உலக அரசியல் போக்கு மேற்காசியாவில் மையங்கொள்ள ஆரம்பித்துள்ளது. பொதுவாகவே மேற்காசியாவுக்கு அத்தகைய தனித்துவம் காணப்பட்டது. தற்போது அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. ஹமாஸ்-, இஸ்ரேல் போர் மட்டுமன்றி அத்தகைய போர் உலகளாவிய ஆதிக்க சக்திகளுக்கிடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய இரு மாதங்களைக் கடந்த நிலையில் போர் நீடிப்பதென்பது இஸ்ரேலின் போரியல் உத்திகளில் காணப்படும் பலவீனத்தையே தெளிவுபடுத்துகிறது. இஸ்ரேல் உருவான காலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த பல போர்களின் நாட்களின் எண்ணிக்கை மிகக் குறுகியதாகவே அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய போர் ஹமாஸின் உத்தியாலும் அதன் நட்பு சக்திகளின் அணுகுமுறைகளாலும் இஸ்ரேல் மீளமுடியாததுடன், போரை முடிவுக்கு கொண்டுவர முடியாதுள்ளது. இதுவரை காலமும் மொஸாட் உலகளாவிய ரீதியில் வலுமிக்க புலனாய்வு அமைப்பாக இருந்த நிலை காணாமல் போயுள்ளது. அது அதிக கேள்விகளுக்கு உட்பட்டுள்ள புலனாய்வுத் துறையாக மாறியுள்ளது. அச்சுறுத்தலையும் கொலைகளையும் செய்வதன் மூலம் ஒரு தேசத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலை காணாமல் போயுள்ளது. இஸ்ரேலின் தோல்வியும் அதுவாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் அராபியர்களது வலுமிக்க நட்பு சக்தியாக விளங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினது மேற்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.
கடந்த 06.12.2023 இரு மேற்காசிய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி அரச முறைப்பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்தார். இரு பயணங்களுமே அரசியல், இராணுவ முக்கியத்துவம் பெற்ற விஜயங்களாகவே அமைந்தன. குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இரு நாடுகளிலும் உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. குதிரைப்படை வாகன அணிவகுப்பு விமான அணிவகுப்பு என மிகக் கோலாகலமான வரவேற்பாக அமைந்திருந்ததென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமீரகத் தலைவர் ேஷக் முகமது பின் சஜீத்அல்நஹ்யானி உடனான புடினது உரையாடல் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தது. அரபு உலகத்தின் முக்கிய பொருளாதார பங்காளி என ரஷ்ய ஊடகங்களுக்கு கிரெம்ளின் அறிவித்துள்ளது. எங்கள் நட்புறவு முன்னெப்போதுமில்லாத அளவை எட்டியுள்ளது என புடின் வர்ணித்தார். அதனை அடுத்து சவுதி அரேபியா பயணமான ரஷ்ய ஜனாதிபதி அந்த நாட்டின் ஆட்சியாளர் இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். அதன் போது இளவரசரை ரஷ்யாவுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்ததுடன் இரு நாட்டுக்குமான நட்புறவை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார் புடின். அதன்போது பிராந்திய ரீதியான நிகழ்வுகள் மற்றும் தீர்மானங்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதெனவும் முடிவானது. இரு நாட்டுக்குமான உறவு மேற்காசியாவில் நிகழும் பதற்றங்களை தணிக்க உதவியதென சல்மன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் செச்சென் குடியரசின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் பங்கெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரு நாட்டுத் தலைவர்களும் ஹமாஸ், -இஸ்ரேலியப் போரை பற்றியும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும் உரையாடினர். குறிப்பாக ஏனைய நாடுகளின் கிளர்ச்சியாளர்களது மோதல் தொடர்பிலும் உரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது. அதேநேரம் இரு தலைவர்களும் ஓபெக் பிளஸ் தொடர்பில் உரையாடியதாகவும் உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதி தொடர்பிலும் சில முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அதே நேரம் ஈரானிய ஜனாதிபதி ரைசின் மொஸ்கோ விஜயம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம் இஸ்ரேல், -ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர். அப்போது ரஷ்ய ஜனாதிபதி ஹமாஸ், -இஸ்ரேலியப் போரையும் உக்ரைன்-, ரஷ்ய மோதலையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இச்சந்திப்பில் ஈரானிய ஜனாதிபதி காஸாவில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தொரிவித்ததுடன் இரு தலைவர்களும் ஹமாஸ், -இஸ்ரேலியப் போர் தொடர்பில் நீண்ட நேரம் உரையாடியதாக கிரெம்ளின் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகைய சந்திப்புகளுக்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய புரிதல் அவசியமானது. அவற்றை விரிவாக நோக்குவது பொருத்தமானதாகும்.
