இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய துறையாகக் காணப்படுகின்ற விவசாயத்துறையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு த்தாபனத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கே: நாட்டின் விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை என்பன அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்டத்துடன் எவ்வாறு புத்துயிர் பெற்று வருகின்றன?
பதில்: எமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது பற்றி அமைச்சரவையிலும் நாம் கலந்துரையாடியுள்ளோம். அதேபோல, வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு எமது உணவு உற்பத்தியை அதிகரித்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுப்பது கடினமானதாக இருக்காது. ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக நாட்டைப் பிரச்சினையிலிருந்து மீட்பது பற்றிக் கூறி வருகின்றனர். எனினும், என்னைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயமான விவசாயத்துறையின் ஊடாக சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். விவசாத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் முதலீடாகக் கருதி முன்னெடுப்போமாயின் நாட்டின் சகல பக்கத்திலிருந்தும் பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது. நான் மாத்திரமன்றி ஜனாதிபதியும் சவாலான சூழ்நிலையிலேய இருந்தார். விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் நிலையிலிருந்து தற்பொழுது சுமுகமான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றேன். குறிப்பாக விசாயிகளை மீண்டும் விவசாயத்தை நோக்கி திருப்புவதற்கு, அவர்களைத் தைரியப்படுத்துவதற்கு ஊடகங்கள் விசேட ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
கே: நீங்கள் கூறுவது சரி, மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்த சந்தர்ப்பத்திலேயே விவசாய அமைச்சுப் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு இணைந்ததாக இத்துறையை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டுசெல்ல எதிர்பார்த்துள்ளீர்கள்?
பதில்: விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடியமையே முன்னை அரசாங்கம் பதவி விலகுவதற்கும், முன்னாள் ஜனாதிபதி தனது பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேறும் நிலைவரை செல்வதற்கும் காரணமாகின. இதற்காக விவசாயிகள் மீது குற்றஞ்சுமத்த முடியாது. உண்மையில் விவசாயிகள் தமக்கான உரத்தைத் தேடிக்கொள்ள முடியாது பாரிய அழுத்தத்துக்கு முகங்கொடுத்தனர். இதன் வெளிப்பாடாகவே வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அந்தளவுக்கு உரத் தட்டுபாடு நிலவியதுடன், உரத்தை இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடும் வெகுவாகக் காணப்பட்டது.
எனினும், ஜனாதிபதி நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்த பின்னர் உரத்தை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதியுதவியைப் பெற்றுக் கொடுத்ததுடன், அமைச்சரவையின் ஒத்துழைப்புடன் விவசாயிகளின் பிரச்சினைகளை ஒரளவுக்குத் தீர்க்க முடிந்தது. கடந்த வருடத்தில் எமக்குத் தேவையான அரிசித் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்திருந்தோம். எனினும், இந்த நிலைமையைத் தற்பொழுது மாற்ற முடிந்துள்ளது.
கே: விவசாயத்துறையில் உள்ள அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைத்து அவர்களை கிராம மட்டங்களுக்குக் கொண்டுசென்று விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதைக் காண முடிகிறது. இதுபற்றி விளக்க முடியுமா?
பதில்: உண்மையில், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல திட்டங்களை வகுத்துள்ளேன். அமைச்சர்கள் மாத்திரம் அடிமட்டத்துக்குச் சென்று பணியாற்றுவதால் முழுமையான பலன் கிடைக்காது. அரசாங்க அதிகாரிகளும் கிராம மட்டத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும். எனக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களையும் எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ ஒரு இலட்சம் அரசாங்க ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் விவசாயத்துறையை சிறந்ததொரு நிலைக்கு முன்னேற்ற முடியும். பேராசிரியர் மற்றும் கலாநிதி பட்டங்களைக் கொண்ட அதிகமான பணியாளர்களைக் கொண்ட அமைச்சாக எனது அமைச்சுக் காணப்படுகிறது. உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகளிலிருந்து கிராம மட்டத்தில் செயற்படும் உத்தியோகத்தர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் நாட்டை விவசாயத்துறையின் ஊடாகக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.
