Home » ஆரோக்கியமான ஊடகக் கலாசாரத்துக்கான அத்திவாரம்

ஆரோக்கியமான ஊடகக் கலாசாரத்துக்கான அத்திவாரம்

லேக்ஹவுஸ் நிறுவன ஊடக அகடமியின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழா

by Damith Pushpika
November 26, 2023 6:00 am 0 comment

பெருமைமிக்க பத்திரிகைப் பாரம்பரியத்தை ெகாண்ட லேக்ஹவுஸ் நிறுவகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஊடக அகடமியானது பாரம்பரிய ஊடகத்துறைக்கு அப்பாற் சென்று அறிவும் செயற்றிறனும் மிக்க ஊடகவியலாளர்களை எதிர்காலத்துக்கும் நாட்டுக்கும் வழங்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இலங்கையின் மக்கள் அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதில் லேக்ஹவுஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றியதை நினைவுகூர்ந்த அவர், பெருமைமிக்க பாரம்பரியத்திற்கு உரிமை கோருவதற்குரிய வேறு எந்த ஒரு நிறுவனமும் இலங்கையில் இல்லை என்றும், அதன் காரணமாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தரத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்காக கடந்த வருடத்தில் லேக்ஹவுஸ் ஊடக அகடமி ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழனன்று (23) பிற்பகல் இடம்பெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகத்துறையில் பணியாற்றுவதற்காக அறிவும் பொறுப்பும் வாய்ந்த ஆக்கபூர்வமான ஊடக தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இலங்கையின் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட லேக்ஹவுஸ் ஊடக அகடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக தொடர்பாடல் டிப்ளோமா பாடநெறி மற்றும் டிஜிட்டல் மீடியா தொடர்பாடல் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 மாணவர்களுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவர்களுள் ஊடகத் தொடர்பாடல் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 10 மாணவர்களும், டிஜிட்டல் ஊடகத் தொடர்பாடல் பாடநெறியைப் பூர்த்தி செய்த 16 மாணவர்களும் அடங்கியிருந்தனர்.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

“எமது நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமைகளுக்கு மத்தியில் முன்னேறிச் செல்லும் போது வழிகாட்டிய ஒரு நிறுவனமாக லேக்ஹவுஸ் நிறுவனத்தைக் குறிப்பிட முடியும். சுதந்திரத்தைப் பெறுவதற்கு முன்பிருந்தே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்துக்கும், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கலாசார உருவாக்கத்திற்கான மக்கள் விருப்பை மாற்றியமைத்த மற்றும் அதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கிய நிறுவனமே லேக்ஹவுஸ் ஆகும். அந்த வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு உரிமைகோரக் கூடிய வேறு எந்த நிறுவனமும் இலங்கையில் இல்லை. எனவே, அந்த நிறுவனத்தின் தரத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் கடந்த ஆண்டு லேக்ஹவுஸ் ஊடக அகடமியை ஆரம்பித்தது.

இது ஆரம்பிக்கப்பட்ட போது நாம் எதிர்பார்த்தது ​​பாரம்பரிய ஊடகவியலாளர்கள் நினைப்பதை விட அதிகமாக சிந்திக்கக்கூடிய, அவர்கள் பார்ப்பதை விட கூடிய விடயங்களைப் பார்க்கக்கூடிய மற்றும் அவர்கள் கேட்பதை விட அதிகமாக கேட்கக்கூடிய அறிவார்ந்த பத்திரிகையாளர்களின் குழுவை எதிர்காலத்துக்கும், நாட்டிற்கு வழங்குவதேயாகும். அறிவற்ற ஊடகங்களுக்கு மத்தியில் ​​அறிவுமிக்க ஊடகத்தைப் படைப்பதற்காகவும், பண்பாடற்ற ஊடகம் இருக்கும் போது, ​​அதை பண்பாடுள்ள ஊடகமாக மாற்றிக் கொள்வதற்காகவும், எதிர்க்கும் ஊடகம் இருக்கும் போது, ​​அதை பயனுள்ள ஊடகமாக மாற்றிக் கொள்வதற்காவும், ஊடகச் செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கற்பிப்பதற்கும் டிப்ளோமா பாடநெறியாக முன்னெடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக பல்வேறு துறைசார் நிபுணர்கள் அறிஞர்கள் ஒன்றிணைந்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வேலைத்திட்டத்திற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எமக்குள்ள முக்கிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறைகளாகும்.