ஓன்று, ரஷ்யாவும் அதன் ஜனாதிபதியும் தனிமைப்படுத்தப்படுவதாக மேற்குலகத் தலைவர்களும் ஊடகங்களும் உரையாடிவருகின்றனர். ரஷ்ய ஜனாதிபதியினது மேற்காசியா நோக்கிய விஜயம் பலதடவை நிகழ்ந்துள்ளது. புவியியல் ரீதியான தொடர்பும் எண்ணெய் வளமும் ரஷ்யாவை சூழவுள்ள இஸ்லாமிய குடியரசுகளின் கட்டமைப்பும் நெருக்கமான உறவை கட்டமைத்ததோடு மேற்குலகத்தின் சுரண்டலும் ஆக்கிரமிப்பும் இஸ்லாத்துக் எதிரான கொள்கையும் ரஷ்ய, மேற்காசிய உறவை பலப்படுத்துகிறதாகவே தெரிகிறது. இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிராக மேற்குலக நாகரிகத்தின் ஆக்கிரமிப்பு முழுமையாக சீனா-, ரஷ்யா சார்பான உறவை வளர்ச்சியடையச் செய்துவருகிறது. மேற்குலகத்தின் போலி ஜனநாயமும், தாராளவாதமும் முழுமையாக காஸா போரில் வெளிப்பட்டுள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்தும் ரஷ்யாவின் அணுகுமுறை தனிமைப்படுத்தலிலிருந்து ரஷ்யாவை விடுவிக்க உதவுகிறது. மேற்குலகத்தை முழுமையாக நிராகரிக்கும் ரஷ்யாவினது தலைமை, கீழைத்தேச நாடுகளுடனான உறவை மையப்படுத்தி எழுச்சி பெற்றுவருகிறது. பொருளாதார அடிப்படைகளை மட்டுமல்லாது இராணுவ அரசியல் பரிமாணத்தையும் கீழைத்தேச நாடுகளுடனான நட்புறவினால் ரஷ்யா கட்டிவளர்த்து வருகிறது. கடந்த இரு முக்கிய மாநாடுகளை தவிர்த்த புடின், அதிக விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். குறிப்பாக குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைக்கு பின் அவர் மீதான விமர்சனம் அதிகரித்திருந்தது. ஆனால் இஸ்ரேலிய, ஹமாஸ் போருக்கு பின்னர் அவை அனைத்தையும் தகர்த்ததுடன் இஸ்ரேலிய தாக்குதலுக்கும் காசா மக்கள் படுகொலைசெய்யப்படுமள வுக்கும் நிகராக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் உலகளாவிய ரீதியில் வலுவடைந்துள்ளது. அது மட்டுமல்ல ரஷ்ய ஜனாதிபதி மீது குற்றம்சாட்டிய அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே காசா மீதான போரை நிகழ்த்துகின்றன என்பது அதன் போலித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. காசா மீதான போர் புடினதும் ரஷ்யாவினதும் தனிமையை தகர்த்ததுடன் உலக நீதியின் நியாயம் எதுவென்பதையும் உலகத்துக்கு தந்துள்ளது.
இரண்டு, ரஷ்யா உக்ரைன் போரில் வெற்றிகரமான முகத்தையே ரஷ்ய ஜனாதிபதி அடைந்துள்ளதாகவே தெரிகிறது. ஹமாஸ், -இஸ்ரேலிய போர் உக்ரைன் மீதான மேற்குலகத்தின் கவனத்தை முழுமையாக மட்டுப்படுத்திவிட்டதாகவே தெரிகிறது. இராணுவ ரீதியில் மட்டுமல்ல பொருளாதார ஒத்துழைப்பிலும் அரசியல் பலத்திலும் மேற்கும் நேட்டோவும் உக்ரைனை கைவிட்டதாகவே தெரிகிறது. இது புடினது உத்திக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே தெரிகிறது. சில ஆய்வாளர்கள் ஹமாஸ்-, இஸ்ரேல் போரை புடினே தொடக்கியதாகவும் உரையாடியுள்ளனர். அதற்கான ஊகங்களே அன்றி அதனை நிறுவுவதற்கான தகவல்கள் மிக அரிதானதே. ஆனால் இந்தப் போர் புடினது இருப்பையும் தனிமைப்படுத்தலையும் மட்டுமல்ல ரஷ்யாவின் புவிசார் அரசியலையும் பாதுகாத்துள்ளது. உக்ரைன் போரும் ஹமாஸ், -இஸ்ரேல் போரும் மேற்கு கிழக்கு விரிசலுக்கானது மட்டுமல்ல, ஐரோப்பாவும் அமெரிக்காவும் போர்களை கீழைத் தேசத்திற்குள் நிகழ்த்துவதில் இருபத்தியோராம் நூற்றாண்டை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளனர். ஐரோப்பா மீதான இரு உலக போர்கள் ஏற்படுத்திய நெருக்கடியை தவிர்ப்பதற்கு