அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் 2019 இல் தீர்ப்பு வழங்கியது. அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமாக இராமர் கோவில் கட்டுவதற்கான பணி தொடங்கியது.
இராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை உருவாக்கினார். அதன்பிறகு 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி அயோத்தி இராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூபா 1000 கோடி செலவில் பிரமாண்டமாக இராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தி கோயில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இராமர் கோயிலின் தரைத்தளம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற உள்ளது. அவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
தற்போது தற்காலிகமாக இராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அதனை கோவில் கருவறைக்கு ஊர்வலமாக எடுத்து வருவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு இந்தியாவில் இருந்து ஆன்மிகத் தலைவர்கள், மடாதிபதிகள், பா.ஜ.க தலைவர்கள், பிற அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது.
இதுபற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், “உலகம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி 1 முதல் 15 ஆம் திகதி வரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்குவதால் தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அயோத்தி இராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இராமர் சிலையை கருவறைக்கு எடுத்துச் செல்லவுள்ளார்.
ரூபா 1000 கோடி செலவில் பிரமாண்டமாக இராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக இராமர் கோவில் அமைய உள்ளது. கோயிலின் பீடம் கிரனைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் 5 மண்டபங்கள் அமைகின்றன. கோயிலில் மிக உயரமான சிகரம் என்பது கர்ப்பக்கிரஹத்திற்கு மேல் இருக்கும்.
அத்தோடு கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோயிலை பிரதிஷ்டை செய்ய உள்ளார். அதன் பிறகு கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனவரி 22 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் முக்கிய பூஜைகள் நடைபெற உள்ளன. நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்து அர்ச்சகர்கள் வருகை தருவர். இந்து மத சம்பிரதாயங்கள் முறையில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும் கோயில் கர்ப்பகிரஹகத்துக்குள் வைக்க 3 வகையான இராமர் சிலை செய்யும் பணியை கோயில் அறக்கட்டளை தீவிரமாக செய்து வருகிறது. அவற்றில் எந்த சிலையை கர்ப்பக்கிரஹத்தில் வைப்பது என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்பவில்லை. ராஜஸ்தான் மார்பிள் அல்லது கர்நாடகா கிரனைட் கற்களால் செய்யப்படும் இராமர் சிலையில் ஒன்று கர்ப்பக் கிரஹத்தில் வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு சிலையானது 2 ஆவது தளத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு அங்கு வைக்கப்பட உள்ளது. 2 ஆவது தளத்தில்தான் இராமர் தர்பார் அமைக்கப்படும். கோயில் திறப்பு விழாவையொட்டி சரயு உள்ளிட்ட பிற புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
இந்த விழாவுக்கு இந்தியாவில் இருந்து ஆன்மிகத் தலைவர்கள், மடாதிபதிகள், பா.ஜ.க தலைவர்கள், பிற அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சாரங்கன்