(தினுலி பிரான்சிஸ்கோ ‘உலகளாவிய நம்பிக்கையை அதிகரித்தல், ஊடக வளர்ச்சியை ஊக்குவித்தல்’ என்ற தொனிப்பொருளில் ஐந்தாவது உலக ஊடக உச்சி மாநாடு (WMS) சீனாவின் குவாங்சோவில் இம்மாதம் 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நடைபெற்றது.)
அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் (ANCL) தலைவர், பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். புதிய சகாப்தத்தில் சர்வதேச கலாசார தொடர்புகளின் அவசியத்தை சுட்டிக்காட்டி பேராசிரியர் உரையாற்றினார். அவர் சீனாவையும் இலங்கையையும் இணைக்கும் ஆழமான வரலாற்றுப் பிணைப்புகளை எடுத்துரைத்தார்.
“பழங்காலம் தொட்டே பட்டுப்பாதை நமது நாகரிகங்களுக்கிடையில் கருத்துக்கள் கலை மற்றும் தத்துவ பரிமாற்றத்துக்கான ஒரு பாலமாகச் செயற்பட்டது. கடல்சார் பட்டுப் பாதையானது இந்த இணைப்புகளை மேலும் ஆழப்படுத்தியது. கலாசாரங்களின் வளமான பிணைப்பை உருவாக்கியது.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சீன கலைப்பொருட்கள் மற்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தொல்பொருட்கள் என்பன இந்த வரலாற்று பரிமாற்றத்திற்கு சான்றாகும். இது பரபஸ்பரம் ஒவ்வோர் பாரம்பரியத்துக்கும் இரு நாடுகளிலும் பரபஸ்பரம் நிலவிய கௌரவத்தையும் ஆழமான மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச கலாசார தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக எதிரொலிக்கின்றது. நமது இரு நாடுகளும் ஊடகங்களிடையேயான உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் வளர்ச்சியடைவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
அண்மைய காலங்களில் மனித சமூகத்தில் உலகமயமாக்கலின் போக்கை துரிதப்படுத்தும் முக்கிய சக்தியாக சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சி உள்ளது. சமூக ஊடகங்கள் மக்கள் ஒருவரோடொருவரும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்துடன் இணைவதையும் எளிதாக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றை உணர்கிறோம். செய்திகளை உருவாக்குவதும் அதனைப் பரப்புவதும் கட்டுப்படுத்துவதும் இனிமேல் நிறுவனமயப்பட்டதாக இருக்காது. மாறாக அது இப்போது ஒவ்வொரு நபரின் கரங்களிலும் உள்ளது ” என்று பேராசிரியர் காரியவசம் மேலும் கூறினார்.
சர்வதேச ஊடக பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான முக்கிய தளமான உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சீன மத்திய அரசு மற்றும் குவாங்டாங் மாகாண அரசாங்கத்தின் அதிகாரிகள் முன்னிலையில் பங்குகொண்டனர். மேலும் சின்ஹுவா செய்தி நிறுவனத் தலைவர் ஃபூ ஹுவா, ஐ.நா.வின் உலகளாவிய தொடர்புகளுக்கான துணைச் செயலர் மெலிசா பிளெமிங் ஆகியோர் உச்சிமாநாட்டில் உரையாற்றினர்.
5வது WMS 101 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 450 பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது. இதில் 197 முக்கிய ஊடகங்கள், சிந்தனையாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சீனாவிற்கான இராஜதந்திரிகள் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். நவீனமயமாக்கலுக்கான சீனாவின் அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்ட தத்துவார்த்த செயற்பாடுகள் மற்றும் புதுமைக்கான முக்கியத்துவம் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் வாய்ப்பை இந்த உச்சிமாநாடு வழங்கியதாக பேராசிரியர் காரியவசம் கூறினார்.
“சீன நவீனமயமாக்கலின் முக்கிய அடையாளம் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பு அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்காக அதிகாரமளித்தலுக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார். “உலகளாவிய நம்பிக்கையை ஊக்குவித்தல் ஊடக மேம்பாட்டை ஊக்குவித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் பங்கேற்பாளர்கள் நான்கு தலைப்புகளில் விரிவான மற்றும் ஆழமான விவாதங்களை நடத்தினர். “நம்பிக்கையை வலுப்படுத்துதல்: மனித வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு” “மாற்றங்களைத் தழுவுதல்: ஊடகங்களின் பதில் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” “முன்னோடி கண்டுபிடிப்பு: டிஜிட்டல் யுகத்தில் ஊடகத்தின் புதிய சந்தைகள்” மற்றும் “வளர்ச்சியை நாடுதல்: சிறந்த எதிர்காலத்திற்கான ஊடகங்களின் உலகளாவிய ஒத்துழைப்பு” என்பனவே அவையென உலகளாவிய சவால்களை எதிர் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. Xinhua News Agency, Associated Press, Reuters, TASS மற்றும் Kyodo News உள்ளிட்ட முன்னணி உலகளாவிய ஊடக நிறுவனங்களின் கூட்டமைப்பால் 2009 இல் நிறுவப்பட்ட WMS ஆனது உலகெங்கிலும் உள்ள ஊடக நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கான இன்றியமையாத அமைப்பாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.