காசா மீதான கடும் யுத்தம் ஐந்தாவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த யுத்தம் காரணமாக சமய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் குடியிருப்புகள், அகதி முகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பேக்கரிகள் என அனைத்தும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேல் வான், கடல் மற்றும் தரை வழிகள் ஊடாக முன்னெடுத்துவரும் இந்த யுத்தத்தினால் காஸா சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது.
இந்த யுத்தம் ஆரம்பமானது முதல் இற்றைவரை காஸாவில் 10, 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4, 300 இற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளாவர். 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலில் 1405 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 5600 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் இஸ்ரேலுக்குள் பிரவேசித்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காஸாவுக்கான தண்ணீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை தடுத்து நிறுத்திய இஸ்ரேல், வான்வழித்தாக்குதல் ஊடாக பலஸ்தீனர்கள் வாழும் காஸா மீது யுத்தத்தை ஆரம்பித்தது.
இந்நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் காஸாவின் நிலை குறித்து கடும் கவலையை வெளிப்படுத்தி உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறார். காஸா குழந்தைகளின் புதைகுழியாகியுள்ளது எனவும் அண்மையில் குறிப்பிப்பட்டுள்ளார்.
ஆனால் ஐ.நாவுக்கான இஸ்ரேல் பிரதிநிதி ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்திய காஸாவுக்கான மனிதாபிமான யுத்தநிறுத்த கோரிக்ைகயைக் கண்டித்துள்ளதோடு, அவரைப் பதவி விலகுமாறும் கோரியுள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்புக்கும் ஆட்சேபனைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இக்கொடூர யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி இஸ்ரேல் உட்பட உலகின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம், பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் உட்பட உலகின் பல நாடுகளது தலைவர்களும் அதனை வலியுறுத்திய வண்ணமுள்ளனர்.
யுனிசெப், யு.என்.டி.பி, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், உலக உணவு அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட 18 ஐ.நா நிறுவனங்கள் முதல் தடவையாக காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரியுள்ளன. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (யூ.எஸ்.எயிட்) ஆயிரம் உத்தியோகத்தர்கள் கையெழுத்திட்டு காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேநேரம் காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தத்தைக் கோரி 120 நாடுகளின் ஆதரவுடன் விஷேட தீர்மானமொன்று ஐ.நா. பொதுச்சபையில் கடந்த ஒக்டோபர் மாத இறுதிப்பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இத்தீர்மானத்தையோ ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கோரிக்கையையோ உலக நாடுகளின் வேண்டுகோள்களையோ இஸ்ரேல் கருத்தில் எடுத்ததாக இல்லை. யுத்தம் தொடர்ந்த வண்ணமுள்ளது.
தூதரக உறவு துண்டிப்பு:
இந்நிலையில் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதற்கு உலக நாடுகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் பொலிவியா முதன் முதலில் துண்டித்துக் கொண்டது. தென்னமெரிக்க நாடொன்று இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்துக் கொண்டதானது உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. பொலிவியா இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டுள்ள சூழலில் சிலி, கொலம்பியா, கொண்ட்ராஸ் போன்ற தென்னமெரிக்க நாடுகளும் பஹ்ரைன், ஜோர்தான், துருக்கி, தென்னாபிரிக்கா, சாட் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்கள் தூதுவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கான தமது தூதரக அதிகாரிகளையும் உடனடியாகத் திருப்பி அழைத்துள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, தங்களுக்குத் தேவையான பொருட்களை உலகின் பல நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் இறக்குமதி செய்து வருகின்றது. அவற்றில் காஸா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ள நாடுகளும் அடங்கும்.
