நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என இரண்டு பெரும் கட்சிகளும் ஒன்றிணைந்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதே நாட்டு மக்களினதும் அரசியல் அவதானிகளினதும் தொடர்ச்சியான கருத்தாகும்.
அந்த வகையில் இரண்டு கட்சிகளும் இணைந்து மேற்கொண்ட ஒரு சிறந்த செயற்பாடு கடந்த வாரத்தில் இடம் பெற்றுள்ளது.
பாராளுமன்ற வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இது அமைந்துள்ளது.
இந்த விடயத்தில் ஒன்று சேர்ந்தது போல நாட்டின் தேசிய பிரச்சினைகளிலும் இரு தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்பதும் பலரதும் கருத்து.
பொதுவாகவே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஒரு பிரேரணையை சபையில் கொண்டு வந்தால் அதனை ஆளும் கட்சி எதிர்ப்பதும் அதேபோன்று ஆளும் கட்சி ஒரு பிரேரணையையோ அல்லது சட்டமூலத்தையோ சபையில் கொண்டு வந்தால் அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதுமே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ஆனால் அதற்கு மாறாக கடந்த வாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்காக எதிர்க்கட்சி ஒரு பிரேரணையை சபையில் முன் வைக்க, ஆளும் கட்சி அதனை வழிமொழிந்து இரு கட்சிகளும் இணைந்து பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட செயற்பாடு முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னரும் 2002ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி ரணில் பிதமராக இருந்தபோது, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அரசியலமைபின் 17ஆவது திருத்ததுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்து ஆதரவு தெரிவித்து அதனை நிறைவேற்றியிருந்தன.
தற்போது இரண்டாவது தடவையாக ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் பாராளுமன்றில் இணைந்து செயற்பட்டுள்ளன. கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றம் கருதி விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை நியமித்த போது, முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவரால் நீதிமன்றத்தில் அதற்கான இடைக்காலத் தடையைக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் அதற்கான தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்ததோடு இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிரான தடைக்கு எதிராகவே மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் அந்த பிரேரணை மீதான முழு நாள் விவாதம் நடைபெற்ற போது ஆளும் கட்சியிலும் பெரும்பாலானோர் அதற்கு ஆதரவாக கருத்துக்களை முன் வைத்தனர். விவாதத்தின் இறுதியில் இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் அந்த பிரேரணை சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை சபாநாயகர் விவாதத்தின் முடிவில் சபையில் அறிவித்தார். இந்த பிரேரணையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம்.
விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க:
கிரிக்கெட் விளையாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளது போல் தேசிய பிரச்சினைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது அவசியம். கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் யாப்பை மாற்றுவதை ஜனாதிபதி எதிர்க்கவில்லை. நான் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் றோயல் கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடும் போது நான் ஆனந்தாக் கல்லூரியின் கிரிக்கெட் அணித்தலைவராக பதவி வகித்தேன்.
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் நானும் இருந்தேன். கிரிக்கெட் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். நான் கிரிக்கெட் சபையின் துணைத் தலைவராக இருந்தபோது ஐ.சி.சிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக ஒருவர் இன்றும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
அவர்களுடன் சேர்ந்து நானும் அவர்கள் போன்று செயற்பட்டிருந்தால் சிறப்பாக பணம் சம்பாதித்திருப்பேன். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை.
கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை. அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அதுவும் விளையாட்டுத்துறை அமைச்சரின் குறைகளை கண்டு பிடிப்பதற்காக அது அமைக்கப்படவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதை ஆராய்வதற்காகவே அந்த உபகுழு நியமிக்கப்பட்டது.
கிரிக்கெட் சபையில் உள்ளவர்கள் இராஜினாமா செய்யாமல் அதை எம்மால் கலைக்கவும் முடியாது என்பதால் தான் இந்த யாப்பை மாற்ற வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி கொண்டு வந்தார்.
கிரிக்கெட் நிர்வாக சபை ஒரு மோசடிக் கூடாரம் என்பது நம் அனைவரினதும் கருத்து. எனவே இதை அகற்ற வேண்டும். அரசியல் இலக்குகளை அடைவதற்காக அல்லாமல் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக செயற்பட நம் அனைவருக்கும் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தமது நிலைப்பாட்டை முன்வைத்து சபையில் முழுமையான விளக்கமொன்றை அளித்தார். அதன் போது அவர்,
உண்மையான நோக்கத்துடனேயே தாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியதாகவும் சம்மி சில்வா வா அல்லது ரொஷான் ரணசிங்கவா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
அதேவேளை, ஊழல் மிகுந்த கிரிக்கெட் சபைக்கு அடிபணிவதா அல்லது கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்துவதா என்பதை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இலங்கையின் கிரிக்கெட் தொடர்பில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அந்த வகையில் கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. 2021 காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பலமானதாக காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரச நிதியை மோசடி செய்யவில்லை. ஆனால் அவர் தவறான சில தீர்மானங்களை எடுத்தார். அதனை நான் கடுமையாக எதிர்த்தேன். தவறை சுட்டிக்காட்டும் தற்றுணிவு எனக்குண்டு.மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக் ஷ
மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகினார். அதனை சிறந்ததொரு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் மோசடியாளர்கள் கிரிக்கெட் சபையின் வைப்பிலுள்ள நிதியை விடுவித்துக் கொள்வதில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள். வங்கியின் முகாமையாளர் இந்த விடயம் தொடர்பில் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
நிதிமோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் நாட்டில் தற்போது இல்லை. ஆனால் வைப்பிலுள்ள நிதியை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் அது தடுக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு எதிராக பயணத்தடை விதிக்க பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்பில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
குதிரை ஓடிய பின்னர் படலையை அடைப்பது பயனற்றது என்பதை சம்பந்தப்பட்டோர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த விவாதத்தில் சபையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உரையாற்றுகையில்,
கிரிக்கெட் சபை தொடர்பில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக தடை விதித்தால் அதன் பொறுப்பை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க நேரும்.
இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பதல்ல.
கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்பை உருவாக்கி அதனை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதே. இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் சபையில் பல்வேறு குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் கட்டமைப்பொன்றை யாப்பின் மூலம் அனுமதிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.