மேற்கு கரையோரங்களில் சித்திரை மாதம் பிறந்து விட்டகையோடு, கடல் சீற்றம் கொதிநிலையில் இருக்கும். இதன் பின்புலத்துடன் உடப்பு தொழிலுக்கு முடிவு கட்டப்படும். இதனோடு வீறாப்புடன் வீசும் கச்சான் காற்றினால் கடற்றோழில் செய்ய முடியாத நிலை காணப்படும். இதனால் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரம் குறைவாக இருக்கும் அதேவேளை, வருமானமும் மந்தகெதியில் தாண்டவமாடும்.
கிழக்கின் அடிவானம் வெளுக்க… மரங்களில் பட்டுப் படர்ந்த பனித்துளிகள் கூட மாயமாக மறைந்து கானல் நீராகிவிடும்.
சூரிய வெளிச்சத்தைக் கண்ட கடற்றொழிலாளர்கள், தத்தம் தொழிலுக்கான ஏற்பாடுகளோடு மும்முரமாகிவிடுவார்கள்.
ஊரின் நடுநாயகமாக அமைந்திருந்த திரௌபதியம்மன் ஆலயத்தின் “சுப்ரபாத” த்தைக் கேட்ட ஐயாத்தக்குட்டி பரபரப்புடன் அரக்கப்பரக்க நித்திரை விட்டெழுந்தாள்.
இச்செயலானது கணவன் மேல் ஐயாத்தைக்குட்டி வைத்துள்ள பாச உணர்வை வெளிப்படுத்துவதாக அக்கம்பக்கத்தவர்கள் வாய்விட்டுக் கூறிக்கொள்வார்கள்.
குளிர்காற்றின் ஈரத்தன்மையை தாங்கமுடியாத குஞ்சான் போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் கோலத்தைப் பார்த்த ஐயாத்தாய்க்குட்டி… இந்தாங்க…! இந்..தாங்..க.. கொஞ்சலாக கெஞ்சிய பாணியில் நகைமுகத்துடன் தட்டி எழுப்பி தூக்கத்தை கலைத்து நின்றாள்.
சத்தத்தைக்கேட்டு சோம்பல் முறித்துக் கொண்ட குஞ்சான் ஏண்டி..! இந்தாங்க இந்..தாங்..க என கத்தி கொரவச்சி ஒன்ற சத்ததினாலதானடி நான் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நின்றேனடி..! ஏண்டி என்ன வதையா வதைக்கிறா.
இந்த கொள்ள கழிச்சிப் போவாளுக்கு எங்கங்க தெரியப்போவுது நம்ம.. மாச்சல்.. மனதுக்குள்ளே முணுமுணுத்து கொண்டவனாக நின்றான் குஞ்சான்.
தன் கை, கால் முகத்தை கழுவின குஞ்சான் ஆத்தாளே..! எம்ம காப்பவளே..! அன்னை திரௌபதியே என விழித்துக்கொண்டு நின்ற இடத்தில் அன்னையை சாஷ்டாங்கமாக வணங்கி..! தாயே..! இந்த நாளைப் போல எந்த நன்னாளிலும் எவ்வித விக்கினமுமின்றி நல்லருள் தாருமம்மா தாயே..!! என்று இறைஞ்சி துதித்து நின்றான்.
வழக்கம் போல் தன்னை சுதாரித்தவளாக ஐயாத்தக் குட்டி…..! தன்னோடு நித்திரையில் இருந்த மகள் வேலாயைக்காணாது அரக்கப் பரக்க செய்வதறியாது நின்றாள். ஆனால் வேலாய் கால்மாட்டு மூலையில் சுருண்டு தலைவிரி கோலத்துடன் காட்சியளித்தாள்.