குறிப்பாக 2022 இல் மாத்திரம் பொலிவியாவிலிருந்து 3.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பழங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், பலகைகள், பழங்கள் இசைக்கருவிகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களும், துருக்கியிலிருந்து 7.03 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இரும்பு, உருக்கு, பிளாஸ்ரிக் பொருட்கள், இயந்திரங்கள், எண்ணெய் வகைகள், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், சிலியிலிருந்து 113.52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மீன், பாலுற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களும், கொலம்பியாவிலிருந்து 319.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கோப்பி, தேயிலை, பாய்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், கனிய எண்ணெய், தாவரங்கள் உள்ளிட்ட பல பொருட்களும், பஹ்ரெய்னில் இருந்து 10.58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அலுமினியம் இரும்பு, உருக்கு உள்ளிட்ட பல பொருட்களும் ஜோர்தானில் இருந்து 469.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிளாஸ்ரிக், இலத்திரனியல், மரக்கறி, முட்டை, தேன் இரும்பு, உருக்கு உள்ளிட்ட பல பொருட்களும் தென்னாபிரிக்காவில் இருந்து 357.46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பழங்கள், இறப்பர், இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக் கொள்ளும் போது அதன் தாக்கத்தையும் பாதிப்பையும் இஸ்ரேலின் பொருளாதாரத்தில் உணரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு ஏனைய நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக் கொள்ளுமாயின் அந்நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இஸ்ரேலிய உற்பத்திகள் பகிஷ்கரிப்பு:
இவை இவ்வாறிருக்க, காஸா மீதான யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய உற்பத்திகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கும் பல்தேசிய நிறுவனங்களின் உற்பத்திகளும் பகிஷ்கரிக்கப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பிலான பிரசாரம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேநேரம் இந்த யுத்தம் ஆரம்பமானது முதலான ஒரு மாத காலப்பகுதிக்குள் 6200 கோடி இந்திய ரூபா பெறுமதியான செலவு ஏற்பட்டுள்ளது. அதாவது முதல் 15 நாட்களுக்கும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளதாக போர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதில் 40 வருட அனுவம் கொண்டுள்ள ஊடகவியலாளர் சோரன் சோவாக் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தின் முதல் 15 நாட்களில் 18,000 மெற்றிக் தொன் வெடிமருந்துகள் காஸா மீது பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் 120, 150, 500, 1000 கிலோ கிராம் கொண்ட வெடி குண்டுகளாகும். தினமும் 200 கோடி ரூபா பெறுமதியான குண்டுகள் வீசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் நிதியுதவி கோரியது. அதற்கு ஏற்ப நவம்பர் (2023) மாதத் தொடக்கத்தில், அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை 14.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உதவிக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேவேளை, இஸ்ரேலுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா வழங்குகிறது.
இந்த யுத்தம் காரணமாக காஸாவில் 2.2 மில்லியன் மக்களும் மேற்குகரையில் 5,00,000 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்வென 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஐ.நா. கோரியுள்ளது.
காசா மீதான யுத்தத்திற்கும் யுத்தத்தின் விளைவுகளுக்கு நிவாரணம் அளிக்கவும் இவ்வாறு பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுவது இஸ்ரேல் பொருளாதாரத்தில் மாத்திரமல்லாமல் உலகப் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும். உக்ரைன் மீதான போரின் விளைவாக தாக்கங்களை எல்லா நாடுகளும் அனுபவிக்கும் நிலையில்தான் இப்போர் ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கங்களும் பாதிப்புகளும் எல்லா மக்களையும் பாதிக்கவே செய்யும்.
சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானில் பத்தாண்டு காலம் முன்னெடுத்த யுத்தத்தின் இறுதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானதோடு சோவியத் ரஷ்யாவே 15 நாடுகளாகப் பிரிந்தது. அமெரிக்காவும் ஆப்கான் மற்றும் ஈராக் நாடுகளில் பங்குபற்றிய யுத்தங்களினால் பாரிய பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளது. காசா மீதான யுத்தத்தினால் இஸ்ரேலும் பாரிய பொருளாதார பாதிப்புகளுக்கும் வீழ்ச்சிக்கும் முகம்கொடுக்க நேரிடும். அது உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஆகவே சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான சட்டங்களையும் மதித்து செயற்படவும் ஐ.நா. வின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவும் இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று உலகின் பல நாடுகள் கோருகின்றன. யுத்தத்தைத் தவிர்த்து அமைதிவழிக்குத் திரும்புவதே ஆரோக்கியமானது. அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களின் வேண்டுகோளாகும்.
மர்லின் மரிக்கார்