனி தரப்பு எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதில் எமக்கு தெளிவு இல்லை.
அதே சமயம், இது சாத்தியப்படுமா என்ற சந்தேகத்தையே தொழிலாளர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வேண்டுகோள் அல்லது அறிவித்தல் ஜனாதிபதியிடமிருந்து வந்திருப்பதால் கம்பனி தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளியிடப்படவில்லை.
இக் கோரிக்கையை தொழிற்சங்கத் தரப்பு விடுத்திருந்தால் கம்பனி தரப்பு பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, முற்றிலும் சாத்தியப்படாத ஒன்று என்று கூறி அதை நிராகரித்திருப்பார்.
அடுத்த சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் வரவிருக்கும் நிலையில், மலையக வாக்காளர்களைக் கவர்வதற்கான ஒரு முயற்சி என சில தரப்பினரால் பார்க்கப்படுவதைப் போலவே, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் ஒரு நியாயமான முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என இன்னொரு தரப்பு மற்றொரு பார்வையை முன்வைக்கிறது.
யார் குற்றினால் என்ன, நெல் மணிகள் அரிசியானால் சரி என்பதே தொழிலாளர் தரப்பின் எதிர்பார்ப்பு. நியாயமாகப் பார்த்தால் இரண்டாயிரம் ரூபாவாக வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும். இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் ஒப்பிட்டால் இரண்டாயிரமும் போதாது. ஏனெனில் அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா படியாக வழங்கப்படவுள்ள நிலையில் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம்.
இவ்விடயத்தில் தொழிலாளர் தரப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருப்பினும், கவனிக்க வேண்டியவை கம்பனி தரப்பின் நகர்வுகள் தான், ஜனாதிபதியின் அறிவிப்போடு நின்று விடாமல் கம்பனிகளின் தலைவர்களை தனது செயலகத்துக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியிருக்கிறார். சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக தமது தீர்மானத்தை 31ஆம் திகதிக்கு முன்பாக தமக்கு கம்பனிகள் அறிவிக்க வேண்டும் என்பதை அங்கே அவர் வலியுறுத்தினார். தொழிலாளரின் வீடமைப்பு தொடர்பாக தான் குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும், மற்றொரு குழு, தொழிலாளர் மற்றும் நிர்வாகங்களை இணைக்கும் வகையில் நியமிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் பெருந்தோட்டத்துறை செயற்பாடுகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வேண்டுமெனவும், அது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்த நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் மற்றொரு அறிவுரை, கூட்டு ஒப்பந்த முறைமைக்கு திரும்பும்படி கம்பனிகளைக் கேட்டுக் கொள்வதாக இருந்தது.
இங்கே மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
முதலாவது, தொழிலாளர் குடும்பங்களுக்கு காணி உரிமையை அளிப்பது. கொழும்பில் நடைபெற்ற ‘நாம் 200’ விழாவில் கலந்து கொண்டு இந்திய நிதியமைச்சரின் முன்னிலையில் உரையாற்றுகையில், காணி உறுதியுடன் கூடிய 10 பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்படும் என்றார் ஜனாதிபதி. சிங்களவர்களைப் போலவே தமிழ்த் தோட்டத் தொழிலாளரும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என்பதையும் குறிப்பிட்டார். சொந்தக் காணி, அதில் சொந்த வீடு மற்றும் சிறுதோட்ட உரிமையாளர் என்ற அந்தஸ்து என்பன தொழிலாளர் சமூகத்துக்கு மிகப் பெரிய விஷயங்கள் தான்!
இரண்டாவது, தின வேதனம் ஆயிரத்தில் இருந்து 1,700 ஆக அதிகரிக்கப்படுவது.
மூன்றாவது, சம்பள நிர்ணய சபை முறையை விடுத்து பழைய கூட்டு ஒப்பந்த முறைக்குத் திரும்புவது.
