எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை மாறாமல் செல்வது சர்வசாதாரணம். ஆனால், ஒரு கூட்டமாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு படகு தட்டு மாதிரி செல்லுமா?
ஆம், காடுகளிலிருக்கும் நெருப்பெறும்புகள் மழைக்காலங்களில் வரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி ஒரு தந்திரத்தை உபயோகிக்கின்றன. மழையால் எறும்புப்புற்றுகளில் தண்ணீர் நுழையும்போது, அதில் வாழும் எறும்புகளனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு தட்டுபோன்ற அமைப்பை உருவாக்கி, இலைகள் மிதப்பதுபோல் நீரில் மிதக்கின்றன.
மெதுவாக மிதந்துவந்து மற்றொரு தரைப்பகுதியையோ அல்லது மரங்களையோ பற்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்கின்றன.
நடுப்பகுதியில் ராணி எறும்பும், அதைச் சுற்றி சின்ன வயது எறும்புகளும், வயதில் பெரிய எறும்புகள் ஓரத்தில் இருப்பது போலவும் இவை ஒன்று சேர்கின்றன. நீரில் மிதந்து வரும்போது, படகுக்கோ மீன்களுக்கோ இரையாகாமல் தப்பிப்பதுதான் இவற்றின் பெரிய சவால்.