பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்தை தற்கொலையென மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சி அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பையடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பில் ஆரம்பத்தில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் துரித விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்ற காரணத்தினால் இவ்வழக்கு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற தினேஷ் ஷாப்டரின் மரணம் எத்தகையது என்பதைக் கூட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தெளிவுபடுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனித படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு பொறுப்பான விசாரணைப் பிரிவினர் ஷாப்டரின் மரணம் கொலை என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தாலும் எவரும் எதிர்பாராத வகையில் இது ஒரு தற்கொலை சம்பவமாக இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதுமட்டுமின்றி மரணத்துக்கான காரணமும் பிரேத பரிசோதனை அறிக்கையில் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே சென்றது. எனினும் இத்தகைய குழப்பகரமான சூழ்நிலைக்கு மத்தியிலும் தன்னுடைய மகனுக்கு நீதி வேண்டும் என்பதற்காக ஷாப்டரின் தந்தை சந்திரா ஷாப்டர் போராடினார். அதற்காக அவர், அனுஷ பிரேமரத்தன மற்றும் சாலிய பீரிஸ் என்ற பிரபல்யமான திறமையான சட்டத்தரணிகளின் உதவியை நாடினார். அவர்கள் ஊடாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் காணப்பட்ட வேறுபாடுகளை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அதற்கமையவே இத்தகைய குழப்பங்களுக்கு தீர்வு காணும் முகமாக ஷாப்டரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் நீதிமன்றால் மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர். பெரேரா, பேராசிரியர் டி.என்.பி. பெர்னாண்டோ, கலாநிதி சிவசுப்பிரமணியம் மற்றும் கலாநிதி ரொஹான் ருவன்புர ஆகியோர் செயற்பட்டனர்.
ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றின் நீண்ட ஆய்வுக்குப் பின்னர் பொரளை பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தினேஷ் ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25ஆம் திகதி மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் தடயவியல் ஆய்வின் நவீன முறைகளின்படி ஸ்கேன் செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த நவம்பர் முதலாம் திகதி பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்மூலம் தற்கொலையென பேசப்பட்டு வந்த தினேஷ் ஷாப்டரின் மரணம், திட்டமிட்ட மனித படுகொலையென நிரூபிக்கப்பட்டதுடன் குற்றவாளியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவும் இட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணத்தின் பின்னர் 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட மரணத்துக்கான காரணம் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் தலைகீழாக மாறியது. முதல் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டமையால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் அதே சட்ட வைத்திய அதிகாரியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கழுத்தை தானே நெரித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. மூன்றாவது தடவையாக வெளியிடப்பட்ட அறிக்கையில் உணவில் சயனைட் கலக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவினர் ஆரம்பம் முதல் இதுவொரு தற்கொலை என்ற கோணத்திலேயே சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதுமட்டுமின்றி தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலை என்ற கருத்தை சமூகத்தில் விதைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டும் வந்தனர்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த விசேட மருத்துவ குழுவில் பணியாற்றிய பேராசிரியர் அசேல மெண்டிஸ், ‘எங்களுக்கு பழைய நீதிமன்ற அறிக்கைகள் கிடைத்தன. பொலிஸாரிடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொண்டோம். எனினும் அவற்றில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன.