மேற்கு முயன்றது மட்டுமல்லாது, அதில் வெற்றிகரமான அடைவை சந்தித்துமுள்ளது. தற்போது, ஐரோப்பா தனக்கு ஏற்பட்ட அனைத்து நெருக்கடியிலிருந்தும் மீளமைத்துக் கொள்ள முயலுகிறது. மேற்கு ஐரோப்பாவுக்கு நிகழ வேண்டிய போரை, கிழக்கு ஐரோப்பாவுக்குள் ஐரோ- ஆசிய நாடுகள் உக்ரைன், -ரஷ்யாவுக்குள் தொடக்கியது மட்டுமல்லாது அடுத்த கட்டப் போரை ஆசியாவுக்குள் தள்ளியுள்ளது. அத்தகைய போரை நிலையானதாக்கவும் அழிவுகளை ஆசியாவுக்குள் ஏற்படுத்தவும் அதன் நேரடி விளைவுகளை, ஐரோப்ப, அமெரிக்க கண்டங்கள் எதிர் கொள்ளாமல் தவிர்க்கவும் மேற்கு போராடியதுடன் அதில் வெற்றியையும் எட்டியுள்ளதாகவே தெரிகிறது. ஆனால் ஹமாஸ், -இஸ்ரேலிய போரின் நீடிப்பும் ஹமாஸின் பலத்திலுமே மேற்குலகத்திற்கான நெருக்கடி தங்கியுள்ளது. அதனை புடின் நன்கு உணர்ந்துள்ளது போலவே தெரிகிறது. ஏனெனில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை கொண்டுள்ள ஆயுத அமைப்புகளுக்கான ஆயுத விநியோகத்தை ரஷ்யா மேற்கொள்வதாக தகவல்கள் உண்டு. அதற்கான நாடுகளுடன் ரஷ்யா நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. தற்போது புடினது மேற்காசிய விஜயமும், ஈரான் ஜனாதிபதியின் மொஸ்கோ பயணமும் அதனையே உறுதிப்படுத்துகின்றன. சிரியா மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சார்ந்து புடினது எச்சரிக்கைகள் அதிகரித்துள்ளன. காரணம் சிரியாவில் ரஷ்யப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ரஷ்யாவின் கடற்படை முகாமும் காணப்படுகிறது. மேற்குலகத்தின் அரபுவசந்தத்தின் முடிவு சாத்தியமான நாடும் சிரியா என்பது நினைவு கொள்ளத்தக்கது.
எனவே ரஷ்ய ஜனாதிபதியின் இரு போர்களும் மேற்குக்கு நெருக்கடியானதாக மாறியுள்ளது என்பது மட்டுமல்லாது உக்ரைன், -இஸ்ரேலிய இழப்புக்களும் துயரங்களும் மேற்குக்கு இலாபமானதாகவே தெரிகிறது. அதாவது மேற்குலகத்தின் போரை உக்ரைன் எதிர் கொண்டது போல் தற்போது இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது. ஆனால் ஜெலன்ஸ்கி போன்று அரசியல் உத்தியற்றவர் அல்ல நெதன்யாகு என்பதையும் யூதர்கள் இலகுவில் போரை வெற்றியின்றி முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள் என்பதையும் உணர வேண்டும். அதேநேரம் ஜெலன்ஸ்கியின் மூதாதையரும் யூதர்கள் என்ற தகவல் உண்டு என்பதையும் நினைவு கொள்வது பொருத்தமானது. இன்றைய போரியல் யுகம் தகவல் தொழில்நுட்பத்துக்குள்ளால் நிகழ்வதாகும். இதில் யூதர்கள் இஸ்லாமியர்கள் என்ற வேறுபாட்டைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்பத்தின் திறன் யாரிடம் உண்டென்பதே போரியலின் வெற்றியாகும். யூதர்கள் போன்று உயிராயுதத்தை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தாலும் தகவல் தொழில்நுட்பத்தில் யூதர்களுக்கு இணையாக இஸ்லாமியர்கள் மாறிவிட்டனர். அயன்டோமின் சிதைவுக்கு ஹமாஸின் தகவல்தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே காரணமாகும். இது தனித்து ஹமாஸ் போராளிகளால் மட்டும் சாத்தியமாகவில்லை. ஈரான், துருக்கி, மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளது ஒத்துழைப்பிலேயே தங்கியிருந்தது. அப்படியாயின் இஸ்லாமிய உலகம் தழுவிய போராக ஹமாஸ் – -இஸ்ரேலிய போர் மாறியுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் ஹமாஸ்-, இஸ்ரேலியப் போராக அமைந்தாலும் அடிப்படையில் இஸ்லாமிய எதிர் மேற்குலகப் போராகவே நிகழ்கிறது.