வெகுளித்தனம் கொஞ்சமேனும் இல்லாதவளாக காணப்பட்ட வேலாய். யாருடனும் ஒளிவு மறைவின்றி பேசுபவள். சோம்பல் முறித்த வேலாய்க்கு… தேத்தண்ணிக் கோப்பையுடன் வந்த ஐயாத்தக்குட்டி… ஏ..? புள்ள…!! என்னம்மா செய்ரா..? எழும்பிட்டியா கால நேரத்துடன் எழுந்திடு…! ஒனக்கு என்னடி தெரியப்போது… நம்ம துக்க தொயரங்கள் என்று நச்சரித்துக் கொண்டவளாக…
இந்தாம்மா நம்மள படைச்ச கடவுள்..! தொயரத்த தந்திட்டான் பாரு!!. நா .. மீன் வாடி பக்கம் போய் வந்தாத்தானே யம்மா, நம்மட வயித்த நிரப்ப முடியும்? அதனோடுதானே எம்மா காலத்தையும் ஓட்ட முடியும்? அதனால யாருகிட்டயும் கையேந்திநிற்க தேவையில்லயடி புள்ள என்று சொன்னாள்.
நா செய்யும் மீன் வாடி பக்கம் போய் கெழமக்காசை நேர காலத்துடன் கேட்டுப் பாக்க வேண்டும். ஆனால் நாம் போய் கேட்கா விட்டால் அந்தப் பணத்த சூக்குமாத்து பண்ணிப் போடுவாங்க. கூலிப் பணத்த முன் கூட்டியே கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என மனதுக்குள் சஞ்சலப்பட்டவளாக நின்றாள் ஐயாத்தக்குட்டி.
ஆனால்…!
இந்த கெழம எக்கச்சக்கமாக மீன் பட்டு அழிந்தது. இது நாம் வணங்கும் ஆத்தாளின் புண்ணியத்தால் தான் மீன் பட்டழிந்தது. வாடியில் வந்து கொட்டிய மீன்களை வேறு வேறாக பிரித்து தெரிந்து கொடுக்க பட்ட பாடோ பெரும்பாடாச்சி.
அந்த பரமனுக்குத்தான் தெரியும் நா கால் கடுக்க..! முதுகு வலிக்க நாடி நரம்பெல்லாம் வலியெடுக்க நின்றதை. உடம்பெல்லாம் நோவு எடுக்க வந்த மீன்களை பிரித்து தெரிந்து கொடுக்க வேண்டும். நேர காலத்துக்கு அப்படி கொடுக்கட்டா ஏச்சும் பேச்சும் தான்.
அவளுடைய வீட்டின் பின்புறமாக உடைந்த நிலையில் வேலி அலங்கோலமாக, கண்றாவியாக காட்சியளித்தது. அந்த வேலிக்கேட்டை விலக்கிக் கொண்டு நேரே மண்டாடி மஞ்சான் வீட்டை அடைந்தாள் ஐயாத்தைக்குட்டி.
பரபரப்புடன் வந்த ஐயாத்தைக் குட்டியைப் பார்த்த மண்டாடி மஞ்சான்
“வாம்மா…. வா! என்னம்மா!! என்ன!!? ஒன்ற விஷயத்த..! சொல்லு பாப்போம்?
இல்லங்க! மண்டாடியார்! இந்த மொற நமக்கு கிடைத்த மீன்கள் எல்லாம் பெரிய பெரிய மீன்கள் தானே! அதனால் தான் நான் வந்து வாடியில் மீன் தெரிந்த பங்குக் கூலிய கேட்டு வாங்க ஓடோடி வந்துருக்கிறேன். எனக்கு தரவேண்டிய என்ர இந்தப் பங்குக் கூலி நேரத்தோட கெடச்சிட்டா நான் பசி பட்டினியின்றி வயிறார சமைத்து சாப்பிடலாந் தானே.. மண்டாடியார் என்றாள்.
