அப்போதும் மனம் தளராத வால்ட் டிஸ்னி தன் சகோதரர் ேராயிடம், “இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம், நமக்கு கை கொடுக்க போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும்” என்று கூறினார். அப்போது உலகுக்கு அறிமுகமான அதிசய எலிதான் மிக்கி மவுஸ்.
முகம், இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது மிக்கி மவுஸ். பிறந்த ஓரிரு ஆண்டுகளுக்கு உள்ளேயே அது உலகப் புகழ் பெற்றது. ேவால்ட் டிஸ்னியின் பக்கம் ஹொலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னி தான், அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த ஸ்டீம்போட் வில்லி, தி ஸ்கெலீடன் டான்ஸ் போன்ற கேலி சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டியையும், அதன் சேட்டைகளையும் மக்கள் இமை கொட்டாது பார்த்து ரசித்தனர்.
1932 ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கி தந்த ஃபிளார்ஸ் அண்ட் ட்ரீஸ் என்ற திரைப்படத்துக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது. மிக்கி மவுஸ் என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி, கேலி சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் டொனால்ட் டக் என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் கண் மூடி சிரிப்பவர்கள் ஏராளம்.
1937 இல் ‘Snow White and the Seven Dwarfs’ எனும் முழு நீள கேலி சித்திரத்தை தயாரித்து வழங்கினார். அதற்கு அப்போதைய செலவு ஒன்றரை மில்லியன் அமெரிக்க டொலர். அவ்வளவு பொருட்செலவில் உருவான அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அதன் பின்னர் பினோச்சியோ, பேண்டசியா, டம்போ, பாம்பி போன்ற புகழ் பெற்ற படங்களை அவர் தந்தார்.
திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955 இல் 17 மில்லியன் டொலர் செலவில் மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு பூங்காவை அமெரிக்காவில் ஆர்லாண்டோ நகரில் உருவாக்கினார். முதல் 25 ஆண்டுகளில் பல உலக தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் அந்த அதிசய பூங்காவை கண்டு ரசித்தனர்.
தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவு உலகம் அது.
டிஸ்னி சிறுவனாக இருந்த போது, பள்ளிக்கு போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால் தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறை கூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம் தான் உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும்.
1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தனது 65ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல்நாள் கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டி கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ேராய்.