நாட்டில் பணம் இல்லை என்றால், கப்பலில் பெட்ரோலியம் கொண்டு வந்தாலும், அதற்குப் பணத்தைச் செலுத்தி விடுவித்துக் கொள்ள முடியாமல் போகும். எரிவாயு கப்பல் வந்தாலும் அதை வாங்க பணம் இல்லாமல் போகும். எனவே, வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பாக 2027ம் ஆண்டளவில் 3911 மில்லியன் டொலர்கள் போதுமானதாக இருக்காது.

2027ம் ஆண்டில், சர்வதேச பரிவர்த்தனைகளில் இலங்கைக்கு 3911 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும். 2027ம் ஆண்டில், அந்தத் தொகையை ஈடுகட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நீடிப்புக் கடன் திட்டத்திலிருந்து 329 மில்லியன் டொலர்கள் பெறப்படும்.

அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது,

“ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த ஊடக அகடமி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளை நினைத்துப் பார்க்கிறேன். ஊடக அகடமி தொடங்குவது என்பது லேக்ஹவுஸின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று அன்று நான் சொன்னது இன்று போல் எனக்கு நினைவிருக்கிறது. இன்று நாம் அந்த நோக்கத்தை அடைந்திருக்கின்றோம். தற்போது லேக் ஹவுஸ் ஊடக அகடமி என்ற பெயர் லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தனியான நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டு டிப்ளோமா பாடநெறிகளுடன், பல ஒரு நாள் செயலமர்வுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்தப் பாடநெறிகளுக்காக NVQ நிலையினைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதேபோன்று லேக்ஹவுஸ் ஊடக அகடமியை ஊடகப் பல்கலைக்கழகமாக ஆக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

அதேபோன்று 2024ம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நிதிசார் பலத்தினை வழங்கும் வலுவான துறைகளில் ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி, புதிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து ஊடகத் துறையும் சவால்களுக்கு உள்ளாகியுள்ள தருணத்தில் பாரம்பரிய ஊடக கட்டமைப்பை தைரியமாக மாற்றியமைத்து அதன் மூலம் லேக்ஹவுஸை ஊடக நிறுவனங்களில் முன்னணிக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். லேக்ஹவுஸ் நிறுவனம் புதிய நோக்கிற்கான பயணத்தில் ஊடக அகடமியை ஆரம்பிப்பதற்கு எமக்கு வழிகாட்டுதலையும், தேவையான பலத்தையும் வழங்கியமைக்காக முன்னாள் தலைவரும், ஊடகத் துறை அமைச்சின் செயலாளருமான அனுஷ பல்பிட்டவை இத்தருணத்தில் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நினைவுகூருகின்றேன். கலாநிதி பந்துல குணவர்தன எனது பொருளியல் பாட ஆசிரியராகும். அன்று நீங்கள் கற்பித்த தத்துவார்த்த அறிவை இன்று நடைமுறையில் பயன்படுத்துகிறேன்” என்றார்.

மிகவும் பொறுப்புமிக்க மற்றும் நம்பகத் தன்மையைக் கொண்ட பத்திரிகை, சஞ்சிகைகளை வாசிக்கும் இலட்சக் கணக்கான வாசகர்களுக்குத் தேவையான தகவல், அறிவு, புரிந்துணர்வு மற்றும் ரசனையினைக் குறைவின்றி வழங்கிய லேக்ஹவுஸ் நிறுவனம் இந்நாட்டு ஊடகத் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய மிகமுக்கிய நிகழ்வாக லேக்ஹவுஸ் ஊடக அகடமியின் உருவாக்கம் அறியப்படுகிறது.

