‘ஆயிரம் ரூபா சம்பள முறைமையில் எமக்கு பிரச்சினை இல்லை, கூட்டு ஒப்பந்தத்துக்கு இப்போது என்ன அவசியம் என கேள்வி எழுப்பும் கம்பனி தரப்பு’
‘கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் பலம், பேரம் பேசும் திறன், தரவுகளையும், புள்ளி விவரங்களையும் அடுக்கி வாதத்தை எதிர்வாதத்தால் வெல்லும் வல்லமை மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டும் புத்திரசிகாமணி’
மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பிரதான பிரச்சினை, அவர்களின் தினசரி சம்பள அல்லது கொடுப்பனவு எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், ஐம்பது, அறுபதுகளில் இருந்து அப்படிக் கருதவே நாம் பழக்கப்பட்டு வந்துள்ளோம். அக் காலத்தில் சிறிய சிறிய வேதன அதிகரிப்புகளுக்காக பெரிய பெரிய போராட்டங்களை அன்றைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் நடத்தி வந்துள்ளன. எண்பதுகளில் பிரார்த்தனை இயக்கமாகவும் தொண்ணூறுகளில் மல்லியப்பூ சந்தி சத்தியாக்கிரக போராட்டமாகவும் இச் சம்பள போராட்டங்கள் வடிவெடுத்திருந்தன.
பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்பள சபையிடமிருந்த சம்பள அதிகரிப்பு அதிகாரம், சௌமியமூர்த்தி தொண்டமானின் யோசனையின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்திடம் வந்தது.
சம்பள நிர்ணய சபையில் தோட்ட உரிமையாளர் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பின் மத்தியில் சம்பள நிர்ணயம். வாழ்க்கைச் செலவு புள்ளி பற்றி பேச்சுவார்த்தைகள் நிகழும். பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாவிட்டால் வாக்கெடுப்புக்கு விடப்படும். அரசு உறுப்பினர்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ அத் தரப்பு வெற்றி பெறுவதே வழமை. அவ்வாறுதான் ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதை எதிர்த்து கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சங்கத் தரப்புக்கு சாதகமாக வரவே, தற்போதைய ஆயிரம் ரூபா சம்பளத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு முன்னர் சம்பள நிர்ணய சபை 1992ஆம் ஆண்டு கூடியது. அதில் புத்திரசிகாமணி, அஸீஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் நடேசன், பதுளை சுப்பையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அப்பேச்சுவார்தையில் நான்கு சதவீதமாக இருந்த வாழ்க்கைச் செலவு படியை ஆறு புள்ளியாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தனவின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ரத்னகாரவிடம் இதுபற்றி பேசப்பட்டதாகக் கூறும் புத்திரசிகாமணி, அரச தரப்பு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும் என ரத்னகார உறுதி அளித்ததன் பேரில் ஆறு சதவீத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்.
ஆனால் ஏதோ காரணத்தால் சௌமியமூர்த்தி தொண்டமான் சம்பள நிர்ணய சபை முறையில் இருந்து விலகி கூட்டு ஒப்பந்த முறைக்குச் செல்ல விரும்பினார் என்று தகவல் தெரிவித்தார் முன்னாள் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, சம்பள நிர்ணய சபை தொடர்ந்தும் பின்பற்றப்பட்டிருக்குமானால் நாம் ஆயிரம் ரூபா இலக்கை எப்போதோ அடைந்திருப்போம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
சம்பள நிர்ணய சபை அல்லது கூட்டு ஒப்பந்தம் என்ற இரண்டில் எது தொழிலாளருக்கு சிறந்தது என்ற கேள்வியை எழுப்பினால், சம்பள நிர்ணய சபை என்பது அரசு வகுத்துள்ள முறை என்றும் பேச்சுவார்த்தை சாத்தியப்படவில்லை என்றால் வாக்கெடுப்புக்கு சென்று வெற்றிபெறும் வாய்ப்பு அதில் இருந்தது என்று குறிப்பிடும் புத்திரசிகாமணி, கம்பனிகளுடன் அமர்ந்து பேரம் பேசி, பேச்சுவார்த்தை மூலம் சம்பள உயர்வு மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர கூட்டு ஒப்பந்தம் வழி செய்கிறது என்று வித்தியாசத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.
