ஐசாக் அசிமோவ் (Isaak Asimov) ஒரு அமெரிக்க அறிபுனை எழுத்தாளரும், பாஸ்டன் பலகலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அசிமோவ், அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய ஃபவுண்டேஷன் (Foundation series) வரிசைப் புதினங்களும், ரோபோ (Robot series) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் செம்மையான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தனது வாழ்நாளில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 90,000 கடிதங்களை எழுதிய அசிமோவ் தூவி தசம முறையிலுள்ள (நூலகப் பகுப்பு முறை) பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதாத ஒரே துறை – மெய்யியல் மற்றும் உளவியல். அசிமோவ் வாழ்ந்த காலத்தில் அறிபுனை இலக்கியத்தின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (மற்ற இருவர் ஆர்தர் சி. கிளார்க்கும் ெராபர்ட் ஹெய்ன்லீனும்). புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், அறிபுனைவு கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும் அசிமோவ் எழுதியுள்ளார்.
அசிமோவ் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி 1919 மற்றும் ஜனவரி 2, 1920க்கு இடைப்பட்ட காலத்தில் தற்போதைய பெலாரஸின் எல்லையிலுள்ள சோவியத் ரஷிய ஃபெடரேட்டிவ் சோசலிச குடியரசில் பிறந்தவர். அசிமோவின் உண்மையான பிறந்த தினம் தெரியவில்லை; எனினும் அசிமோவே தன் பிறந்தநாளை ஜனவரி 2 ஆம் திகதி கொண்டாடினார்.
அசிமோவுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவர்கள் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்தது.அவர் பிரிட்டிஷ் மொழியும், ஆங்கில மொழியும் பேசுவார்.
அசிமோவ் சிறு வயதிலேயே அறிவியல் புனை கதைகளைப் படிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது தந்தையோ அவற்றைப் படிப்பது வீண் வேலை என்பார். அதற்கு அசிமோவ் அது அறிவியல் எனும் தலைப்பைக் கொண்டுள்ளது எனவே, அது கல்வி சார்ந்தது என கூறுவார். அசிமோவ், தன் 11ஆவது வயதில் சொந்தமாகக் கதை எழுதினார். 19வயதில் அவரது அறிவியல் புனைகதைகள் நாளிதழ்களில் வெளிவந்தன.
1938இல் சேத் லோ ஜூனியர் கல்லூரி மூடப்பட்ட பின் தற்போதைய கொலம்பிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1939இல் வேதியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் அவர் அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1938இல் வேதியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, 1948இல் உயிர்வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இடையில் 3 வருடம் பிலடெல்பியா கடற்படை விமான நிலையத்தில் வேலை செய்து வந்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின் பாஸ்டன் மருத்துவியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1958இல் இருந்து முழு நேர எழுத்தாளரானார். அசிமோவின் 1956இலிருந்தான தனிப்பட்ட ஆவணங்கள் பல்கலைக்கழகத்தின் முகர் நினைவு நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த ஆவணங்கள் 464 பெட்டிகள் அல்லது 71 மீற்றர் அலுமாரி இடத்தை நிரப்பக் கூடியதாக உள்ளது.
அசிமோவுக்கு 1977இல் மாரடைப்பு ஏற்பட்டு, டிசம்பர் 1983இல் மூன்று மாற்று வழி இணைப்பறுவை (பை பாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி அசிமோவ் காலமானார்.