“வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதையும் கூறுவதற்கு இல்லாத நிலையில் கிரிக்கெட் விவகாரம், முன்னாள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ள பொருளாதார குற்றச்சாட்டுகள், கோப் குழு சர்ச்சை என தமது திசையை மாற்றி எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற விவாதங்களிலும் வெளியிலும் கருத்துக்களை முன்வைத்து வருவதை காண முடிகிறது.”
“வரவு செலவுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வரவேற்று கருத்துக்களை முன் வைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்தது என்பதை வலியுறுத்தியும் கருத்துக்களை
முன்வைத்து வருகின்றன.”
“பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய எம்பிக்கள் சிலர் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகளோடு மேலும் சில யோசனைகளை இணைத்துக் கொண்டால் நல்லது என்ற வகையில் யோசனைகளை முன்வைத்து வருவதையும் குறிப்பிட முடியும்.”
நாடு பொருளாதாரத்தில் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தைக் கடந்து பொருளாதாரத்தில் சற்று தலை தூக்கும் நிலையில் புரட்சிகரமான ஒரு வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் முழுமையான எதிர்பார்ப்பு இதன் ஊடாக நிறைவேற்றப் படாவிட்டாலும் நாடு தற்போதுள்ள நிலைமையில் ஓரளவேனும் மக்கள் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் கூட மறைமுகமாகத் தெரிவிப்பதை காண முடிகிறது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்கள், பாராளுமன்றத்துக்கு வெளியில் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள், விமர்சனங்களை நோக்கும் போது அது வரவு செலவுத் திட்டத்துக்கு எதிரான கடும் போக்கைக் காட்டவில்லை என்பதைக் குறிப்பிட முடியும்.
இக்கட்டான ஒரு கால சூழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. எனினும் அதை நேரடியாக சொல்ல விரும்பாமல் எதிர்க்கட்சி என்றாலே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற விவாதங்களில் வரவு செலவு திட்டத்தில் உள்ளடங்கும் விடயங்களை தவிர்த்து மக்களை திசை திருப்பும் வகையில் வேறு கோணங்களில் அவர்களது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் சூடு பிடித்துள்ள கிரிக்கெட் விவகாரம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர்கள், நிதித்துறை சார்ந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள நாட்டின் தீர்ப்பினை தூக்கிப் பிடித்துக் கொண்டு அதை பேசு பொருளாக எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வருவதை காண முடிகிறது.
அதேவேளை, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த வரவு செலவு திட்டத்தை ஏற்றுக் கொண்டு அதில் இவற்றையும் இணைத்துக் கொண்டால் சிறந்தது என பல்வேறு யோசனைகளை முன் வைத்து வருவதையும் பாராளுமன்ற விவாதங்களில் காண முடிகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் உன்னிப்பான அவதானத்தை செலுத்தி வரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்றோர் இவ்வாறான யோசனைகளை முன் வைத்து வருவதையும் குறிப்பிட முடிகிறது.
பாராளுமன்ற விவாதங்களை பார்க்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய சில கட்சிகளும் இந்த வரவு செலவுத் திட்டம் சிறந்தது என்றும் எனினும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு விடை தேடுவதாக அமையும் என்பதை சபையில் சுட்டிக் காட்டி வருவதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து
வருகின்றனர் என்பதையும் குறிப்பிடலாம்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்
முன்வைக்கப்பட்ட யோசனைகளில் கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் அரசாங்கத்தின் மாடி வீட்டுக் குடியிருப்புகளில் மாதாந்த வாடகை அறவிடப்படுவதை நிறுத்தி அவர்களுக்கு அந்த வீடுகளை உரிமையாக்கும் யோசனை கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டு
பாராட்டப்படுவதக் காணமுடிகிறது. அந்த வகையில் மரிக்கார் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் ஆரோக்கியமான வரவேற்கத் தக்க கருத்துக்களை பாராளுமன்ற விவாதங்களில் முன்னெடுத்து வருகின்றதையும் தெரிவிக்கலாம்.
அமைச்சர் பந்துல குணவர்தன:
இந்த வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமானது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் ரீதியான தீர்வு அன்றி பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் என்பது உணரப்பட்டு இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்பு கிடைத்ததும் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் தொடர முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்கு உறுதுணையாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்தனவின் காலத்தில் அன்றைய நிதியமைச்சர் ரொனி டி மெல் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் வரவுக்கும் செலவுக்கும் இடையில் பெரும் இடைவெளியைக் கொண்டதாக காணப்பட்டபோதும், அதன் போது சர்வதேச நாடுகளின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்து நிலைமை சீர் செய்யப்பட்டன. ஜே.ஆர் ஜெயவர்தன மேற்கொண்ட புரட்சிகரமான செயற்பாடுகள் போன்றே அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை உள்ளடக்கியதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என்றும் அதேவேளை, அரசாங்க ஊழியர்கள் உட்பட அனைத்துத் துறை சார்ந்தோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.
எம். ஏ சுமந்திரன் எம்பி
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் வரவேற்கத்தக்கவை.
வரவு செலவுத்திட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு அதிகரிப்பு, ஓய்வூதியர்கள், விசேட தேவையுடையோர், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
எனினும் அவ்வாறான முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்துவதற்கு யதார்த்தமானதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேவேளை காணாமல் போனோருக்கான நட்ட ஈடு வழங்குவதை துரிதப்படுத்தும் நடவடிக்கை, அவர்களுக்கான நட்ட ஈட்டுக்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்வது, விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவது, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வீடுகள், யாழ். மாவட்டத்துக்கான குடிநீர்த் திட்டம், மீனவர்களுக்கான முன் மொழிவு ஆகியவற்றையும் நாம் வரவேற்கின்றோம்.