கூட்டு ஒப்பந்தம் என்பது சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு உடன்படிக்கை முறை. இரு தரப்பினரும் பிரச்சினைகளை நேரடியாக விவாதித்து முடிவுக்கு வரக் கூடிய தளம். ஆனால் தொழிலாளர் தரப்பில் அமர்ந்து பேசுவோருக்கு அரசியல் பலம் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல. தொழிலாளர் சக்தி என்ற பலம் மிகவும் முக்கியம். அரசியல் பலம் என்பது தற்காலிகமானது. இந்த இரண்டு பலமும் ஒருசேர அமைந்திருந்ததால் சௌமியமூர்த்தி தொண்டமானால் சாதிக்க முடிந்தது.
ஆனால் இப்போது தொழிலாளர் பலம் என்பது சிதறிய நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஏனெனில். கூட்டு ஒப்பந்த மேசையில் தொழிற்சங்கங்கள் அமரும் போது கம்பனி தரப்பு வாதங்களை முறியடிக்கும் வகையிலான தரவுகளையும் புள்ளி விவரங்களையும் முன்வைத்து வாதாடும் திறன் என்பனவற்றில் அவை எவ்வளவு பலவீனமானவை என்பதை கம்பனி தரப்பு நன்றாகவே எடைபோட்டு வைத்திருக்கும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே தொழிற்சங்கத் தரப்பு சக்தி மிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.
சட்டத்தரணியும் தொழிற்சங்கவாதியுமான தம்பையாவை அணுகி, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, சம்பள நிர்ணய சபை தொழிலாளர் சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதில் சட்டரீதியாக பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதால் மீண்டும் கூட்டு ஒப்பந்த முறைக்கு செல்வதன் மூலம் அதைத் தீர்க்கலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறாரே அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, கூட்டு ஒப்பந்தம் தான் சிறந்த வழிமுறை, அது ஒரு விரிவான தளம் என்று கூறினார். தான் இப்போது தமிழகத்தில் இருப்பதாகவும் திரும்பி வந்து பேசுவதாகவும் சொன்னார்.
சம்பள உயர்வு மட்டுமல்ல, தொழிலாளர் சமூகத்தின் ஏனைய நலன்கள் தொடர்பாகவும் விவாதிக்கக் கூடிய ஒரு தளமாக கூட்டு ஒப்பந்தம் அமையும் என தொழிற்சங்கத் தரப்பு கருதுகிறது.
கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, பெருந்தோட்டத் தொழிலாளர் எதிர்கொண்டுள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் பெருந்தோட்ட கம்பனி தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஒப்படைத்திருப்பதாகவும் கூறினார். அரசுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பில் கரிசனை ஏற்பட்டிருப்பதற்கு தொழிற்சங்க அழுத்தமோ, தேர்தல் அரசியலோ அல்லது உண்மையான கரிசனையோ எதுவானாலும் காரணமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இந்த வாய்ப்பை அடுத்த கட்டத்துக்கு சங்கங்கள் நகர்த்திச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
அமைச்சர் நாணயக்காரவின் இக்கூற்று தொடர்பாக கம்பனி தரப்பின் பேச்சாளரும் பெருந்தோட்ட விவகாரங்களின் நிறைந்த அறிவும் கொண்டவருமான ரொஷான் ராஜதுரையிடம் பேசினோம்.
தமக்கு இது தொடர்பாக அதிகாரபூர்வமான எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று தன் பேச்சை ஆரம்பித்த அவர், ஏன் எல்லாம் நல்லபடியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது, ஏன் திரும்பவும் கூட்டு ஒப்பந்தம்? என்று கேள்வி எழுப்பினார்.
ஆயிரம் ரூபா தினசரி சம்பளம் ஒழுங்காக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் சிறு தோட்டங்களில் 25 கிலோ எடுத்தால்தான் ஆயிரம் ரூபா வேதனம். கம்பனி தோட்டங்களில் 18 கிலோதான் எடுக்க வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, 16 கிலோ எடுத்தாலும் ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது என்பது? கொழுந்து விளைச்சல் குறைவாக இருக்கும்போது அதிக கிலோ எடுக்க முடியாதுதானே! இது போக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வரும் நலன்களும், உரிமைகளும், சலுகைகளும் அப்படியே தான் நடைமுறையில் உள்ளன.