நிச்சயமாக இம் மூன்றும் கம்பனி தரப்பின் ஒத்துழைப்போடு நடைமுறைக்கு வருமானால், அது பெருந்தோட்ட வரலாற்றில் அதிரடித் திருப்பு முனையாகவே அமையும். ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் வரவிருப்பதால், இத் திருப்புமுனை மாற்றங்கள் எவ்வளவு தூரம் வேகமெடுக்கும்; சாத்தியமாகும் என்பதை தேர்தல்களின் பின்னரான சூழல்களே தீர்மானிக்கப் போகின்றன.
தோட்டங்களை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை, இறப்பர் ஏற்றுமதிகள் மூலம் நல்ல இலாபம் அடைகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் இக் கம்பனிகளின் செயற்பாடுகள். அவற்றின் செலவு செய்யும் திறன், நிர்வாக செலவுகள் என்பன உயர் மட்டத்திலேயே இன்றளவும் பேணப்படுகின்றன. எனினும் ஆயிரம் ரூபா சம்பளத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே வழங்குகின்றன. தேயிலையை நிறுக்கும்போது கொழுந்து அல்லாத இலைகளும் இருப்பதாகவும், நிறை குறைவென்றும், கூடை பாரத்துக்காக மூன்று கிலோ கழித்துக் கொள்ளப்படுவதாகவும் (பிளாஸ்டிக் சாக்கு 250 கிராம் எடை கூட இருக்காது) எனவும் பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டு கொழுந்தின் எடையும், தரமும் குறைக்கப்படுகிறது. கம்பனிகள் தொழிலாளர்களை இப்படியும் ஏமாற்றி வஞ்சிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்களின் பராமரிப்பிலும் பின்னர் அரசின் நிர்வாகத்தின் கீழும் தோட்டங்கள் இருந்தபோது வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் சலுகைகள் தற்போது வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி, கம்பனி தரப்பு நியாயங்களைப் பார்ப்போம்.
கம்பனிகளின் கடந்த கால போக்கைக் கவனிக்கும் போது, 700 ரூபாவாக வேதன உயர்வுக்கு அவ்வளவு எளிதில் அவை இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்க முடியாது. உலக தேயிலை சந்தை எக்காலமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏற்ற இறக்கத்துடன் கூடியது. உலகளாவிய இளைய தலைமுறை எப்போதும் தேனீரை விரும்பி அருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தப் பின்னணியில் தேயிலை ஏற்றுமதியை நம்பி தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது எத்துணை சாத்தியமானது?.
தோட்ட நிர்வாக செலவு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்து செல்கிறது. வரி அதிகரிப்பு, போக்குவரத்து என்பனவற்றையும் ஈடுசெய்ய வேண்டும். எனவே, சம்பள அதிகரிப்பு சாத்தியமானதல்ல. தொழிலாளர்களுக்கான சம்பளத்துடன், இலவச தங்குமிட வசதி, தொழிலுக்கான போக்குவரத்து செலவின்மை, தண்ணீர் வசதி, மருத்துவ – ஆஸ்பத்திரி வசதி, விறகு வசதி போன்றவையும் உள்ளடக்கப்பட வேண்டும். ஏனைய தொழிலாளர்களுக்கு இத்தகைய வசதி கிடையாது.
நூற்றாண்டு பழைமையான தினச் சம்பள முறை மாற்றப்பட வேண்டும். நேரத்துக்கமைவான சம்பளம் என்பதற்கு பதிலாக உழைப்புக்கேற்ற சம்பளம் என்ற புதிய சம்பளமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும். கை விரல்களை இயந்திரம் போல பாவித்து மிக வேகமாக கொழுந்து பறிக்கும் பெண்க ளில் எண்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாவரையில் மாத வருமானம் பெறுவோர் உள்ளனர். இத்தகையோர் ஊக்குவிக்கப்படவேண்டும். எமது சம்பளத் திட்டம் தினத்துக்கு இவ்வளவு ரூபா என்பதற்கு பதிலாக உழைப்புக்கு ஏற்ற சம்பளமாக அமைய வேண்டும்.