கே: ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உலக சந்தையில் சிறந்த இடத்தைப் பிடிப்பதற்குப் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களைவிட புதிய ஏற்றுமதிகளை ஊக்குவிக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
பதில்: ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையே தற்பொழுது தேவையாக உள்ளது. எமது விவசாய உற்பத்திகளுக்கு ஏற்றுமதிக்கான கேள்விகள் காணப்படுகின்றன. அவற்றை சரியான தரத்துடன் உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும். இதனைவிட இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கறுவா, ஏலம் போன்ற வாசனைத் திரவியங்களுக்கு உலகத்தில் காணப்படும் போட்டித்தன்மை போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தேயிலைச் சந்தையில் பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளுக்குத் தேயிலை ஏற்றுமதியில் புதிய நாடுகள் வந்திருக்கும் நிலையில், நாம் தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கின்றோம். எனவே, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை அதிகரித்தாலே அதனால் ஈட்டப்படும் அந்நிய செலாவணியையும் அதிகரிக்க முடியும். அதேபோல, தேயிலை மற்றும் தென்னை உற்பத்திகளுக்கான கேள்வியும் குறைந்துள்ளது. இந்தத் துறைகளை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையின் தேவைக்கு ஏற்ப அவற்றை உற்பத்தி செய்ய வேண்டும்.
அது மாத்திரமன்றி, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடிய மரக்கறிகள் மற்றும் கீரை வகைகள் குறித்துப் பிரச்சினை காணப்படுகிறது. அண்மைக் காலத்தில் நாம் ஏற்றுமதி செய்த கீரைகள் வெளிநாடுகளில் பயன்பாடு குறைந்தவையாக இருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்து சர்வதேச சந்தைக்குத் தேவையான விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையிலிருந்து வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு வெளிநாட்டில் கிராக்கி உள்ளது. இதுபோன்று முடிந்தளவு தயாரிப்புக்களின் ஊடாக நாட்டுக்கு டொலரை ஈட்டிக்கொடுக்கும் அமைச்சாக இதனை மாற்றுவதே எனது இலக்காகும்.
கே: நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கும்போது ஒரு சில தரப்பினர் அவற்றைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். சிலர் போராட்டங்கள் போன்றவற்றை முன்னெடுக்கின்றனர், தண்ணீர் விற்பனை செய்யப்படப் போகின்றது என்பது போன்ற பிரசாரங்கனை முன்னெடுத்துக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான நிலையில் பொதுமக்கள் எவ்வாறான ஒத்துழைப்பை தற்போது வழங்க வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: அண்மைய நாட்களில் தண்ணீரை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற விமர்சனங்களை சிலர் முன்வைத்து வருகின்றனர். நான் விவசாய அமைச்சர், குறைந்தது இது பற்றி நாம் சிந்திக்கக்கூட இல்லை. போலியான பிரசாரங்களை முன்னெடுத்து விவசாயிகளை அதைரியப்படுத்தி நாட்டை மீண்டும் குழப்பமான நிலைக்குக் கொண்டு செல்லவே அவர்கள் முயற்சிக்கின்றனர். விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் போன்ற அத்தியாவசியமானவற்றைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு நாம் எவ்வாறு தண்ணீரை விற்பனை செய்வோம்? அப்பட்டமான பொய்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். எனினும், நீரை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு நீர் முகாமைத்துவம் அவசியமானது. சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொண்டிருந்தால் அண்மையில் ஏற்பட்ட வரட்சியின் போது விவசாயிகளைப் பாதிப்பிலிருந்து மீட்டிருக்க முடியும்.
கே: தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன?
பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதனைச் செய்ய முடியும்? இதனால் மக்களின் பணத்தை வீணடிப்பது மாத்திரமே மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி தற்பொழுது பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக் கூறியுள்ளார். படிப்படியாக அனைத்துத் தேர்தல்களும் நடத்தப்படும். இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவரைப் பொறுப்பேற்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். இருந்தபோதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தானாக முன்வந்து சவாலைப் பொறுப்பேற்றார். ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் பாரிய சிரமங்களுகக்கு முகங்கொடுத்திருந்தனர். இந்த நிலைமையைத் தற்பொழுது மாற்ற முடிந்துள்ளது.