இன்றைய அயிரம் ரூபா வேதனம் தேயிலை கைத்தொழில்துறைக்கு பொதுவானது. இத்துறையில் பெருந்தோட்டங்கள் 25 சதவீதமே. மிகுதி 75 சதவீதம் சிறுதோட்டத்துறை சார்ந்தது. இந்த அடிப்படையில், 25 சதவீதமான பெருந்தோட்டக் கம்பனிகளை கூட்டு ஒப்பந்தத்துக்குள் கொண்டு வருவது நியாயம் அல்ல. மேலும் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கான எமது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உலக அளவில் தேயிலை விலையில் சரிவு காணப்படுகிறது.
சர்வதேச மட்டத்தில் புதிய போட்டியாளர்களுடன் நாம் போட்டியிட்டாக வேண்டும். இந்தப் பின்னணியில் மீண்டுமொரு சம்பள உயர்வு எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்புகிறார் ரொஷான் ராஜதுரை. அவர் மேலும் வாதங்களை முன்வைக்கிறார்.
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. நஷ்டம் காரணமாக அரச நிறுவனங்களே மூடப்படுகின்றன. அங்கெல்லாம் தொழில் பார்த்தவர்களின் நிலை என்ன? கொரோனா காலத்திலும் சரி, நெருக்கடியிலும் சரி நாம் தோட்டங்களை மூடவும் இல்லை, தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுக்கவும் இல்லை. சிரமங்கள் இருந்தாலும் தோட்டங்களை நடத்தவே செய்கிறோம். சம்பள சபைகளை எடுத்துக் கொண்டால் எத்தனையோ துறைகளுக்கு எத்தனையோ சம்பள சபைகள் உள்ளன. அவை அவ்வப்போது கூடி புதிய வேதன அளவை நிர்ணயம் செய்வதில்லை. பெருந்தோட்டத்துறையில் மாத்திரம் அவ்வப்போது புதிய சம்பளம் நிர்ணயம் செய்யப்படுவது என்ன நியாயம்?
தற்போதைய ஆயிரம் ரூபா சம்பளத்தில் கம்பனி தரப்புக்கு பிரச்சினை கிடையாது. புதிய ஒப்பந்தத்துக்கு அவசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்று தமது பக்க நியாயங்களை வரிசைப்படுத்தியவரிடம், தினசரி வேதனமாக 2,500 ரூபா கேட்கிறார்களே! என்று கூறியதும், அது நடைமுறை சாத்தியமற்றது என்று நிராகரித்து விட்டார்.
இரண்டாயிரத்து 500 ரூபா என்பது மிகைப்படுத்தப்பட்ட அளவாக இருக்கலாம். ஆனால் ஆயிரம் ரூபா என்பது போதுமானது அல்ல என்பது உண்மையே. மேலும் 500 ரூபா அதிகரிப்பு வழங்கப்படுமானால் இன்று தாறுமாறாக எகிறிக் கிடக்கும் வாழ்க்கைச் செலவை ஓரளவுக்கு சந்திக்கும் சக்தியை தொழிலாளர்களுக்கு அது அளிக்கும். இதை கூட்டு ஒப்பந்தம் பெற்றுத்தருமா என்ற கேள்வியும் உள்ளது.
தற்போது கூட்டு ஒப்பந்த முறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக அரசாங்கம் ஒரு விஷயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறது. மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு திரும்புவதில் தொழிற்சங்கத் தரப்பில் பொதுவான ஒரு விருப்பம் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அதே சமயம், ரொஷான் ராஜதுரையின் கூற்றின் பிரகாரம் கம்பனி தரப்புக்கு இதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. சம்பள நிர்ணய சபை முறைமையே போதுமானது எனக் கருதுகிறது. ஆனால், உயர் நீதிமன்றம் வரைச் சென்று அங்கு கிடைத்த தீர்ப்பின் பின்னரேயே ஆயிரம் ரூபாவுக்கு கம்பனி தரப்பு இணங்கியது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இன்றைய ஆயிரம் ரூபாவில் இருந்து எத்தனை ரூபாவினால் வேதனத்தை அதிகரிப்பது என்ற ‘தலைவலி’யை கம்பனி தரப்புக்கு அளிக்கக் கூடிய கூட்டு ஒப்பந்த முறைமைக்கு கம்பனிகளை இணங்க வைக்க வேண்டிய பொறுப்பு தற்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் மேல் விழுந்திருக்கிறது.
அருள் சத்தியநாதன்