இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பல சவால்களுக்கு மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சியாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தார்மீக மற்றும் நெறிமுறையான அரசியல் கலாசார நோக்குடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2016 நவம்பர் 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இக்கட்சி உருவாவதற்கு பல அரசியல் காரணிகள் இருந்தன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்ததையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளுக்குச் சென்றது. அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மதிப்பளிக்கும் அந்த அரசியல் சித்தாந்தத்தை கொண்டவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆசன அமைப்பாளர் பதவி தொடக்கம் மத்திய செயற்குழு பதவி வரைக்கும் பதவி வகித்த மகிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர்கள் பலர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்கள். பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பலர் சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ.ல.சு கட்சியில் இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விசுவாசமான அதிகார முகாம் தமக்கு அரசியல் செய்வதற்கு பொருத்தமான இடம் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தது. அதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் மக்களிடமிருந்து வந்த கோரிக்கைக்கு அமைவாக தெற்காசியாவிலேயே அரசியல் ஆளுமையான மகிந்தராஜபக் ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது. இந்தக் கட்சியை உருவாக்குவதற்கான முன்மொழிவும் தேவையும் நாட்டைச் சுற்றி வலம் வரும் மஹிந்த காற்றாக மாற்றமடைந்தது. மகிந்த ராஜபக் ஷவின் அரசியல் அதிகார முகாமுடனேயே அரசியல் செய்யவே வேண்டும் என்ற தேவை இந்த தரப்புக்கு இருந்தது.
மக்களிடமிருந்து இந்த யோசனை தோன்றினாலும் இந்த சக்தியை ஏற்பாடு செய்யும் மிக கஷ்டமான பணிகளை மேற்கொண்டது பெஷில் ராஜபக் ஷவாகும். நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெசில் ராஜபக் ஷ சிறையில் இருந்து கொண்டே இந்த கட்சியைக் கட்டியெழுப்பும் திட்டங்களை முன்னெடுத்தார். சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்ததன் பின்னர் கட்சியை கட்டியெழுப்பும் மிகவும் கஷ்டமான பணிகளை முன்னெடுத்ததும் அவரேயாகும்.
2017ம் ஆண்டு மே தினம் கட்சியை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தில் தீர்க்கமான அரசியல் மைல்கல்லானது. இது மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான செயலாக இருந்த போதிலும், அந்த சவாலை கட்சியால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இது கட்சியைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்பது மறுக்க முடியாதது. மிகவும் வலிமையான, முறையான அரசியல் கட்சி அரசியல் இயக்கமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதற்கு அன்று கூடியிருந்த மக்கள் சாட்சியாகினர். கட்சியை கட்டியெழுப்பியதன் பின்னர் அதற்கு இணையாக பிரதான இரண்டு இணைக் குழுக்களாக பொதுஜன மகளிர் முன்னணியும் பொதுஜன இளைஞர் முன்னணியும் பலம் மிக்கதாக உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் பொதுஜன பெரமுனவுடன் அரசியல் ரீதியாக கைகோர்த்துக் கொள்வதற்கு விருப்பமுள்ள சகோதர அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்மைக்கால வரலாற்றில் பல சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் பல வெற்றிகளைப் பெற்ற அரசியல் கட்சியாகும். இதன் முதலாவது வெற்றி 2018ஆம் ஆண்டில் இடம் பெற்ற உள்ளூராட்சித் தேர்தலாகும். இத்தேர்தலில் கட்சி மிக சிறப்பான வெற்றியை பெற்றுக் கொண்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு கூட்டணி அமைத்திருந்தால் பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 18 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.