பாதுகாப்புக்கு தொடர்ந்தும் பெரும் தொகை செலவிடப்படுகின்றது. பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளில் இலங்கை இராணுவம் உலகில் 14ஆவது இடத்தில் உள்ளது. இந்தளவு பாரிய இராணுவமும் செலவுகளும் ஒரு காலத்தில் தேவைப்பட்டாலும் யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் இராணுவக்குறைப்பு செய்யப்படவில்லை. பாதுகாப்புக்கு பெரும் தொகைப் பணத்தை வீணாக செலவிட நேர்ந்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடையவே வற்வரி வீதத்தை அதிகரிப்பதாக காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் வருமான முன் மொழிவுகள் யதார்த்தமற்றவையாகவே காணப்படுகின்றன.
உண்மையாகவே வரி செலுத்த வேண்டியவர்களிடமிருந்து இறைவரித் திணைக்களம் ஒழுங்காக வரிகளை அறவிட்டிருந்தால் அரசாங்கத்தின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. துறைமுகம், விமான நிலையம் போன்ற பெருமளவு வரி வருமானங்களை தரக்கூடிய நிறுவனங்களில் ஊழல் வாதிகள் இருப்பதும் அவர்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பதும் நாட்டின் வங்குரோத்துக்கு காரணமாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி
வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டத்துறை மக்கள் இந்த நாட்டின் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து செயல்பட வேண்டும்.
அத்துடன் மலையகத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தனி செயலணி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள வரிச் சுமைகளை வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்கள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் நாளாந்த வருமானம் ஆயிரம் ரூபாவாகும். அந்த வகையில் ஒரு தொழிலாளி ஒரு மாதத்தில் 20ஆயிரம் ரூபாவையே பெற்றுக் கொள்ள முடிகின்றது. பெருந்தோட்டத்துறையில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் 83 ஆயிரத்து 333ரூபா தேவை என்பதை கணிப்பீட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களாக தோட்டத்
தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனினும் வாழ்க்கைச்செலவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களில் 70 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். அதன் படி ஒரு தொழிலாளிக்கு நாளாந்தம் வழங்கப்படும் சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவாக 500 ரூபா அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் எம்பி
ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
அத்துடன் ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையின்போது புத்த பெருமான் தெரிவித்த சகவாழ்வு போதனை ஒன்றை தெரிவித்திருந்தார். சிக்கனமாக வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதையே இதன் மூலம் அவர் தெரிவிக்க வருகிறார்.
ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இந்த முறை நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்விக்கு கடந்த முறையைவிட குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் கொள்கைக்கமைய நாட்டின் மொத்த வருமானத்தில் 5 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இம்முறை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எரான் விக்ரமரட்ன எம்பி
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை விட சிறந்த யோசனைகள் இருக்குமானால் அதனை முன் வைக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று வரவு செலவு திட்டத்திற்கு புதிய யோசனைகளை முன் வைத்துள்ளோம்.
வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சி முன்வைக்கும் யோசனைகளை முடிந்தால் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேேவளை, நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் பொருளாதாரத்தை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும்.
நாட்டில் புத்திஜீவிகள் வெளியேற்றம் பாரியளவில் இடம் பெறுகின்றது. தொழில் சார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 69 யோசனைகள் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. இம்முறை அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த 20 வருடங்களாக திட்டமிடப்பட்ட அரச வருமானம் கிடைக்கவில்லை. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளது, பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி ஒரே இரவில் வரி அதிகரிப்பு செய்துள்ளமை தொடர்பிலேயே நாம் கேள்வி எழுப்புகின்றோம்.பொருட்களின் விலைகள் அதிகரித்து வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பதால் பிரச்சினைகள் பூதாகாரமாகியுள்ளன. அத்துடன் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சொத்துவரியை ஏன் கொண்டு வரவில்லை என நாம் கேட்கின்றோம். 2021ஆம் ஆண்டில் அதன் மூலம் 8 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. நூற்றுக்கு 0.05 என்ற வகையிலேயே அந்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. உலகின் ஏனைய நாடுகளில் அந்த வரி நூற்றுக்கு 10 முதல் 20 வீதம் வரை நடைமுறையில் உள்ளது. வரி செலுத்தக்கூடியவர்களிடமிருந்து வரி அறவிடாததேன்? தடுத்து வைப்புக்கான வரி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வரி செலுத்தாதவர்களே அதனை எதிர்ப்பர். இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அரசாங்கமானது வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வராமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம். அதன் செயற்பாடுகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும். சுயாதீனமான வழக்கு தொடுக்கும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நாம் யோசனை முன் வைக்கின்றோம். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சிறந்த யோசனை இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாரியளவில் நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். குறிப்பாக கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். வன்னி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கு 2பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. எமது பகுதியை பொறுத்தவரையில் காணி பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகும். என்றாலும் ஜனாதிபதி அதனை உணர்ந்து அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் வரமாகும். மேலும் கிராமிய பாதைகளை புதுப்பிப்பதற்காக வரவு செலவு திட்டம் மூலம் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ள எமது பிரதேச கிராமிய பாதைகளை புதுப்பிக்க அந்த நிதியில் இருந்து ஒரு பில்லியனாவது வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.