Home » ஹீரோக்களாகப் போற்றப்படும் ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள்!

ஹீரோக்களாகப் போற்றப்படும் ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள்!

by Damith Pushpika
December 3, 2023 6:00 am 0 comment

ந்தியாவின் உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் திகதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக ஜேபிசி இயந்திரம் மூலம் மணல் குவியலை அகற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

இரண்டாம் கட்டமாக சில்க்யாரா முனையில் இருந்து மணல் குவியலின் பக்கவாட்டில் ராட்சத இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டன. ஆனால் சுமார் 5-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் தோல்வியடைந்த நிலையில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மட்டும் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது. ஆனால் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் அந்த இயந்திரமும் உடைந்தது.

இந்த சூழலில் டெல்லியில் இருந்து 24 ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை கை வேலைப்பாடாக துளையிட ‘எலி வளை’ தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு களமிறங்கினர். அசூர வேகத்தில் இயங்கிய அவர்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதன்மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது பற்றி மீட்புப் பணியில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளி கூறியதாவது,பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்வோம். எனவே கடந்த திங்கட்கிழமை இரவு பணியை தொடங்கியதில் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது குழுவில் டிரில்லிங், கட்டர்ஸ், வெல்டர்ஸ் என அனைத்து வகையான தொழிலாளர்களும் உள்ளனர்.

சில்க்யாரா சுரங்கப் பாதையில் 800 மி.மி. விட்டம் கொண்ட குழாயில் நுழைந்து சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டோம். இதைவிட குறுகலான குழாய்களில் நுழைந்துகூட பணி செய்திருக்கிறோம். சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஒருவர் தோண்ட, மற்றொருவர் மணல் குவியலை அள்ளினார். 3-வது நபர் சிறப்பு டிராலியில் மணலை நிரப்பினார். இந்த சிறப்பு டிராலியை நாங்களே உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை தோண்டுவோம் என்று அதிகாரிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதைவிட குறைவான நேரத்தில் சுரங்கத்தை தோண்டி குழாய்களை பொருத்திவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு ‘எலி வளை’ சுரங்க தொழிலாளி கூறும்போது, ‘‘அமெரிக்க இயந்திரம் மூலம் சுமார் 5 நாட்களில் 47 மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை தோண்டிவிட்டோம். செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை சுரங்கத்தை தோண்டி முடித்தோம். அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்கள் எங்களது முகங்களைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களது மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு அளவே இல்லை’’ என்றார்.

அமெரிக்காவின் 25 டன் ஆகர் இயந்திரம், ராட்சத துளையிடும் இயந்திரங்கள் செய்ய முடியாத சவால் நிறைந்த பணியை, மிக எளிதாக செய்து முடித்த ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹீரோவாக கொண்டாடப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட ‘எலி வளை’ நடைமுறை: வடகிழக்கு மாநிலங்களில் ‘எலி வளை’ சுரங்கம் தோண்டுவது சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேகாலயாவில் ‘எலி வளை’ சுரங்கம் தோண்டி நிலக்கரியை வெட்டி எடுப்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

மேகாலயாவின் ஜெயந்தியா மலைப் பகுதியில் அருகிலும், மேற்பகுதிகளில் இருந்தும் 4 அடி அகலத்தில் சுமார் 100 அடி ஆழம் வரை சுரங்கம் தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. மூங்கில் ஏணி வழியாக தலையில் டோர்ச் விளக்கு, கையில் சிறிய இயந்திரம் அல்லது கோடாரியுடன் உள்ளே நுழையும் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி கூடையில் அள்ளி வருகின்றனர். இந்த சட்டவிரோத ‘எலி வளை’ சுரங்கங்களால் இதுவரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன்காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டில் ‘எலி வளை’ சுரங்க நடைமுறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. ஆனால் மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களில் இன்றளவும் சட்டவிரோதமாக ‘எலி வளை’ சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டப்பட்டு வருகிறது.

சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது திட்டப் பணிகளுக்காக ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருகின்றன. உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் இக்கட்டான சூழல் எழுந்ததால், தடை செய்யப்பட்ட ‘எலி வளை’ சுரங்க நடைமுறை பயன்படுத்தப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division