ஒரு முறை விழுந்தால் அதனை விபத்து என்று எடுத்துக் கொள்ளலாம், அதேமாதிரி மீண்டும் விழுந்தால் அதனை விபத்து என்று வகைப்படுத்த முடியாது. உலகக் கிண்ணத்தில் இந்தியாவிடம் இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு சுருண்டதை இந்தப் புரிதலோடு தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
அதாவது இலங்கை இந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 100க்கும் குறைவான ஓட்டங்களுக்கு சுண்டது இது நான்காவது முறை. அதிலும் இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இப்படி மண்டியிட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த செப்டெம்பரில் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 50 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை மீண்டும் இந்தியாவை சந்தித்தபோதே 5 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்தியா பெரும் திறமை படைத்த அணி, அதன் பந்துவீச்சாளர்கள் அபாரமானவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் இப்படி இரண்டு தடவைகள் அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்டுகளை தாரைவார்ப்பதென்பது எந்த ரகத்தில் சேர்ப்பது என்பது புரியவில்லை.
என்றாலும் இந்த சம்பவம் இலங்கைக் கிரிக்கெட்டில் தளம்பலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரிகிறது. இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளை பதவி விலகும்படி விளையாட்டுத் துறை அமைச்சர் கேட்டிருப்பதும், அதனையொட்டி இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா பதவி விலகி இருப்பதும் இதன் நீட்ச்சியே.
இலங்கை அணியின் வீழ்ச்சியை எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது என்று குறிப்பிட்டுக் கூற முடியாது. என்றாலும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவின் ஓய்வுக்குப் பின்னரான கடந்த ஆறேழு ஆண்டு வரலாற்றை சொல்லப்போனால் கதை நீண்டு விடும்.
என்றாலும் அணித் தேர்வு தொடக்கம், வகுக்கப்பட்ட திட்டம், மூலோபாயம் எல்லாமே இந்த உலகக் கிண்ணத்தில் முற்றாக பிழைத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வழிவிடுவதாகக் கூறி கணக்கு வழக்கு இல்லாமல் மூத்த வீரர்களை ஓரங்கட்டியது.
இதனால் இன்னும் கிரிக்கெட் ஆட முடியுமாக இருந்த திசர பெரேரா போன்ற வீரர்கள் தனது 30 வயதுகளின் ஆரம்பத்திலேயே ஓய்வு பெற வேண்டி ஏற்பட்டதோடு அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டார்கள்.
அதிகம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது என்றாலும் அதனை திடுதிடுப்பென்று செய்திருப்பது உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் அட்டப்போக்கை பார்த்தால் புரிகிறது. சில ஆட்டங்களில் இலங்கை அணி நன்றாக ஆடினாலும் அனுபவக் குறைச்சல் போட்டியில் பெரும் தாக்கம் செலுத்தியது.
காயமடைந்த மதீஷ பதிரணவுக்கு பதில் அணிக்கு அழைக்கப்பட்ட மத்தியூஸின் ஆட்டத்தில் இருக்கும் முதிர்ச்சி எந்த வீரரிடமும் தெரியவில்லை. இந்தியாவிடம் 55 ஓட்டங்களுக்கு சுருண்டபோது கூட மத்தியூஸின் துடுப்பாட்டம் மற்ற வீரர்களிடம் இருந்து மாறுபட்டிருந்தது. அவர் தனது விக்கெட்டை காத்து ஆடுவதற்கு முடிந்த வரை போராடினார்.
உலகக் கிண்ணம் செல்லும் முன்னரும் உலகக் கிண்ணத்திலும் அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது என்ன மாயமோ மத்திரமோ தெரியவில்லை. ஒன்று வீரர்களை முகாமைத்துவம் செய்வதில் நிர்வாகம் தவறி இருக்க வேண்டும், இல்லையென்றால் துரதிருஷ்டம் கூட இந்த அடுத்தடுத்த காயங்களுக்குக் காரணமாக இருக்கலாம்.
அதனைத் தாண்டி அணித் தேர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பது சாதாரணமாக கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கே புரிந்திருக்கும்.
இதில் உலகக் கிண்ணத்தை அண்மித்து நடத்தப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர என்று பலரும் காயமடைந்தது நேரடியாக இலங்கை கிரிக்கெட் மீது குற்றம் சுமத்த காரணமாகிவிட்டது.
உலகக் கிண்ணத்தில் மோசமான ஆட்டத்திற்கு அணிப் பயிற்சியாளர்களிடம் இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டிருக்கிறது. என்றாலும் அது தம்மை சுயவிசாரணை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.
இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கை கிரிக்கெட் சபை மீது போர்க் கொடி தூக்கியிருக்கிறார். என்றாலும் விளையாட்டு அமைச்சரின் அதிகாரம் இலங்கை கிரிக்கெட்டில் எந்த அளவு செல்லுபடியாகும் என்பது தான் பெரும் கேள்வி.
இலங்கை விளையாட்டுச் சட்டத்தின்படி விளையாட்டு அமைச்சர் என்பவர் இலங்கை விளையாட்டுகளின் மேற்பார்வையாளராகவே இருப்பார். என்றாலும் கிரிக்கெட் என்று வரும்போது அதில் அரசியல் தலையீடுகளை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அனுமதிப்பதில்லை.
இந்த மெல்லிய கோடுகளுக்கு இடையிலேயே இப்போது மோதல் முற்றியிருக்கிறது. கடந்த காலங்களில் லங்கா பிரிமியர் லீக், கிரிக்கெட் சபை நிதியை கையாள்வது, உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் என்று ஏகப்பட்ட விவகாரங்களில் இலங்கை கிரிக்கெட்டுக்கும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் இடையே மோதல், இருந்தது இருந்து வருகிறது.
என்றாலும் இந்த சிக்கலை கவனமாகக் கையாளவிட்டால் இலங்கை கால்பந்துக்கு நிகழ்ந்த கதி கிரிக்கெட்டுக்கும் ஏற்படக்கூடும்.
ஒட்டுமொத்தத்தில் இலங்கை கிரிக்கெட் என்பது இப்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது மாத்திரம் உண்மை. மைதானத்திற்கு வெளியே ஆகட்டும் மைதானத்திற்கு உள்ளே ஆகட்டு சீர்திருத்தங்கள் அவசியப்படுகிறது.
ஆனால் அதனை எப்படி கையாள்வது என்பது தான் தீர்க்கமானது.
இலங்கைக் கிரிக்கெட் மீதான அழுத்தம் அதிகரித்தபோதும் அடிப்படையில் அதனை சட்ட ரீதியான முறையிலேயே முன்னெடுக்க வேண்டி இருக்கிறது.
மறுபுறம் இலங்கை அணியின் திறமையை குறைத்துக் கூற முடியாது. தற்போது அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் தனது இருபது வயதுகளின் நடுப்பகுதி அல்லது 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த அணி பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். அந்தப் பயணத்தை சரியாக வழி நடத்துவதே முக்கியமாகும்.