இந்தாம்மா! கொஞ்சம் பொறு ஒனக்கு தரவேண்டிய பங்குக்கூலி இருக்கே அத தரத்தான் வேண்டும். ஆனால் நீ கேட்டவுடன் தர முடியாது என்பதை கச்சிதமாக அவள் காதில் கேட்கும்படி ஏத்தி வச்சான் மண்டாடி மஞ்சான்.
இல்லங்க.. மண்டாடியார்..!
இன்று வெள்ளிக்கிழமை நல்ல நாளாச்சே விடுமுறை தினந்தானே வீட்டில நாலு பேருடன் ஒன்றாகக் கூடி குசலம் விசாரித்து.. புள்ள குட்டிகளுடன் சப்பாணி போட்டு ஒன்றாக சாப்பிட்டா எப்படி இருக்கும் மன்றாடியார். அத சொல்லவா வேண்டும்.
அதுவல்லடி ஐயாத்த! ஒன்ர பணத்த நாம் அபகரிக்க இல்லயடி. இன்று மாலை ஆனதும் முறைப்படி குத்து விளக்கேற்றி நம்மட சம்பிரதாய முறைப்படி சம்மாட்டியார் ராஜனின் முன்னிலையில் தான் பணத்தை பிரித்துக் கொடுப்போம் என கறாராக கடும் தொனியில் கூறினார் மண்டாடி, பின்னர்,
இந்தப் பணத்தை பவ்வியமாக பெற்ற ஐயாத்தைக்குட்டி தனது இல்லம் நோக்கி விரைந்தாள். வேர்த்துவிறுவிறுத்து தனது வீட்டை அடைந்ததும் முன் வளவில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த கருவாடு, மீன் செதில், உப்பு மூட்டை, கத்தி, மண்வெட்டி போன்ற சட்டி முட்டி என்பனவற்றையும் உடைந்த நொறுங்கிக் கிடந்த போத்தல்களையும் வீட்டின் ஒதுக்கு புறமாகத் தென்பட்ட ரங்குப் பெட்டிகளையும் எடுத்து ஒழுங்குபடுத்தி நின்றாள் ஐயாத்தை குட்டி.
தன் நடுவீட்டில் கம்பீரமாக காட்சியளித்த கணவன் நல்லராக்குவின் போட்டோவை கண்டு ஐயாத்தக்குட்டி ஒரு கணம் நிலை தடுமாறினாள்.
அத்தான்! நாம் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தோம். கருத்தொருமித்து காதல் பூண்டோம். அந்நியோன்ய உறவோடு பழகினோம். இது பிடிக்காத எம்மை படைத்த கடவுள் பிரித்து விட்டானே..! என ஓவென்று அழுது புலம்பினாள்.
அத்தான் நீங்கள் இல்லா எம்மில்லம்.! துடுப்பில்லா படகாகி விட்டதே. நான் இன்று பிள்ளைகளுடன் தனித்து தவித்து தத்தளித்து தனி மரமாகி விட்டேனே.. என் ராசா! எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டீங்களே. என கண்ணீர் விட்டு தன் துயரத்தை சோகத்தை வெளிப்படுத்தி நின்றாள் ஐயாத்தை.
ஆம்..!
சித்திரை மாதம் 25ஆம் திகதி அவளது கணவன் அவளைப் விட்டு பிரிந்து சென்ற துயரநாள்.
அன்று கடல் கொந்தளித்து நிற்க, காற்று சுழன்று சூறாவளியாக வீசியது. அலைகள் ஒன்றோடு ஒன்று அடித்து மாயும் காலம். கடலுக்கு போய் தொழில் செய்ய முடியாத பேரிடர் காலமும் தான் அந்த ஏப்ரல் மாதம்.
அந்தக் காலங்களில் கடலுக்குப் போகாதே என்று அரசு எச்சரிக்கை விடுத்த போதும் ராஜன் சம்மாட்டியாரின் திமிரும், ஆணவப் பேச்சும், பேராசையும் அவளது கணவனை இழக்கச் செய்தது.
