காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் இரண்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்ட ஹமாஸ், 240 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து காஸா மீதான போரை ஆரம்பித்த இஸ்ரேல் கடல், வான் மற்றும் தரை மார்க்கங்கள் ஊடாகத் தொடரான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
காஸாவிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் நலன்புரி நிலையங்கள் என அனைத்தும் இந்த யுத்தத்தில் இலக்காகியுள்ளன.
இதன் விளைவாக இரத்தம் சிந்துதல்களும், உயிரிழப்புக்களும் காஸாவில் மலிந்துள்ளன. சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது காஸா. இற்றைவரையும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு உலகெங்கிலும் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலும் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இஸ்ரேலிய மக்கள் கூட யுத்தத்தை நிறுத்தி ஹமாஸ் பிடியிலுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளன. யுத்தத்திற்கு முதலில் ஆதரவு நல்கிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கூட காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
இச்சூழலில் அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் கட்டார் முன்னெடுத்த இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தநிறுத்த முயற்சியின் பயனாக இப்போர் ஆரம்பமாகி 48 ஆவது நாள் முதல் கைதிகளை விடுவிக்கும் வகையில் நான்கு நாட்கள் தற்காலிக யுத்தநிறுத்தம் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்டது. நவம்பர் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இப்போர்நிறுத்தம் இரண்டு தடவைகளில் நீடிக்கப்பட்டு ஏழு நாட்கள் அமுலில் இருந்தது. இக்காலப்பகுதியில் ஹமாஸ் பிடியிலிருந்த 110 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்த 240 பலஸ்தீன சிறைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் மேலும் இஸ்ரேலின் 137 பணயக் கைதிகள் ஹமாஸின் பிடியிலிருக்கும் நிலையில், கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் யுத்தத்தை மீண்டும் தொடங்கியது. இப்போர்நிறுத்தத்தை நீடிக்கும் வகையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலின் மொஸாட் உளவுப்பிரிவுகளின் தலைவர்கள் கட்டாரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம், பேச்சை முறித்துக் கொண்டு நாடு திரும்புமாறு இஸ்ரேலிய பிரதமர், மொசாட் தலைவரை திருப்பி அழைத்தார்.
யுத்தநிறுத்தத்தை மீறும் வகையில் ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்த போதிலும், ஹமாஸ் தம்பிடியில் இருக்கும் பெண் பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க நாம் தயார். ஆனால் அவர்களில் இராணுவத்தில் இணைய காத்திருப்பவர்களும் உள்ளனர். அவர்களை விடுவிக்க மற்றொரு உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டும் என நாம் குறிப்பிட்டோம். அதற்கு பதிலளிக்காமலேயே இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறைகளிலுள்ள அனைத்து பலஸ்தீனிய சிறைக்கைதிகளையும் விடுவிப்பதற்கு இஸ்ரேல் முன்வந்தால் எமது பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கத் தயார்’ என்றுள்ளது ஹமாஸ்.
இந்த யுத்தத்திற்கு எதிராக ஹமாஸ் மாத்திரமல்லாமல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு இஸ்ரேலில் இருந்து 2000 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள யெமனின் கௌதி போராட்டக்காரர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள அதேநேரம், ஈராக்கிலுள்ள போராட்டக்குழுக்கள் காஸா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு எதிராக ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றன.
இந்நிலையில் கௌதி போராட்டக்காரர்கள், காஸா மீதான யுத்தத்தை நிறுத்தும் வரை யெமனுக்கு அருகிலுள்ள செங்கடல் பாம் அல் மண்டாப் சர்வதேச கடல் கப்பல் போக்குவரத்து பாதையை இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பல் பயன்படுத்தக் கூடாது. எம் எச்சரிக்கையை மீறி பயணிக்கும் கப்பல்கள் தாக்கப்படும், கைப்பற்றப்படும்’ என்றுள்ளனர்.
அந்த வகையில் ‘கலெக்ஷி லீடர்’ என்ற கப்பலை 22 மாலுமிகள் உட்பட 52 பேருடன் கைப்பற்றி யெமனுக்கு கொண்டு சென்றுள்ள இவர்கள், ‘த சென்றல் பார்க்’, ‘யுனிட்டி எக்ஸ்புலோரர்’, ‘நொம்பர் நைன்’ ஆகிய சரக்கு கப்பல்கள் மீதும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீதும் இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இஸ்ரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான ‘சி.எம். ஈ சி.ஜி.எம் சைனி’ என்ற கப்பல் இந்து சமுத்திரத்தில் வைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது.
இவை இவ்வாறிருக்க, ஈராக் பிரதமரின் ஆலோசகர் பர்கட் அலாடி, ‘காஸா மீது மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்க இடமளிக்க வேண்டாம். அது ஈராக் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும். இங்குள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது போராளிக்குழுக்கள் தாக்கத் தொடங்கும். ஹமாஸ்-இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற மோதலில் ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினர் 50 பேருக்கு மூளைக்காயம் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழலில் மத்திய தரைக்கடல் நீரைக் கொண்டு ஹமாஸின் சுரங்கங்களை நிரப்புவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அமெரிக்காவின் சில அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமிக்குள் கடல் நீரை அதிகளவில் செலுத்தும் போது அப்பகுதி மண்ணின் தன்மை முற்றிலும் மாற்றமடைந்து விடும். அத்தோடு காஸா மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அது பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலியப் பிரதமரைச் சந்தித்துள்ள பணயக் கைதிகளின் உறவினர்கள், ‘ஹமாஸின் சுரங்கங்களுக்குள் கடல்நீரை செலுத்தி ஹமாஸுடன் சேர்த்து எமது உறவினர்களையும் அழித்து விட வேண்டாம்’ எனக் கோரியுள்ளனர்.
இவ்வாறு காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி சர்வதேச ரீதியிலும் இராஜதந்திர மட்டத்திலும் ஜனநாயக வழிகளிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தம் காரணமாக காஸா மக்கள் முகம்கொடுத்துள்ள துன்பங்கள், அவர்களது இழப்புக்கள் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. ஐ.நா.வும் உலக நாடுகளும் யுத்தத்தை நிறுத்தி அமைதி வழிக்கு திரும்புமாறு கோரிய வண்ணமுள்ளன. இஸ்ரேல் உட்பட உலகின் பல நகரங்களிலும் மீண்டும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.
இருந்த போதிலும் இக்கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளன. ஐ.நாவோ வேறு எவருமோ எம்மைக் கேட்க முடியாது என்ற தோரணையில் யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. தம் நாட்டு பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்காது, யுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது இஸ்ரேல். உலக மக்கள் மத்தியில் இந்த யுத்தம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களும் ஐயங்களும் இவையாகும்.
மர்லின் மரிக்கார்