அதன்படி, 2022 செப்டெம்பர் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊடக அகடமியினால் தற்போது பல டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் பல ஒரு நாள் பயிற்சி செயலமர்வுகளையும் ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ் ஊடக அகடமியினால் தனது அகடமியில் கற்கும் இளைஞர், யுவதிகளுக்கு அச்சு ஊடகத்தோடு தொடர்புடைய அறிவினை மட்டுமின்றி, தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா, கலைநிகழ்ச்சிகள், விளம்பரம் மற்றும் விளம்பரக் கலை போன்ற ஊடகத் துறையின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய அறிவையும் புரிதலையும் வழங்குவதோடு, மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடக தொடர்பாடல் டிப்ளோமா பாடநெறி மற்றும் டிஜிட்டல் ஊடக தொடர்பாடல் டிப்ளோமா கற்கைநெறியை பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் அதற்கு சாட்சியாக உள்ளனர்.

இதற்கு மேலாக, தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பு, செய்தி வாசிப்பு, பொதுப் பேச்சு, திருமண புகைப்படம் எடுத்தல், கட்டடக்கலை மற்றும் அரசாங்க வரிகள் உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வுகள் லேக்ஹவுஸ் ஊடக அகடமியால் கடந்த காலத்தினுள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. லேக்ஹவுஸ் ஊடக அகடமியினால் நடத்தப்பட்ட பல்வேறு பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததுடன், தொடர்ந்தும் ஊடகத் துறையுடன் தொடர்புள்ள பாடநெறிகள், செயலமர்வுகள் மற்றும் வேறு துறைகளுடன் தொடர்புடைய பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள பாடநெறிகளில் மாணவர்களுக்கு லேக்ஹவுஸ் பத்திரிகைகளில் வளரும் ஊடகவியலாளர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், லேக்ஹவுஸ் ஊடக அகடமியினால் நடாத்தப்படும் கற்கைநெறிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லேக்ஹவுஸ் ஊடக அகடமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகத்துறை மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகளும் முறையான பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களினதும், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகத்துறைகளில் அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் பலரினதும் ஒத்துழைப்புக்களைப் பெற்றும் நடத்தப்படுவதோடு, விடயத்துடன் தொடர்புடைய பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகளும் அந்த விடயங்களுடன் தொடர்புடைய அறிவினைக் கொண்டுள்ள மற்றும் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்று நடத்துவதற்கு லேக்ஹவுஸ் ஊடக அகடமி எதிர்பார்க்கின்றது.

டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன், லேக்ஹவுஸ் ஊடக அகடமியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசத்தினால் அமைச்சருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்படது.

இலங்கையின் அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, இந்நிகழ்வில் ஊடகத் துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம். எஸ். பீ. ஜயசுந்தர, அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தனித் சிந்தக கருணாரத்ன, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க, கலாநிதி சந்தன திலகரத்ன, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான சிசிர பரணதந்திரி, மஞ்சுள மாகும்புர, கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன, சட்டத்தரணி ஜனக ரணதுங்க, பொதுமுகாமையாளர் சுமித் கொத்தலாவள, கம்பனிச் செயலாளர் சுதர்ஷனி ஹேவாவசம், மேலதிக பொதுமுகாமையாளர் வீ. எஸ். பொயிஸ், பிரதி பொதுமுகாமையாளர்களான சந்தன பண்டார, சிந்தக யாப்பா, பிரமித்தா ஜயமக, தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மனோஜ் அபயதீர, சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தர்மன் விக்ரமரத்ன, டெய்லி நியூஸ் மற்றும் சண்டே ஒப்சர்வர் பிரதம ஆசிரியர் பிரமோத் டி. சில்வா, தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division