யதார்த்தவாதிகள் வலியுறுத்தும் அரசுகளுக்கிடையிலான உறவானது தேசிய பாதுகாப்பு மற்றும் இருத்தலியலை மையப்படுத்தி அராஜாக சூழலுக்குள் கட்டமைக்கப்படுவதாகவே சமகால சர்வதேச அரசியல் நடப்புகள் காணப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு போர்கள் தீவிரமடைந்துள்ளன. ஒக்டோபர் -07க்குப் பின்னர் பொது அரங்கில் சூடான விவாதத்தை இஸ்ரேல், -ஹமாஸ் போர் ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முன்னர் கடந்த ஒரு வருடமாகவே ரஷ்ய, -உக்ரைன் போர் முழுஉலகையும் நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது.
இந்நிலையிலேயே தனது வருடாந்த செய்தியாளர் மாநாட்டில் உரை நிகழ்த்தியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “உக்ரைனில் ஒரு வருடத்துக்கு முன்பு தொடங்கிய தாக்குதலினை நியாயப்படுத்தி தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துக் கொண்டு, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சைக் கண்டித்துள்ளார்.” அரசியல் தலைவர்கள் தமது அரசின் நலன்களுக்குள் ஒவ்வொரு போர்களை வியாக்கியானப்படுத்துகையில், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய போர்களால் அப்பாவி பொதுமக்கள் உயிர்களை மற்றும் வாழ்விடங்களை இழக்கும் துயரமே தொடர்கின்றது. இக்கட்டுரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வருடாந்த உரையின் பிரதான அரசியல் செய்திகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் கோர்பச்சோவால் மேற்கொள்ளப்பட்ட கிளாஸ்நோட்ஸ் மற்றும் பெரஸ்ரொய்கா என்பவற்றால் ரஷ்யாவின் சோசலிச அரசியல் பொருளாதார கட்டமைப்பு தகர்க்கப்பட்டது. எனினும் விளாடிமிர் புடினின் ஆட்சியில் ரஷ்யா மீள சோசலிச பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நகர முடியாவிடிலும், இரும்புத்திரை அரசியல் இயல்புகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான சூழலிலேயே ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர்- 14அன்று நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தனது ஆண்டு இறுதி செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதிலளித்தமை முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக 2022- பெப்ரவரி ரஷ்யா, -உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேற்கத்திய ஊடகங்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட புடினின் முதல் முறையான செய்தி மாநாட்டாக இது அமைந்துள்ளமை அதிக கவனத்தை பெறுகின்றது.
புடினின் செய்தியாளர் மாநாடு என்பது பகுதியளவில் புடின் உலகத்துக்கு தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை பகிரங்கப்படுத்தும் களம் எனும் நிலைமைகளையே கொண்டிருக்கின்றது. இப்பின்னணியிலேயே செய்தியாளர் மாநாட்டு விடயங்களை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவது, இஸ்ரேல், -ஹமாஸ் போரை உலகின் பார்வைக்குள் முதன்மைப்படுத்துவதற்கான செய்தியை வழங்கியுள்ளார். காசாவில் நடந்த போருடன், புடின் ஒரு வாய்ப்பைப் பார்க்கிறார். காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் பெருமளவிலான பொதுமக்களின் மரணம் சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக டிசம்பர்-12 அன்று ஐ.நா பொதுச்சபையில் இஸ்ரேல், -ஹமாஸ் போர் வெடித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச்சபை அவசரகால சிறப்பு அமர்வில் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆதரவாக 153 நாடுகள் வாக்களித்ததுடன், 10 எதிராக வாக்களித்ததுடன், 23 வாக்களிக்கவில்லை. ஆசிய நாடுகள் முழுமையாக தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்நிலையிலேயே, புடின், ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகளுக்கும் இடையில் வேறுபாடு காட்ட முயன்றுள்ளார். உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பிலான வினாவுக்கான புடினின் பதிலாக, “இஸ்ரேலின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைப் பாருங்கள்.
மற்றும் காஸாவில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள், வித்தியாசத்தை உணருங்கள். உக்ரைனில் அப்படி எதுவும் நடக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இது ரஷ்யா மீதான அமெரிக்கா தலைமையிலான மேற்கின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதாகவே அமைகின்றது.
மேலும், ஒக்டோபர்- 07 அன்று இஸ்ரேல், ஹமாஸ் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சில மேற்கு ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் ஹமாஸின் போரியல் செயற்பாடுகளை விமர்சிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரியல் நடவடிக்கைகளையும் ஒப்பிடும் நிலைமைகள் காணப்படுகின்றது.
ஒக்டோபர்- 09 அன்று நேட்டோவின் நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “ஹமாும் ரஷ்யாவும் ஒரே தீமைதான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கிய ஒரு பயங்கரவாத அமைப்பு உள்ளது. இங்கே உக்ரைனைத் தாக்கிய ஒரு பயங்கரவாத அரசு உள்ளது” எனக்குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான உரையாடல்களுக்கான பதிலாகவே காசா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையினை புடின் திசை திருப்பியுள்ளார்.
இரண்டாவது, சர்வதேச ரீதியாக ரஷ்யா மீது அமெரிக்கா மேற்கொண்ட தனிமைப்படுத்தலை இஸ்ரேல்-, ஹமாஸ் போரை பயன்படுத்தி ரஷ்யா விலகிக்கொள்ள முற்படுகின்றது எனும் செய்தி புடினின் செய்தியாளர் மாநாட்டு உரையிலும் நடைமுறை அரசியலிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
செய்தியாளர் மாநாட்டில், “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறோம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்” என அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ரஷ்யா, -உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல், -ஹமாஸ் போர் நிலைப்பாட்டின் மாறுபட்ட தன்மைகளை சாடியிருந்தார்.