2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலிலும் கட்சி மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கொவிட் தொற்றுடன் இந்த நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து 1970ம் ஆண்டு வரை ஒரு வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்து வந்தது. இதனிடையே பல்வேறு சமூக நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றுக்கு மத்தியில் நாடு முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்தது. அதேபோன்று மக்களுக்காக பாரிய வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. காபனிக் உரக் கொள்கை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய முடிந்தது மக்கள் நலனுக்காகவே ஆகும். இதன் அடிப்படையில் அபிவிருத்திகளை திட்டங்களோடு தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்த வேலை திட்டங்களை ஆரம்பித்து மூன்று மாதத்திற்குள் அதாவது 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது. வெளிநாட்டுப் பணியாளர்கள் பணம் அனுப்புவது நிறுத்தப்பட்டமை, சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்தமை, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட்டமை, தனிமைப்படுத்தலின் போது அவர்களுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது, அரச ஊழியர்களின் சம்பளம், பொதுச் சேவைகளை முன்னெடுத்துச் சென்றமை, மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்ததோடு, இது இந்நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஷக்களினால் உருவாக்கப்பட்டது எனக் காட்டுவதற்கு இந்நாட்டில் சிலர் முயற்சி செய்தார்கள். வங்குரோத்து அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதற்காக அவதூறுகள், பொய்களைப் பரப்புதல், சேறு பூசுதல் போன்றவற்றை முன்னெடுத்தனர்.
இங்கு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவடைந்து நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளிக்கும் போது 8.2 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த தொகை 7.1 பில்லியனாகக் குறைக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது. 30 வருடகால யுத்தத்தை முடித்து நாட்டையும் அபிவிருத்தி செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தினால் 8.2 பில்லியன் டொலர் கையிருப்புகளை சேமிக்கவும் முடிந்தது.
எவ்வாறாயினும் கொவிட் தொற்றின் காரணமாக நாட்டுக்கு டொலர் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டதன் பின்னர் தொடர் பற்றாக்குறை ஏற்பட்டது பொதுவானதே. அந்த சந்தர்ப்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கு நாடு உள்ளானது. மின்சாரம், எரிபொருள் போன்றவை தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியது. இதுவே ஆட்சி கவிழ்விப்புக்குச் சரியான தருணம் என காத்திருந்த தரப்பு அரசியல் ரீதியாக இதனைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற நிலைக்கே போராட்டத்தை முன்னெடுத்தது. அதிகாரத்துக்காக மனித கொலைகள் இடம்பெற்ற நாட்டில், பதவிக்காகக் கிளர்ச்சி செய்த நாட்டில், அந்த அரசியல் கலாசாரத்தை பொது ஜன முன்னணி பின்பற்றவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அதிகாரத்திற்காக அந்த ஒழுக்கக்கேடான முறைகளைக் கடைப்பிடிக்காமல் விட்டது ஒழுக்கமிகு அரசியல் கலாசாரத்துக்கு மதிப்பளித்தேயாகும். அவர் ஜனநாயக வழியில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். அதேபோன்று அந்த அரசாங்கமும் விலகியது. அதன் பின்னர், ஒரு கட்சியாக பொதுஜன பெரமுன பல சறுக்கல்களை எதிர்கொண்டது.
என்றாலும் மிகக் குறுகிய காலத்தினுள் மீண்டும் சாம்பலில் இருந்து எழ ஆரம்பித்துவிட்டது. தொகுதி அமைப்புக் குழுக்களை மீண்டும் பலப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி நாடு முழுவதிலும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கட்சிக் கிளைகள் மீண்டும் வலுவூட்டப்பட்டன. அதன் இறுதி நிகழ்ச்சியாக வரும் 15ஆம் திகதி தேசிய மாநாடு நடத்தப்பட உள்ளது. அடுத்த வருடம் தேர்தல் வருடமாகும். அந்த தேர்தல் ஆண்டில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் அந்த மாநாட்டில் வைத்து தேசத்தின் முன் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து போட்டியிட்டு தற்போது ஏனைய குழுக்களுடன் இணைந்துள்ள எவரும் உண்மையை புரிந்து கொண்டு தமது கட்சியில் இணைந்து கொள்வதாயின் சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டுவதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தயங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் கூறினார்.
சுபத்ரா தேசப்பிரிய தமிழில் - எம். எஸ். முஸப்பிர்