ராஜன் சம்மாட்டியார்! தொழிலாளர்களைப் பார்த்து கர்ச்சித்தார். அடே..! வள்ளத்தை கடலில் தள்ளுங்கடா…! வலை இழுங்கடா.. அவரது கர்ண கொடூரமான தொனியை கேட்ட தொழிலாளர்களெல்லாம் நடுங்கிப் பயந்து அரக்கப் பரக்க வள்ளத்தை கடலில் தள்ளினார்கள்.
கடும் காற்றுடன் உயர எழுந்த அலையால் வள்ளம் தாக்கப்பட்டதும். வள்ளத்திலிருந்த நல்லராக்கு வலைக்குள் சிக்குண்டு பரிதாபகரமாக பலியானான்.
இந்த அவல சாவானது ஒவ்வொரு தொழிலாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது.
ராஜன் சம்மாட்டியாரின் பண ஆசையும் பேராசையுமே அவலச் சாவுக்கு காரணம் என ஊரே சொல்லி மாரடித்து நின்றது.
வந்தாரை வாழவைக்கும் சிங்கார சீர் பெறும் கிராமங்களில் ஒன்றே உடப்பில் உள்ள மங்களபுரம். அதன் அடையாளம் அன்னை பத்தினியம்மன் ஆலயம்.
இக்கிராமத்தின் மத்தியில் ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் மேற்கே குறுக்குத் தெருவில் உள்ளது சமாதான நீதவான் பெரிய முத்து வைரனின் இல்லம். அதை ஒட்டியே ஐயாத்தைக் குட்டியின் வீடும் அமைந்துள்ளது.
ஐயாத்தக்குட்டி தந்தை கதிர்காமுத்தையா தனது சுய தொழிலான தெப்பத் தொழிலை மனம் கோணாத முறையில் யாருக்கும் அடிபணியாமல் கௌரவமான முறையில் நடத்தி வந்தார். அவரின் வாழ்க்கைச் சக்கரம் எவ்வித விக்கினமும் இன்றிச் சுழன்று ஓடியது.
அவள் பெற்று, ஆசையோடு வளர்த்த மகள் வேலாய் பருவமயக்கத்தில் கண்டதே காதல் கொண்டதே கோலம் என காதல் வலையில் சிக்குண்டு தவித்தாள். கண்ணுக்கு கண்ணாக வளந்தவள் இன்று கர்ப்பிணிக் கோலத்தில் குலப் பெருமையை இழந்து நிற்பதைக் கண்டு வெகுண்டெழுந்தார்.
என் கண் முன்னே நிக்காதே துரோகி..! என சீறிப்பாய்ந்தார். நீ எக்கேடு கெட்டுப்போ.. என பேத்தியைப் பார்த்து கோபாவேசத்துடன் வெகுண்டெழுந்தார், கர்ச்சீத்தார்.
(இதைக் கேட்டு நின்ற வேலாய்)
தாத்தா..!
நான் செய்தது தப்பிலும், பெரும் தப்பு..! என்னை மன்னித்து விடுங்கள். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து பணிந்தாள். கண்ணீர் வெள்ளமென பாய்ந்து ஓடியது.
பேத்தியின் பரிதாப கோலத்தைக் கண்டதும் கதிர்காமுத்தையா மனம் மாறி நெகிழ்ந்தார்.
வேலாயின் நிலை அறிந்த கதிர்காமுத்தையா தனது சொந்த பந்தங்களுடன் சேர்ந்து பக்கத்து ஊர் பாரிப்பாடு முருகன் சந்நிதானத்தில் மேளம் முழங்க எளிமையாகத் திருமணத்தை முடித்து வைத்தார்.
கதிர்காமுத்தையா வழமை போல், தான் செய்யும் தெப்பத் தொழிலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் ஈடுபடலானார்.