இவை, பெருந்தோட்ட முகாமையாளர் சங்கம் தெரிவிக்கும் தம்பக்க நியாயங்கள். முகாமையாளர் சங்கம் 2021 சம்பள பேச்சுவார்த்தை இழுபறியின் போது கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. இது தோட்டக் கம்பனிகளுக்கும் வாய்ப்பாகிப் போனது. அவற்றால் சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்பட முடிகிறது. சங்கங்களுடன் எந்த உடன்பாட்டிலும், பேச்சுவார்த்தையிலும் அவை இல்லை. சம்பள உயர்வு வேண்டுமானால் சம்பள நிர்ணய சபையைத்தான் அணுக வேண்டும். இச்சபையும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாகவே நடவடிக்கை எடுக்க முடியும். தவிர, தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள், சலுகைகள், புதிய வசதிகள் அல்லது குறைபாடுகள் தொடர்பாக பேச முடியாது.
இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதுரியமாக செயல்பட்டு, ஒருநாள் வேதனம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான முடிவொன்றை 31ஆம் திகதிக்கு முன்பாக அறிவிக்கும்படியாகவும் மேலும் கூட்டு ஒப்பந்த முறைக்கு திரும்பிச் செல்லும்படியும் கம்பனி தரப்பை, நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்ற வகையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதே சமயம் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பை வெளிக்காட்டாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தரப்பு ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைக்கு ஏற்பவே ஜனாதிபதியால் கம்பனி தரப்புக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் சம்பள அதிகரிப்பு, கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துதல், புதிய விஷயங்கள் பற்றி பேசுதல் என்பனவற்றை கம்பனி தரப்புடன் எவ்வாறு ஆரம்பிப்பது. வழிக்குக் கொண்டுவருவது என்று தெரியாமல் தொழிற்சங்கங்கள் நின்றிருந்த வேளையில் தான் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தினசரி வேதனம் 1,700 ரூபாவா அல்லது இரண்டாயிரமா என்ற பிரச்சினை ஒருபக்கமிருக்க, பெருந்தோட்டத் தொழில் காலத்துக்கேற்ற மாற்றங்களுக்கு உட்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கம்பனி தரப்பு சொல்வதைப் போல, பழைய தின சம்பள முறையைத் தொடரமுடியாது. ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளபடி, சிறு தனியார்க் காணிகளாக, ஒரு குடும்பத்துக்கு அரை ஏக்கரோ ஒரு ஏக்கரோ தேயிலைக் காணி பிரித்து வழங்கப்பட்டு சிறுதோட்ட உரிமையாளர்களாக தொழிலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அக்காணிகளை மேற்பார்வை செய்து உற்பத்திகளை கொள்வனவு செய்யும் பணியை கம்பனிகள் செய்யலாம்.
இத்தகைய மாற்றங்களை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் இத்திட்டத்தின் கீழ் நிறுத்தப்பட்டு விடலாம். தற்போது கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியம் என்பன இல்லாமல் போய்விடலாம். எனவே மாற்று நலத்திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்களுக்கு காணி உறுதியுடனான 10 பேர்ச் காணித்துண்டு, சொந்த வீடு என்பனவற்றை வழங்குவதுடன் தினசரி வேதனத்தில் அதிகரிப்பு செய்வது என்பன தனியாக பார்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேயிலைக் காணி வழங்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபடச் செய்வது முற்றிலும் வேறானது என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். எனவே இச்சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்காக அதிகாரம் கொண்ட ஒரு குழு அமைக்கப்படுவது அவசியம். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதால் அவை ஒழுங்கு முறைப்படுத்தப்படல் வேண்டும்.
ஆயிரம் ரூபா எழுநூறினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை என்பது தேர்தல் கோஷம்போல மேலோட்டமாகத் தெரிந்தாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் உண்மையாகவே ஆரம்பிக்கப்படும் போதுதான் கம்பனிகளின் உண்மை சொரூபம் எமக்குத் தெரியரும். அவை நிபந்தனைகளையும், தமது யோசனைகளையும் முன்வைக்கும். எனினும் பேச்சுவார்த்தைகள், நாம் மேலே பார்த்த சம்பளம், காணி, வீடு மற்றும் சிறு தோட்ட உரிமை ஆகிய மாற்றங்களுக்கு வித்திடுபவையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
அருள் சத்தியநாதன்