திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக ‘மண்டேலா’, ‘திரவுபதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. பரதநாட்டியக் கலைஞரான இவர், ’கூத்துப்பட்டறை’ மூலம் பல்வேறு மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு வெளியான ‘டூலெட்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘திரவுபதி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்திலும் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும் லூர்து என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
தனது கணவரை டேக் செய்து தனது இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். மேலும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஷீலா நீக்கியுள்ளார்.