ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கோப்பி பயிர்ச்செய்கைக்காக 1823இல் இந்தியாவின் மலைப்பாங்கான பிரதேசங்களிலிருந்து நம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மலையகத்தவர்கள். அந்நியச்செலாவணி உழைப்புக்காக அழைத்துவரப்பட்ட இவர்களை வந்தேறுகுடிகளென வர்ணிக்க முடியாது.
கோப்பிச் செய்கை கைகொடுக்காததால் 1864இல் தேயிலைச் செய்கைக்காக இம்மக்கள் பயன்படலாயினர். தேயிலையின் அடியில் தங்கம் இருப்பதாகவும் அந்நியச்செலாவணியில் அரைப்பங்கைத் தருவதாகவும் ஆசை காட்டித்தான் இம்மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த இந்தியா, மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலிருந்து இவர்கள் கொண்டுவரப்பட்டதாக வரலாறு விரிகிறது. இந்நாடுகளின், நிர்வாகங்களை கண்காணிக்கத்தானே கிழக்கிந்திய கம்பனியே நிறுவப்பட்டது. சொந்த தேசத்திலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு உழைப்புக்காக கொண்டுவரப்பட்ட இம்மக்கள், இந்த இருநூறு வருடங்களில் எதிர்கொண்டவைகளே தனியொரு தேசத்தினராக இவர்களை அடையாளப்படுத்தியுள்ளது.
இலங்கை – இந்திய காங்கிரஸ் சார்பாக 1948இல் போட்டியிட்டு, எட்டு பிரதிநிதிகளை வெல்லுமளவுக்கு இம்மக்களிடம் அரசியல் விழிப்பிருந்தது. இதன் விபரீதங்களில் விழித்தெழுந்த அன்றைய ஆட்சியாளர்கள் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையைப் பறித்தனர். அன்று நாடற்றவர்களாகியதிலிருந்து தொடங்கிய சவால்கள் இருநூறு வருடங்களாகியும் நிலைக்கின்றன.
இச்சவால்களை வெல்லும் நோக்கம் தனித்துவ அரசியலுக்கான தேவையை உணர்த்தியதாலேயே, 1977 தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒற்றுமையிருந்திருந்தால் உருப்பட்டிருக்கலாம். மூன்றுக்கும் அதிகமாக அரசியல் கட்சிகள் முளைத்ததால், திண்டாடுகிறது மலையகம். இங்கு மட்டுமல்ல எல்லா சமூகங்களிலும் இதுதான் நிலைமை. கட்சிகள் அதிகரிப்பதால் ஒன்றுபடல்கள் சிதைவடைவதை தடுக்கவே முடியாதுள்ளது.
சொத்து தேடுவதற்கு வருவதாக நினைத்த இவர்கள், செத்துப் பிழைக்கும் நிலைமைக்கு மலையக நிலை செல்லக் காரணம் என்ன? நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வந்த முதுகெலும்புகள், இன்று குனிந்து நிமிர முடியாத குடிசைகளுக்குள் வாழ நேரிட்டுள்ளது. இதை நினைத்து இருநூறு வருடங்கள் அழுதாலும் தீராது இந்தத் துயரம். கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வாழிடங்களுக்காக வாழ்நாள் முழுவதும் அழவேண்டிய சமூகத்தவராக ஆக்கப்பட்டுள்ளனர் இம்மக்கள். அலைக்கழிதல்கள், ஏமாற்றங்கள் என இவர்கள் எதிர்கொள்பவை அனைத்தும் சவால்களே.
முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து ஒரு அடியேனும் நகர முடியாதளவுக்கு முடக்கப்பட்ட சமூகம் இது. தோட்டக் கம்பனிகள், கங்காணிமார்கள், துரைமார்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என சகல அதிகாரங்களும் இவர்களின் உழைப்பை உறிஞ்சி எஞ்சியதே ஊதியமாகக் கிடைக்கிறது.
மனிதக் காலடிகளே படாத மலையின் உச்சியில் சென்று உழைப்பவர்கள் இந்தத் தொழிலாளர்கள். காடுகள், புதர்களுக்குள் பதுங்கியுள்ள கரடிகள், சிறுத்தைகள் இன்னும் கொடூர விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்குள்ளும் கடமையில் கடினம் எதிர்பார்க்கப்படுகிறது. வெயில், பனி, குளிர், மழை போன்ற இயற்கை சீதோஷ்ணங்களுக்கு மரத்துப்போன மானிடப்பிறவிகள் மலையகத்தவர்கள்.
இங்கு வந்து வருடங்கள் கடந்துள்ள இவர்களுக்கு இப்போது புது நம்பிக்கையூட்டப்படுகிறது. பத்தாயிரம் வீட்டுத்திட்டம், மலையகப் பல்கலைக்கழகம், தொழில்வாய்ப்புக்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நேரடித் தலையீடுகள் இல்லாவிடினும் உணர்வுகள் இணைந்திருப்பது அமைச்சர் சீதாராமனின் வருகையில் உணரப்படுகிறது. இதனால், இம்முறை வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இம்மக்கள் நம்புகின்றனர்.
இன்னொரு வகையில், மலையகத்தவர் மீதான இந்தியாவின் அக்கறை எதிர்காலத்தில் அழுத்தங்களாக மாறாதிருப்பது அவசியம். இந்திய கடனுதவிகளும் மலையகம் மீதான பாரதத்தின் பார்வைகளும் இந்திய, இலங்கை இராஜதந்திர உறவுகளை எந்தளவு உயர்த்துமோ?
சுஐப் எம். காசிம்-