இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போர் தீவிரமாகத் தொடருகின்ற நிலையில், பலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவிப் பொருட்களை இந்தியா கடந்த வாரம் அனுப்பி வைத்தது. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “பலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை நாம் தொடந்து வழங்கி வருகிறோம். இரண்டாவது ஏ.ஐ.எஃப்.-எம்.சி.சி.சி_17 விமானம் 32 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தின் எல்-அரிஷ் விமானநிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
எல்-அரிஷ் விமான நிலையம் எகிப்தின் எல்லைப்பகுதியில் காஸாவுக்கு செல்லும் நுழைவுப் பாதையான ரஃபாவில் இருந்து 45 கி.மீ அப்பால் உள்ளது. காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்கான ஒரே பாதையாக காஸா மட்டுமே உள்ளது. இஸ்ரேஸ்_ ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பாதை முழுமையாக பயன்பாட்டில் இருக்கவில்லை.
இந்தியா அனுப்பி வைத்துள்ள இந்த இரண்டாவது நிவாரணத் தொகுதிக்கு முன்னதாகவும் அந்நாடு பலஸ்தீன மக்களுக்கான உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது. மருந்துகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருள்கள் உள்ளிட்டவை அந்த உதவிப் பொருட்களுள் அடங்கியிருந்தன. பலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான அடிப்படையிலான தனது முதல் தொகுதி உதவிப் பொருட்களை கடந்த ஒக்ேடாபர் 22 ஆம் திகதியன்று இந்தியா அனுப்பி வைத்திருந்தது.
இதேவேளை ஹமாஸ் மீதான போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், போரில் பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் நாங்கள் நிதானத்தையும் கடைப்பிடித்தோம். போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
இஸ்ரேல்_- ஹமாஸ் இடையேயான மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். போர் குறித்து பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். இந்தியா சார்பில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியுள்ளோம். உலகளாவிய நலனுக்காக குளோபல் சவுத் நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது” என்று நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் நாட்டின் மீது ஒக்டோபர் 7ஆம் திகதி பலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.
பலஸ்தீனத்துக்கு சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.
காஸா மீது கடந்த ஒன்றரை மாதகாலத்துக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காஸாவில் இலட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்துப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகளும் உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்தியாவும் தொன் கணக்கில் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது.
காஸா மீதான தாக்குதல்களில் காயமடைந்துள்ள மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் காஸாவில் இல்லை. காஸாவுக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்திருப்பதால் சுமார் 23 இலட்சம் காஸா மக்கள் பெரும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐ.நாவும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கின்றன. இந்தப் பொருட்கள் சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அப்பொருட்கள் காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பலஸ்தீனத்தில் பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில், உதவிப் பொருட்கள் கடுகளவுக்குத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளும் பலஸ்தீனத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவியை செய்து வருகின்றன.
இஸ்ரேல் – -ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பலஸ்தீன மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக மின்சாரம், தண்ணீர், எரிபொருள் இன்றி தவிக்கின்றனர்.
குண்டு வீச்சு காரணமாக ஏராளமானோர் பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்து தவிக்கின்றனர். படுகாயங்களுடன் மருத்துவ வசதியின்றி பலர் அவதிப்படுகின்றனர். அங்கு கடும் குளிர் வாட்டிவதைக்கிறது.
மின்சாரம், எரிபொருள் இல்லாததால் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் இயங்கவில்லை. உப்புத் தண்ணீர் மற்றும் அசுத்தமான நீரைப் பருகுவதால் பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளன.
“நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. நிவாரண முகாம்களில் வழங்கப்படும் பேரீச்சம்பழம், பிஸ்கட் ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்கின்றோம்” என்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
எஸ்.சாரங்கன்