ஒக்டோபர் -07க்கு முன்னர் அமெரிக்காவின் நெறியாள்கையில் ரஷ்யா -– உக்ரைன் போரை மையப்படுத்தி சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்ட நிலை காணப்படலாயிற்று. 2022ஆம் ஆண்டில் ஐ.நா அரங்கில் ரஷ்யாவை கண்டித்து அதன் அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறக் கோரி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2022-அக்டோபரில் ரஷ்யாவின் சட்டவிரோத இணைப்பு முயற்சியை கண்டித்த தீர்மானம் 143 அரசுகளின் ஆதரவுடன் வென்றது. இதற்கு பின்னால் ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவம்பெற்ற அமெரிக்காவின் ஆதிக்கமும் காணப்பட்டது. தற்போது அமெரிக்கா, இஸ்ரேலை ஐ.நா பொது அரங்கில் பாதுகாப்பதற்கான கவசமாக செயற்பட்டு வருவதனையே புடின் சாடியிருந்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் லூயிஸ் சார்போனோ அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை குறிப்பிடுகையில், “உக்ரைன் மற்றும் இஸ்ரேலில் ரஷ்யா மற்றும் ஹமாஸின் அட்டூழியங்கள் வரும்போது, அமெரிக்காவும் பிற மேற்கத்திய அரசாங்கங்களும் மனித உரிமைகள் மற்றும் போர்ச் சட்டங்களுக்கு ஆதரவாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால் சர்தேச சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது, ரஷ்யா அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் புடின் ரஷ்ய தேசியவாதத்தை முதன்மைப்படுத்தும் வகையில் உக்ரைன் மீதான ரஷ்யா போரை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு தேவையை வலியுறுத்தியுள்ளதனூடாக ரஷ்யா தேசியவாதத்துக்கான அறைகூவலை விடுத்துள்ளார். உக்ரைனில் மாஸ்கோ தனது “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைக்கும் உக்ரைன் மீதான படையெடுப்பின் வெற்றிகளையும், கியேவின் நட்பு நாடுகளின் கொடிய ஆதரவையும் புடின் பிரதானப்படுத்தியிருந்தார். குறிப்பாக, “எங்கள் இலக்குகளை நாங்கள் அடையும்போது அமைதி இருக்கும்” என்று புடின் கூறினார். மேலும், “இன்று உக்ரைன் ஏறக்குறைய எதையும் உற்பத்தி செய்யவில்லை, அவர்கள் எதையாவது பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நடைமுறையில் எதையும் உற்பத்தி செய்வதில்லை மற்றும் எல்லாவற்றையும் இலவசமாகக் கொண்டு வரவில்லை. ஆனால் இலவசங்கள் ஒரு கட்டத்தில் முடிவடையும் மற்றும் வெளிப்படையாக அது சிறிது சிறிதாக முடிவுக்கு வருகிறது” என உக்ரைனின் மேற்கு ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியிருந்தார். இது முழுமையான ரஷ்ய உள்நாட்டு மக்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.
நான்காவது, அமெரிக்காவுடனான சாதகமான உறவுக்கான சமிக்ஞையை புடின் வழங்கியிருப்பது தந்திரோபாய ரீதியாக முதன்மையானதாக அவதானிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான சர்வதேச நாடுகளின் தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார தடைகள் என்பவற்றை அமெரிக்கா முதன்மைப்படுத்தும் சமாந்தர சூழலில் புடினின் அறிவிப்பு அதிக கவனத்தை பெறுகின்றது. புடின், “அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர்களுடன் உறவுகளை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
உலகிற்கு அமெரிக்கா தேவை என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ட்ரம்ப் போன்ற ஆட்சியாளர்களை அமெரிக்கா ஜனாதிபதியாக்குவதில் புடினின் பங்களிப்பின் பின்னிருந்த தந்திரோபாயத்தின் பிரதிபலிப்பாக அமையுமா என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக ரஷ்யா அமெரிக்காவை அங்கீகரிப்பதான உரையாடல், ரஷ்யா சர்வதேச ரீதியாக மேல்நிலையில் இருப்பதானதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்த புடின் பயன்படுத்தும் உத்தியாகவும் அவதானிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியிலேயே, கடந்த மார்ச் மாதம் உளவுக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் பற்றி முதன்முறையாக புடின் கருத்துத் தெரிவித்துள்ளர். இவரது விடுதலை தொடர்பில் அமெரிக்காவுக்கு புடின் நிபந்தனை அழைப்பை விடுத்துள்ளார். “நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம், ஆனால் அது இரு தரப்பிலும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். எனவே, புடினின் வருடாந்த செய்தியாளர் மாநாடு திசைதிரும்பும் ரஷ்யாவுக்கான வாய்ப்புக்களை அறிவிப்பதற்கான களமாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக சர்வதேச அரங்கில் தமது மேலாண்மையை வெளிப்படுத்தும் அதே வேளை ரஷ்யாவுக்குள் இருப்பை பலப்படுத்தும் வகையில் தேசியவாத தலைவராக மீளெழுவதற்கான வியூகத்தையே தனது செய்தியாளர் மாநாட்டு உரையில் தொகுத்துள்ளார். மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக புடின் இதனைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.