உலகக் கிண்ணத்தை வென்று பழகிப்போன அவுஸ்திரேலியாவும் அண்மைய வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக மாறியிருக்கும் இந்தியாவும் உலக சம்பியனாவதற்காக இன்று (19) பலப்பரீட்சை நடத்தப்போகின்றன.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் நடைபெறும் உலகக் கிண்ணத்தின் உச்ச தருணத்தை சந்திப்பதற்கு அஹமாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் அனைத்தும் தயாராக உள்ளன. இந்திய அணியின் பயணம் தெளிவானது. அதனை இதுவரை நடந்த போட்டிகளில் எந்த அணியும் சீண்டிப்பார்க்கக்கூட இல்லை.
குழுநிலை போட்டிகள் அனைத்திலும் வெற்றி, அரையிறுதிப் போட்டியில் நியூசிடம் வெற்றி என்ற உலகக் கிண்ணத்தை வெல்ல இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தான் மிச்சம் இருக்கிறது.
பெரிதாக நம்பிக்கை இல்லாத அணியாக களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் போட்டியில் இந்தியாவிடம் 199 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி பின்னர் தென்னாபிரிக்காவிடம் 177 ஓட்டங்களுக்கு சுருண்டு மோசமான தோல்வி. பின்னர் இலங்கையை வீழ்த்திய ஆஸி. இறுதிப் போட்டிவரை வெற்றி நடை போட்டது.
எனவே இன்றைய இறுதிப் போட்டி ஒன்றுக்கொன்று சளைக்காமல் இருக்கப்போகிறது. இந்தியாவின் துடுப்பாட்டம், பந்துவீச்சு பற்றி கூறவே தேவையில்லை. அனைத்து வீரர்களும் சோபித்து வருகிறார்கள். அணியில் எந்த ஓட்டையும் இல்லை. அதனுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியாவின் அணி வரிசை சற்று குறைபாடு கொண்டது என்றாலும் அந்த அணியின் சமயோசித ஆட்டம் எந்த அணியையும் எந்த நேரத்திலும் மண்டியிடக்கூடியது.
இந்த இரு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்திப்பது இது முதல் முறையல்ல. சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன் 2003 ஆம் ஆண்டு ஜெஹன்னஸ்பேர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை அவுஸ்ரேலியா வீழ்த்தி இருந்தது.
அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறை உலகக் கிண்ணத்தை வெல்வதற்காகவே இன்று களமிறங்கவுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அந்த அணியின் ஆதிக்கம் நிகரற்றது. தவிர 2021இல் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற ஆஸி. அணி இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் உலக சம்பியன்சிப் கிண்ணத்தையும் கைற்றியது.
என்றாலும் இன்று நடைபெறும் உலகக் கிண்ணம் என்பது அவுஸ்திரேலியாவுக்கு சாதாரணமாக இருக்காது. மைதானத்தில் இந்திய அணியின் சவால் ஒரு பக்கம் இருக்க ஒரு இலட்சத்திற்கும் அதிமானோர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் அரங்கில் கூடப்போகும் இந்திய ரசிகர்களின் ஆரவாரம் அதற்கு இணையாக நெருக்கடியை கொடுக்கும்.
இந்திய அணி உலகின் வலுவான கிரிக்கெட் அணியாக உருவெடுத்தபோதும் உலக அரங்கில் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த கிண்ணத்தையும் வென்றதில்லை. அது 2013 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பின்னர் இந்தியாவின் பரிதாபம் தொடர்கிறது. இதனை சரிசெய்வதற்கான வாய்ப்பாகவே இன்றைய ஆட்டம் இருக்கப்போகிறது.
இந்தியா அணி 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்றது. 2011இல் அது சொந்த மண்ணிலேயே இலங்கை அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. என்றாலும் சொந்த ரசிகர்கள் முன் ஆடுவது வேறு எந்த அணியை விடவும் இந்தியாவுக்கு சாதகமானது என்பதோடு அதற்கு நிகராக அதிக அழுத்தத்தை தரும் ஒன்றாகவும் உள்ளது.
அதோபோன்று வேறு எந்த அணியை விடவும் எதிர்வுகூறக் கடினமான அணியாக இருக்கும் அவுஸ்திரேலியாவின் சவாலையும் அது சமாளித்தாலேயே உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும்.
அஹமதாபாத், நரேந்திர மோடி அரங்கு சுழற்பந்துக்கு சாதகமானது. இந்த ஆண்டில் அங்கு ஒருநாள் போட்டிகளில் அணி ஒன்று சராசரியாக ஓவருக்கு 5 க்கு குறைவான ஓட்டங்கள் மீதமே பெற்றிருக்கிறது. எவ்வாறாயினும், அண்மைக் காலத்தில் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் இங்கு துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை பெற்று வருகிறார். இங்கு இந்தியாவுக்கு எதிரான தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து பெற்ற 365 ஓட்டங்களுமே அதிகூடிய ஓட்டங்களாகும். எனவே, இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் ஒரு சரிசமமாக மைதானமாக இருக்கும் என்று நம்பலாம்.