அதனாலேயே சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்குட்படுத்த தீர்மானித்தோம். இந்த மரணம் சயனைட் உடலில் கலந்தமையால், ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. எனினும் ஷாப்டரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இதயம் செயலிழந்துள்ளது. அதனால் அப்போது அவருக்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மை, ஒட்சிசன் அளவு என்பன பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதுதான் முதல் அறிக்கை. அதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மறுபுறம் பிரேத பரிசோதனை அறிக்கையில் இரத்தத்தில் சயனைட் இருந்ததாகவும் மற்றும் வயிற்றில் உணவு இருந்ததாகவும் கூறப்பட்டது. அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சடலத்தை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் போது வெளிப்புற காயங்களைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே, காயத்தின் சந்தேகத்துக்குரிய பகுதிகளில் திசுக்களை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். இதன்போதே காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக கழுத்து மூச்சுக்குழாயுடன் தொடர்புபட்ட திசுக்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படியே குற்றவாளி கழுத்தில் அழுத்தத்தை பிரயோகித்து இதயத்தை செயலிழக்கச் செய்திருக்கக்கூடுமென்ற தீர்மானத்துக்கு வந்தோம். உடலில் சயனைட் இருந்ததாக கூறப்பட்டாலும் அது மரணத்தை எவ்வாறு பாதித்தது என்பதைக் கண்டறிவது கடினம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு சயனைட்டை பரிசோதிப்பதில் அர்த்தமில்லை. இரத்தத்தில் சயனைட் இருந்தால், அது வாய் வழியாக உடலுக்குள் சென்றது உறுதி செய்யப்படவேண்டும். ஆனால் அது எப்படி நடந்தது என்று சொல்ல முடியாது. மற்றொன்று இரண்டு இரத்த மாதிரிகள் இருந்தன. ஆனால் தொண்டைக் குழியிலிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரியிலுள்ள அளவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் தொண்டைக் குழியிலுள்ள இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் சயனைட்டில் சரியான அளவில் விஷம் இருக்காது. ஏனெனில் இது விஷம் வயிற்றின் ஏனைய பகுதிகளுடன் கலந்து அதிகரிக்கலாம். எனவே, கால் நரம்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியே சோதனை செய்யப்பட்டது.
எனினும் ஒருவர் மரணமடையத் தேவையான அளவிலும் பார்க்கக் குறைவான அளவிலேயே அங்கு சயனைட் காணப்பட்டது. இது இயற்கை மரணமோ விபத்தோ இல்லை. தற்கொலை அல்லது கொலையாக இருக்கவே வாய்ப்பு காணப்படுகின்றது. எனினும்
தனது கழுத்தை தானே நெரித்து கொண்டு இறப்பதற்கு நடைமுறையொன்று இருக்கவேண்டும். சடலம் கண்டெடுக்கப்பட்ட போது அவ்வாறே இருந்திருக்கவேண்டும். எனினும் சாட்சியங்கள், உடலிலிருந்த காயங்களில் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. எனவே வேறொரு நபரொருவரால் கழுத்து அழுத்தமாக நெரிக்கப்பட்டுள்ளமை அறிக்கைகள் மூலம் புலப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார். எனவே குற்றவாளியை கண்டுபிடிக்கும் மிக முக்கிய பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் உள்ளது.
தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கில் பிரதான சாட்சியாளர் பொரளை பொது மயானத்தில் வேலைசெய்யும் நபர்,
தினேஷ் ஷாப்டரின் கார் அருகே உயரமான மெல்லிய தோற்றத்தையுடைய காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்திருந்த நபரொருவர் நின்றுகொண்டு மயானத்தின் பின்புறமாகவுள்ள சுடுகாட்டை நோக்கி வேகமாக நடந்து செல்வதை அவதானித்ததாகவும் மீண்டும் ஒருமுறை அவரை கண்டால் அடையாளம் காட்ட முடியுமெனவும் வாக்குமூலம் அளித்திருந்தார். எனினும் இதுவரை அந்த நபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எந்தவித விசாரணைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
அடுத்ததாக தினேஷ் ஷாப்டரின் கழுத்தில் கட்டப்பட்ட கம்பி, கைகளை கட்டியிருந்த டை போன்றவற்றில் செய்யப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் இரண்டு உயிரியல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்படியெனில் உயிரியல் மாதிரிகளும் யாருடையவை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே இவ்வளவு காலமும் தலைமறைவான குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் காட்டும் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுங்கியுள்ளது.
வசந்தா அருள்ரட்ணம்