இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வருகின்ற இருதரப்பு உறவுகள் மேலும் நெருக்கமடைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்களின் அண்மைய இலங்கை விஜயம் இதற்கு சான்றுகளாக அமைந்துள்ளன.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாளி சமூகம் இங்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ‘நாம் 200’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இந்தியத் தலைவர்கள் பலரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்கு இந்தியா தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும் என்ற உறுதிமொழிக்கு அப்பால், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒருசில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன.
இருதரப்பு பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் 200’ என்ற மாநாட்டை இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்திருந்தார். இலங்கையின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் உறுதுணையாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்த நிர்மலா சீதாராமன், மலையக மக்களின் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்றவற்றுக்கான ஒத்துழைப்பை அறிவித்திருந்தார்.
இதன் ஓர் அங்கமாக மலையக மக்களுக்கென 10,000 வீடுகள் இந்திய நிதியுதவியில் கட்டிக்கொடுக்கப்படும் என்ற நற்செய்தி அங்கு அறிவிக்கப்பட்டது. மலையக மக்களைப் பொறுத்தவரையில் வீட்டு வசதி என்பது பல தசாப்தங்களாக நீடித்துவரும் பிரச்சினையாக உள்ளது. அம்மக்கள் பெருந்தோட்ட நிறுவனங்களை அண்டி இருப்பதால் வீடுகளை அமைப்பதற்குரிய சொந்தக் காணிகள் இல்லாத நிலைமையே உள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மலையக மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குடும்பமொன்றுக்கு 10 பேர்ச் காணிகளை வழங்குவதற்கு இணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க மூன்று அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்றன.
மலையக மக்கள் சமூகம் 200 வருடங்களாக தமக்கான சொந்த வீடு அல்லது காணி அற்ற நிலைமையிலேயே இன்னமும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், பெருந்தோட்டத்துறைக் கம்பனிகள் தனியார்மயப்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கத்துக்குக் காணப்படும் பிடிமானம் குறைவாக உள்ளது.
இதனால் மலையக மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களிடம் கோரிக்கை மாத்திரமே முன்வைக்க முடியும். இந்த அடிப்படையில் அந்த மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கும் வீட்டுத் தேவையில் ஒரு தொகுதியை நிவர்த்தி செய்வதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.
இதற்கும் அப்பால், மலையகப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் அபிவிருத்திக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் தோட்டப் பகுதிகளில் STEM பாடப் பயிற்றுவிப்பாளர்களை பணிக்கமர்த்துவதற்கும் இந்தியா உதவும் என நிர்மலா சீதாராமன் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உறுதியளித்திருந்தார். இந்த முன்முயற்சியானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கான விரிவான 3 பில்லியன் அமெரிக்க டொலர் பல்துறைப் பொதியின் ஒரு பகுதியாகும். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சூரியஒளி விளக்குகள், தையல் அலகுகள் மற்றும் கல்விப் பொருட்களுக்கான ஏற்பாடுகள் இதில் அடங்குகின்றன.
பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு சுடுநீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார இருதரப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவதும், பரஸ்பர நன்மை பயக்கும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதும், பல்வேறு துறைகளில் நிலையான பங்காளித்துவத்தை வளர்ப்பதும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியா அயல்நாடு என்பதற்கு அப்பால் நாடு இக்கட்டான சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையிலும் உடனடியாக உதவிக்கு வரும் உற்ற நட்புநாடாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. கொவிட் தொற்றுநோய் சூழலாக இருந்தாலும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலிரும் இந்தியாவே முதலில் உதவி செய்ய முன்வந்தது.
பொருளாதார நெருக்கடிக் காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா வழங்கிய கடன்உதவி பெரிதும் பயன்மிக்கதாக அமைந்தது. இந்த நிலையில் இவ்வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையிலும் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இதன் அங்கமாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்திருந்தார்.
அதுமாத்திரமன்றி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான செயல்திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்கள் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நிர்மலா சீதாராமன் மாத்திரமன்றி பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர் உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் பலரும் நாம் 200 நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலை இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் ‘நாம் 200’ நிகழ்வின் ஊடாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறிப்பாக இந்திய வம்சமாவளி மக்களுடனான உறவு மென்மேலும் வலுப்பெற்றுள்ளது.
பி.ஹர்ஷன்