கடற்தொழிலில் எவ்வித பயிற்சியோ அனுபவமோ, தெளிவோ இல்லாத வண்டியன் தொழில் செய்ய வேண்டுமென்று உந்துதலைக் கொடுத்தான்.
வண்டியனின் விடாமுயற்சியும், தொழில் ஆர்வத்தையும் கண்டு பிரமித்துப் போன கதிர்காமுத்தையா அன்று பிழையாக எண்ணியதை நினைத்து மனம் நொந்து போனான். என் பேத்தி வேலாய் கொடுத்து வைத்தவள். அவளின் தெரிவு தனக்கு மனப்பூரிப்பை தருவதாக எண்ணி சந்தோசமுற்று காணப்பட்டான் கதிர்காமுத்தையா.!
அந்த சந்தோச பூரிப்பில் திளைத்த கதிர்காமுத்தையா தனக்கு பூட்டப் பிள்ளை கிடைத்தமையையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டான். சந்தோஷம் அவனை திக்குமுக்காட வைத்தது.
அமாவாசை நாட்கள் என்றால் கடல் கொந்தளிக்கும். காற்று வீரியத்துடன் வீசும். கடல் சீற்றம் கொள்ளும். அலைகள் வீறு கொண்டு எழும். இந்நாட்களில் கடல் தொழில் செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள் மீனவ சமூகத்தினர்.
ஆனால்..! இந்தக்காலம் ஆபத்தைத் தரும் என்பதை அறியாத கதிர்காமுத்தையா தெப்பத்தை கடலில் செலுத்தினான். பலமாக வீசி அடித்த அலையில் தாக்கப்பட்ட இருவரும் கடலில் மூழ்கி இறந்தார்கள்.
இத்துயரசம்பவமானது மங்களபுரக் கிராமத்தை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது. அநியாயச் சாவினால் இக்கிராமமே துக்கத்தில் துவண்டது. மக்கள் கண்ணீர்விட்டு அழுதுபுலம்பினார்கள். கிராமமே சோகத்தில் மூழ்கியது. எங்கும் கறுப்பு வெள்ளை கொடிகள்பறந்து துயரத்தை பறைசாற்றி நின்றன.
…
மூளியாக காட்சியளித்த வேலாயைப் பார்த்து கண்ணீரும் கம்பலையாக நின்ற ஐயாத்தக்குட்டி,
‘என் செல்வ மகளே, நான்தான் கைம் பொஞ்சாதி என அவப் பெயருடன் நிற்கின்றேன். நீயுமா அந்த சொல்லுக்கு ஆளாகி விட்டாய்? எனக் கதறினாள்.
தன் மகள் வேலாயிக்கு பிறந்த பித்தனை நல்லா படிக்க வைத்து சிறந்தவனாக்குவோம் என எடுத்துரைத்த போதுதான்.
ஏ..! வேலாய். இன்று தான் சித்திரை 25 ஆம் நாள் கரிநாள். நம் வாழ்க்கையில் துயரத்தைத் தந்த நாள். காத்துக் கடலென்று பாராமல், தொழிலுக்குச் சென்றவர்கள், உயிர்களைப் பறிகொடுத்த பரிதாப நாளம்மா என்றாள்.
இந்த இரு ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுமானால் ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்தால் நம் எதிர்காலம் சீரும் சிறப்புமாக பிரகாசிக்கும் என எடுத்துரைத்தாள் மகள் வேலாய்.
ஆ..! ஓமடிபுள்ள அதுவும் சரிதான் பாரு..! ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆத்தாளைத் துதித்தால் நாம் நினைத்த காரியம் கை கூடும். நம் நம்பிக்கை வீண் போகாது புள்ள.
வாழ்வில் சுபீட்சம் காணும் முகமாக ஐயாத்தக் குட்டியுடன் வேலாயும் தமது குலதெய்வமான ஆத்தாள் கோவிலை நாடி விரைகின்றனர்.
கலாபூசணம் உடப்பூர் வீரசொக்கன்